‘இவர்களுக்குச் சிரிக்கவே தெரியாதோ?’ எனப் பெரும்பாலும் நாம் எண்ணும் வகையில்தான் நமது மனங்களில் நீதிபதிகளைப் பற்றிய பொது பிம்பம் இருக்கும். ஆனால் அது உண்மையல்ல. மற்ற எவரையும் போலவே நீதிபதிகளும் மனிதர்கள்தான். உள்ளார்ந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள். ஆனால், அதனை நீதிமன்ற அமர்வுகளின்போது அவர்களது முகங்கள் பெரும்பாலும் வெளிக்காட்டாதவாறுதான் அவர்கள் இருக்கிறார்கள். நடைமுறைகளால் சலிப்பூட்டக்கூடிய நீதிமன்ற அறைகளின் சூழ்நிலையை வெப்பமாக்கும் வகையில் நீதிபதிகளுக்கும் (பெஞ்சுக்கும்) வழக்குரைஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்; இறுக்கமான சூழல்கள் உருவாகலாம்; அதேவேளையில் கொதிநிலைகளைத் தணித்துக் குளிர்விக்கும் வகையில் நீதிமன்றங்களில், அதன் நடவடிக்கைகளில் அவ்வப்போது நகைச்சுவை பீரிட்டு நிரம்பி - நரம்பும் தசையுமான நம்மைப் போன்றே - மனிதாம்சம் நிறைந்த நீதிபதிகள், வழக்குரைஞர்கள் நிறைந்துள்ள இடங்களாகவே நீதிமன்றங்கள் இருப்பதை நமக்கு உணர்த்துகின்றன.
நீதிமன்றங்கள் பற்றிய ஒரு சாதாரண மனிதனின் மனத்திரையில் காட்சியாகும் வழக்குரைஞர்களின் வாதப் பிரதிவாதங்கள், மந்தமான சூழல், ஏகபோகமான ஒரு தீவிரத்தன்மை ஆகியவற்றைக் கடந்த தளர்வான தருணங்களையும் கொண்டதாக இருக்கும் நமது நீதிமன்ற நடவடிக்கைகளில் காணப்பட்ட சில நிகழ்வுகளும் கருத்துகளும் இங்கே...
தொடக்கமாக, லார்ட் ப்ரூஹாம் (Lord Brougham) ‘ஒரு வழக்குரைஞர் என்பவர் யார்?’ என்பதை எவ்வாறு வரையறுத்தார் என்பதை அறிந்து மேற்செல்வோம். “வழக்குரைஞர் என்பவர் உங்கள் எதிரிகளிடமிருந்து உங்கள் சொத்துகளை மீட்டு அதைத் தனக்கென வைத்துக்கொள்ளும் ஒரு கற்றறிந்த மனிதர்" என்பது லார்ட் ப்ரூஹாம் கூற்றாகும்.
இந்தக் கூற்றை எதிரொலிப்பது போன்றே இந்திய அட்டர்னி ஜெனரலாக இருந்த ஜி. இராமசாமி (ஜி.ஆர்.) உச்ச நீதிமன்றத்தில் தன்னைத்தானே கேலி செய்துகொண்ட நிகழ்வொன்று அறியப்பட்டுள்ளது. ஜி. ஆர். நீதிமன்ற நகைச்சுவைக்குப் பெயர் பெற்றவர். மூத்த வழக்குரைஞரான அவரது நகைச்சுவை வெளிப்பாடுகள் யாரையும் புண்படுத்தாத கண்ணியத்துடன், நீதிமன்ற மாண்புகளுக்கு எவ்விதக் குறைபாடும் ஏற்பட்டுவிடாத கவனத்துடன், நீதிபதிகளும் இயல்பாகப் பங்கேற்கும் வகையான மேன்மையிலும் இருக்கும் என மதிக்கப்பட்டன.
ஒருமுறை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.என். வெங்கடாசலய்யா முன் ஒரு வழக்கில், அவர் தனது கட்சிக்காரரான ஒரு பெருந்தொழில் நிறுவனத்திற்காக வழக்குரைத்தார். அந்த நிறுவனம் லட்சக்கணக்கிலான மின்சாரக் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தத் தவறியதால் நிரந்தரமாக மின்சாரம் துண்டிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது. அவ்வாறு நிகழ்ந்தால், ஏற்கெனவே இழப்பிலுள்ள நிறுவனம் எந்த உற்பத்தியும் செய்ய முடியாமல் முழுவதும் நசிந்துவிடும். நீதிபதியிடம் இறைஞ்சுவதுபோல, ஜி.ஆர்., “மை லார்ட், எனது கட்சிக்காரர் மிகவும் ஏழையாகிப் பெரும் கஷ்டத்தில் இருக்கிறார். ஆகவே, நிறுவனத்திற்கான மின் இணைப்பைத் துண்டிப்பதிலிருந்து தயைகாட்டிக் காப்பாற்றி ஆணையிடுங்கள்” என வேண்டினார்.
நீதிபதியோ மின்வாரியத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த தொழிற்சாலையின் வருமான அறிக்கையைக் கூர்ந்து படித்திருப்பார் போலும். அவர் ஜி.ஆரைப் பார்த்து, “உங்கள் கட்சிக்காரரை நீங்கள் ஏழை என்கிறீர்கள். ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக, அவர்களது வருமான அறிக்கை பக்கம் 63 இல் உள்ள இருப்பு நிலைக் குறிப்பைப் பாருங்கள், மிஸ்டர் இராமசாமி, உங்கள் வாடிக்கையாளரின் வருவாய் மூன்று ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே இருந்திருக்கிறதே!” எனக் குறுக்கிட்டார்.
நொடியும் தாமதிக்காமல், “மை லார்ட், ஆம், அது எனக்குத் தெரியும்; ஆனால், அது அத்தொழில் நிறுவனம் என்னை அவர்களது தரப்பு வழக்குரைஞராக நியமித்துக்கொண்டதற்கு முன்பு இருந்த நிதி நிலவரம், மைலார்ட்” என்று அமைதியாகப் பதில் சொன்னார் (ஜி.ஆர். சாதாரணமாகத் தனியார் வழக்குகளில் ஆஜராகப் பெறும் தொகை அதிகம் என்பது அறியப்பட்டிருந்த செய்தியே. ஆனாலும், தன்னையே கேலி செய்து அவரளித்த பதிலுக்கு நல்ல விளைவு நிகழ்ந்தது!) ஜி.ஆரின் நகைச்சுவையை ரசித்த நீதிபதி, அத்தொழில் நிறுவனம் தவணையில் மின்கட்டணம் செலுத்தவும், மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாதென்றும் ஆணை வழங்கினார்.
அட்டர்னி ஜெனரலாக ஜி.ஆர். இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு நிகழ்வு அவசியம் குறிப்பிட உரியது. அவர் ஆஜரான வழக்கில், அந்த பெஞ்சில் இரண்டு மூத்த, வலிமையான நீதிபதிகள் இருந்தனர், அவர்களில் ஒருவர் சுற்றுச்சூழல் குறித்த தனது தீவிர நிலைப்பாட்டிற்காக ‘பசுமை நீதிபதி’ என்று அறியப்பட்டிருந்தவர். விசாரணையின்போது, ஏதோ காரணத்தால் சற்று எரிச்சலான மனநிலையிலிருந்த நீதிபதி குல்தீப் சிங், ஜி.ஆரிடம், "நாங்கள் முட்டாள்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். ஜி.ஆர். மிகவும் பணிவாக, "மை லார்ட்ஸ், எனக்கு மிகக் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளீர்கள். தங்களது கேள்விக்குப் பதிலாக, நான் “ஆம்” என ஒப்புக்கொண்டால் நான் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகிறேன்; ‘’இல்லை” எனக் கூறி, நான் உடன்படாதிருந்தால், நான் நீதிமன்றத்திலேயே பொய் கூறியதாகிவிடுமே” என்றாராம். இது நீதிபதிகளை வாய்விட்டுச் சிரிக்க வைத்த நகைநுட்பம் ஜி.ஆர். வெளிப்படுத்தியது.
ஜி.ஆரை போலவே, பம்பாய் மாநிலத் தலைமை வழக்குரைஞராகவும் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்றிய புகழ்பெற்ற வழக்குரைஞர் சி.கே. டாப்தரி (சி.கே) நீதிமன்ற நகைச்சுவைக்காக அதிகம் அறியப்பட்டவர். அவர் பம்பாய் மாநிலத்தின் தலைமை வழக்குரைஞராக இருந்தபோது, பம்பாய் மது தடைச் சட்டம் இயற்றப்பட்டு, மாநிலத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டது. சி.கே. ஒரு ‘பான’ ரசிகராக அறியப்பட்டவர்; "பப் (Pub) இல்லாத குடியரசு வெறும் ஒரு நினைவுச் சின்னம்தான் (relic)!" என்று அவர் கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு. இருப்பினும், பம்பாய் தடைச் சட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மையைச் சவால் செய்யும் வழக்கு தொடரப்பட்டபோது, அவர், மாநிலத் தலைமை வழக்குரைஞராக மிகத் திறமையாகச் சட்டத்தை ஆதரித்து வாதாடினார்.
விசாரணையின்போது நீதிபதி சாக்லா, சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட மதுபானங்களின் பட்டியலை (வேண்டுமென்றே, நகைச்சுவையாக) அவரிடம் வினவினார். டாப்தரி பல பானங்களின் பெயர்களையும் (நன்கு அறிந்திருந்ததால்) மளமளவென ஒரே மூச்சில் பட்டியலிட்டு, பின்னர் கண்களில் ஒரு குறும்பு மின்னக் கூறினார், "மை லார்ட், அனைத்து போதைப் பொருள்களுமே திரவமானவை அல்ல, இந்தப் பட்டியலில், பாட்டிலில் இல்லாத ஒரு போதைப்பொருள் உள்ளது, அது “அதிகாரம் (Power)!" என்றார், சி.கே. சிரித்துக்கொண்டே.
பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஹிதாயதுல்லா நியமிக்கப்பட்டபோது, அவரது சக நீதிபதிகள் சி.கே. டாப்தரியைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு வேடிக்கையாக எச்சரித்திருந்தனர், போக்குவரத்து அனுமதிகள் தொடர்பான ஒரு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது. எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் தலைமை நீதிபதி ஹிதாயதுல்லா, "நகரப் பேருந்துகள் தற்போது எதிர்க்கப்படும் இந்தப் போக்குவரத்து அனுமதிகளில்தான் இயங்குகின்றன என்று நான் நம்புகிறேன், மிஸ்டர் டாப்தரி..." என்று கூறினார். ஒப்பற்ற நகைச்சுவைப் பதில்களுக்குப் பெயர் பெற்றிருந்த சி.கே. வழக்கம்போல, மறுநொடியே, “மை லார்ட், பேருந்துகள் எரிபொருளில் இயங்குகின்றன என்ற எண்ணத்தில் நான் இதுவரை இருந்தேன்; மைலார்ட், நான் உங்களுக்குத் தலைவணங்குகிறேன்" எனப் பணிவுடன் பதிலளித்தாராம்!
பின்னர், உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்ட நீதிபதி ஹிதாயதுல்லா (பின்னர் இந்தியத் தலைமை நீதிபதியாகவும், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும், ஒரு முறை தாற்காலிகத் தலைவராகவும் இருந்தார்) முன் ஒரு வழக்கில் வாதிடும்போது, நீதிபதி, “ஆனால் மிஸ்டர் சி.கே. டாப்தரி, நான் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, தாங்கள் வலியுறுத்தும் நிலைப்பாட்டிற்கு எதிரான, முரண்பாடான கருத்தில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளேனே“ என்று சொன்ன மறுநொடியே, சி.கே. “மைலார்ட், தாங்கள் வருந்தி மனம் திருந்த அருமையான வாய்ப்பு இது” என்று சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு பதிலளித்தார் என்பது அறியப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி பி.கே. மிஸ்ரா அமர்வில் ஒரு வழக்குரைஞர் முடிவில்லாமல் வாதங்களை அடுக்கிக்கொண்டே போகும்போது சற்று பொறுமையிழந்த நீதிபதி,“ “முடிவு நெருங்கிவிட்டதா?” என்று வினவினார்.
"ஐ வில் ஃபினிஷ் மைலார்ட்” என்றார் வழக்குரைஞர்.
நீதிபதி மிஸ்ரா பதறுவதுபோல, “ஐயோ, என்னை முடிக்க வேண்டாம், உங்கள் வாதங்களை முடியுங்கள்” எனக் கேலி செய்தார்.
இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன் வழக்குரைஞர் தனது கட்சிக்காரருக்குப் பிணை (ஜாமீன்) வழங்குமாறு பல வகைகளில் வற்புறுத்தி வாதாடிக் கொண்டிருந்தார். அன்று ஜன்மாஷ்டமி நாள். தலைமை நீதிபதி நகைச்சுவையாக “இன்று கிருஷ்ணர் சிறையில் பிறந்தார், நீங்கள் அதை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா? " என்று கேட்டார்.
வழக்குரைஞர் தனது தரப்பை – பிணை வழங்க விடாது வலியுறுத்தியதால், நீதிபதி "நல்லது, நீங்கள் எந்த மதத்திலும் தீவிர பற்றுக் கொள்ளவில்லை போல. ஜாமீன் வழங்கப்பட்டது" என்று ஆணையிட்டார்.
இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சர் லியோனல் லீச் தலைமையிலான பெஞ்ச் முன் நடந்த ஒரு வழக்கு. வழக்குரைஞரின் கடும் வாதத்திற்கு இடையூறாக வெளியில் ஒரு கழுதை கத்தியது. இந்த குறுக்கீட்டைப் பார்த்து சர் லியோனல் லீச், நகைச்சுவையாக, "ஜென்டில்மேன், ஒரு நேரத்தில் ஒருவர்" (Gentleman, one at a time) என்று குரலை உயர்த்தினார். வாதப் பிரதிவாதங்கள் முடிந்த பின்னர், சர் லியோனல் லீச் தான் தீர்ப்பை வாசித்து வழங்கிக் கொண்டிருந்தார். தற்செயலாக அப்போதும் வெளியில் கழுதை கத்தும் சத்தம் கேட்டது, வழக்குரைஞர், இது தனது முறை என முடிவு செய்து, எழுந்து நின்று,“ மை லார்ட், தங்கள் வார்த்தைகளை மீண்டும் சொல்ல முடியுமா, ஏனெனில், தங்கள் குரல் எதிரொலித்ததால் சரியாகத் தெளிவாகக் கேட்கவில்லை" என்று பணிவாகக் குறிப்பிட்டார். ஆங்கிலேய நீதிபதிக்கு இந்திய வழக்குரைஞர் பதிலடி! (“யாரைக் கழுதையென்றாய்?”).
இதுவும் ஒரு சென்னை உயர்நீதிமன்ற நிகழ்வு. நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் ஒரு தீவிரமான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, வழக்கு தொடர்ந்திருந்த வாதி, பெஞ்சை ஓசைவர அசைத்து இழுத்துக்கொண்டு ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார். தொந்தரவடைந்த நீதிபதி, வாதியின் வழக்குரைஞரிடம் “தங்கள் கட்சிக்காரரின் பிரச்னை என்ன?” என்று கேட்டார். வழக்குரைஞர், பின்னால் திரும்பித் தனது கட்சிக்காரரிடம் விசாரித்த பிறகு, “மன்னியுங்கள் மை லார்ட், என் கட்சிக்காரர் தனது விலையுயர்ந்த ஒரு ஜாக்கெட்டைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார்” என்றார். அதற்கு, நீதிபதி உடனே, “உங்கள் கட்சிக்காரர் தனது ஜாக்கெட்டை மட்டுமே தொலைத்துவிட்டார்; அவரிடம் சொல்லுங்கள், இங்கே பலர் தங்கள் ‘சூட்’களையே (Suit) தொலைத்துள்ளார்கள் என்பதை. (Suit = வழக்கு!) இன்னும் சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லுங்கள். அவர் இறுதியாக எதைத் தொலைத்தார் என்றறிந்து கொள்ள" என்று நீதிபதி மேலும் கூறினாராம். எப்படியிருந்திருக்கும் வாதிக்கும் அவரது வழக்குரைஞருக்கும்?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே (1923 ஆம் ஆண்டில்) இந்திய நீதிமன்றங்களில் ‘வழக்கு நிலுவை’ அதிகரித்து வருவது உணரப்பட்டது. நிலுவையைக் குறைக்க ஏதாவது வழிகள் இருக்கிறதா என்று ஆராய்ந்து அறிய அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், நீதிபதி ஜஸ்டிஸ் ஸ்டண்ட் ‘’நீதிமன்றத்தின் துடைப்பம் (broom) போல் செயல்பட்டு நிலுவைகளை விரைந்து கழித்தொதுக்கி வெளியே தள்ளிவிடலாம்; நான் முயற்சிக்கிறேன்.” என்று உறுதியளித்தார். மாதங்கள் உருண்டோடின, ஆனால் வழக்கு நிலுவை இருந்த இடத்திலேயே இருந்தது.
ஒரு நாள், தலைமை நீதிபதியாக இருந்த சர் கிரிம்வுட் மியர்ஸ், சகநீதிபதியான ஸ்டண்ட்டிடம், ‘’சகோதரரே, நீங்கள் உங்கள் துடைப்பத்தைத் தொலைத்து விட்டீர்கள் என நான் நினைக்கிறேன்’’ என்றார். உடனடியாக நீதிபதி ஸ்டண்ட்டின் பதில் வந்தது. ‘’தலைமை நீதிபதி அவர்களே, துடைப்பம் தொலைந்து போகவில்லை; அது மெலிந்து அழுக்காகிவிட்டது, அதற்குப் பதிலாக புதிய துடைப்பம் ஒன்றை விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்” என முன்மொழிகிறேன் என்றாராம். (புதிய ‘துடைப்பம்’ உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதா? நீதிபதி ஸ்டண்ட் மாற்றப்பட்டாரா? என்ற தகவல்கள் அறியக் கிடைக்கவில்லை!).
இதுவும் கொஞ்சம் பழையது. சுதந்திரப் போராட்ட வீரர், வழக்குரைஞர் பண்டிட் மோதிலால் நேருவால், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஓர் உயர் ராணுவ அதிகாரி குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். நீதிமன்றத்தால் பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும், அந்த ராணுவ அதிகாரி, “கேள்விகள் பொருத்தமற்றவை அல்லது தேவையற்றவை” என்று கூறித் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்தார்; பதிலளிக்க மறுத்தார். பொறுமையிழந்த பண்டிட் மோதிலால் நேருவிடம் இறுதியாக, "என்னை முட்டாள் என்று நினைக்கிறீர்களா" என்று அந்த அதிகாரி கேட்டார். பண்டிட் மோதிலால் நேரு உடனடியாக "சர்வ நிச்சயமாக இல்லை" என்று பதிலளித்தார், பின்னர் அமைதியாக, "ஆனால், எனது கருத்து தவறாகவும் இருக்கலாம்" என்று கூறினார்.
இதுவும் அலாகாபாத் வழக்குதான். வழக்குரைஞர், சர் சார்லஸ் ஒருமுறை குற்றவியல் சட்டத் திருத்தத்தை அனுமதிப்பதற்காக வாதிட்டார். பொறுமையாக அவரது வாதத்தைக் கேட்ட பிறகு, நீதிபதி, "உங்கள் வழக்கில் (சரக்கு) எதுவும் இல்லையே" என்று குறிப்பிட்டார், அதற்கு சர் சார்லஸ் உடனடியாக, "எதுவும் இல்லை என்று எனக்கும் தெரியும், மை லார்ட்" என்று பதிலளித்தார். நீதிபதி, "அப்படியானால் எதற்கு நீங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்தீர்கள்?" என்று வழக்குரைஞரைக் கேட்டார். சர் சார்லஸின் உடனடிப் பதிலாக, "ஏனென்றால், மை லார்ட், கட்சிக்காரர் என்னுடைய கருத்தை எங்கே கேட்கிறார்; மை லார்ட், அவர் தங்கள் கருத்தைக் கேட்கவே விரும்பினார். அதனால்தான்....” என்றார். நீதிமன்றம் ஒளிர்ந்தது சிரிக்கத் திறந்த பலர் இதழ்களால்.
நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் மட்டுந்தானா நீதிமன்றங்களில் நகைச்சுவை ஒளிரச் செய்கிறார்கள்? நமது சட்ட, நீதியமைப்பு முறைகள், வாய்தாக்கள், வழக்கு நிலுவைகள் முதலியவற்றால் நொந்து நூடுல்ஸாகி நசியும் வழக்காடிகளுக்கும் நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தே இருக்கிறது. விரும்பாத துணையோடும் தொடர்ந்து வாழ்வது போல பலர் சட்டத்தின், வழக்குகளின் பிடியிலிருந்து உடனடியாக விலகுவதாகவே இல்லை. “கீழ் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்று ஒரு கை பார்த்துவிடுகிறேன்” என்று பலரும் வரிந்துகட்டிக்கொண்டு கிளம்புவதாலேயே எண்ணற்ற வழக்குகள் குவிகின்றன, உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும்.
இதோ நிறைவாக: சாதமான தீர்ப்பு வரவே வராது என நினைத்துக்கொண்டிருந்த ஒரு வழக்கில், எப்படியோ, எதிர்பாராமல் சாதகமான தீர்ப்புக் கிடைத்துவிட்டது. சீனியருக்குப் பதிலாகத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் ஆஜராகியிருந்த இளம் வழக்குரைஞர் துள்ளிக் குதித்து அருகே நின்றுகொண்டிருந்த தமது கட்சிக்காரரிடம் “நீதி வென்றது; நீதி வென்றது” என்று உற்சாகமாகக் கூறிக்கொண்டே கைகுலுக்கினார். வாதியோ,” அப்படியானால், சீனியரிடம் சொல்லி, மேல் கோர்ட்டில் உடனடியாக அப்பீலுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்” என்றாராம், அமைதியாக.
கைக்கொண்டவை:
· ‘லா அன்ட் லாஃப்டர்’, ஜார்ஜ் ஏ. மார்ட்டன், டி. மெக்லோ மெல்லா. http://www.archive.org/details/cu31924021685775,1879
· ‘ஹ்யூமர் எமங் த லாயர்ஸ்,’ ஜான் ஏ (John Aye) 1931
· தி லிட்டில், பிரவுன் புக் ஆஃப் அனெக்டோட்ஸ், கிளிஃப்டன், ஃபாடிமன்1985
· ‘லா அன்ட் லாஃப்டர்’. நீதிபதி ஞானேந்திர குமார், உயர் நீதிமன்றம், அலகாபாத்.
· "டேல்ஸ் ஆஃப் தி பெஞ்ச் அண்ட் தி பார்", வி.ஜே. தாராபோரேவாலா.
· ‘ஹ்யூமர்,விட், ரிபோர்டி’- என்.எல்.ராஜா
· திரு.மோகன் பராசரன்,( https://www.republicworld.com/opinion/law-and-humour-by-mohan-parasaran)
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
இதையும் படிக்க: தாமதமாகும் நீதியும் பெருகும் நீதிக்கான கூக்குரல்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.