அரசியலமைப்பு புத்தகம் 
சிறப்புக் கட்டுரைகள்

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

இந்திய அரசியலமைப்பு உருவானது பற்றி...

இராஜ முத்திருளாண்டி

இந்திய அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களைத் தேர்வு  செய்ய, 1946 ஜூலை மாதம் இறுதி வாக்கில் தேர்தல் (கேபினட் மிஷன் திட்டத்தின்படி மறைமுகத் தேர்தல்) நடந்து முடிந்தது. இதன் மூலம், அரசியல் நிர்ணய சபை மக்களிடமிருந்து பெறப்பட்டதானது. மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தமுள்ள 296 இடங்களில் காங்கிரஸுக்கு 208 இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள 16 இடங்கள் ஐந்து சிறிய கட்சிகளுக்குச் சென்றன. இவ்வாறாக, சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு 69 சதவீத பெரும்பான்மை இருந்தது. பிரிவினைக்குப் பிறகு (1947), முஸ்லீம் லீக் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்தபோது காங்கிரஸின் பெரும்பான்மை 82 சதவீதமாக உயர்ந்தது. ஆக, அடிப்படையில் ஆரம்பத்திலிருந்தே (1946) அரசியலமைப்பு சபை காங்கிரஸ் மிகப்பெரும்பான்மை பெற்றிருந்த அவையாகத்தான் இருந்தது. ஆனாலும் தனது பெரும்பான்மையால் நாட்டிற்கான அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தனது விருப்பங்களை வலியுறுத்தும் நிலைப்பாட்டை அக்கட்சி வெளிப்படுத்தவில்லை என்பது அரசியலமைப்பு தின நினைவலைகளில் மகிழ்வோடு குறிப்பிட உரியதாகும்.

மிகப் பெரும்பான்மை பெற்றிருந்த கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலான தலைவர்கள் அனைத்துத் தரப்பினரின் முழு ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் நாட்டின் நெடிய வருங்காலத்தைத் தீர்மானிக்கும் உன்னதப் பணியான அரசமைப்பு சாசனத்தை வடிவமைக்கும் முயற்சியில் பெற வேண்டும் என்பதில் உண்மையான ஆர்வமும் செயல்பாடும் கொண்டிருந்தனர். எந்த வேற்றுமைகளுக்கும் இடமளிக்காவண்ணம் - ஈடுபடவேண்டும் என்பதை உறுதிப்படுத்த காங்கிரஸ் உண்மையாக விரும்பியது.

அத்தகைய பெரும்போக்கின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக இரண்டு ஏற்பாடுகள் நினைவு கொள்ளத்தக்கவை. அரசமைப்பு சபைக்கான தேர்தலின்போதே, காந்தியடிகள் வழிகாட்டுதலின்படி, காங்கிரஸ் கட்சியைச் சேராதவர்களாயினும், திறமையாளர்களை அரசியலமைப்பு சபை உறுப்பினர்களாக்க அக்கட்சி சபை உறுப்பினர்களாக ஆதரவளித்ததாகும். தனது வேட்பாளர்களாக, காங்கிரஸ் உறுப்பினர்களாக இல்லாத பலதுறை வல்லுநர்கள் 35 பேரை (உதாரணம்: என். கோபாலசாமி ஐயங்கார், எச்.என். குன்ஸ்ரு, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், டாக்டர். எஸ். இராதா கிருஷ்ணன், எச்.ஜி.முகர்ஜி) காங்கிரஸ் நிறுத்தி வெற்றியும் பெறச் செய்ததாகும்.

மேலும் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் 29, கிறிஸ்தவர்கள் 6, ஆங்கிலோ-இந்தியர் 3, பார்ஸி 3, பழங்குடியினர் 4 என்ற அளவில் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களாக காங்கிரஸ் பிரதிநிதித்துவம் அளித்திருந்தது.

மற்றொன்று, அரசமைப்பு சபையின் முக்கியமான கமிட்டிகளில் – மிகக் குறிப்பாக ஏழு உறுப்பினர் கொண்ட வரைவுக் குழுவில் (Drafting Committee)  – தனது பெரும்பான்மையை வலியுறுத்தாமல், ஒரே ஒரு உறுப்பினரோடு (கே.எம். முன்ஷி) செயல்பட அக்கட்சி இசைவு காட்டியது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் அக்குழுவில் இடம் பெற்றார். காங்கிரஸைத் தீவிரமாகப் பல காலம் எதிர்த்து வந்த டாக்டர் அம்பேத்கர் வரைவுக் குழுவில் தலைவராகவும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த முகம்மது சதுல்லா, சுயேட்சைகளான அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என் மாதவராவ், டி.பி. கைத்தான் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தது நினைவிலிருக்குமல்லவா?.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி டாக்டர் அம்பேத்கர், தாம் தலைவராக இருந்த, தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டமைப்பில் நமக்கு “ஒரு அரசியலமைப்பு சபை தேவையில்லை, 1935 சட்டம் போதுமானதாக இருக்கும்” என்று கூறியவர்தான். [பார்க்க: SCF-க்கு உரை, மே 6, 1945. இந்திய வருடாந்திர பதிவேடு (IAR ) 1946, 1, pp. 321-4] அவரே நம் நாட்டின் உயிர்ப்பை ஒளிரச் செய்யும் உலகின் மிக நீண்ட அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய வரைவுக் குழுத் தலைவராக போற்றத்தக்க பணியும் செய்தார் என்பது வரலாறு.

இவ்வாறான சூழ்நிலைகளில் இந்திய அரசியலமைப்பு சபை, நாட்டு மக்களின் நெடுங்கால விழைவான தன்னாட்சியை (ஸ்வராஜ்யம்)  நிதர்சனமாக்க உறுதியும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்த நம் முன்னோர்கள் நிறைந்திருந்த அவையாக உருக் கொண்டது. இது நாட்டிற்குக் கிடைத்த ஒரு அசாதாரணமான நல்வாய்ப்பாகும். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலான அந்நிய ஆட்சியின் தளைகளைத் தகர்த்து, முதன்முறையாக இந்தியர்கள் தங்கள் சொந்த ஆட்சிக்கான வழிமுறைகளை வகுத்துக்கொள்ளும் அரும்பணியை நிறைவு செய்யும் அமைப்பாக அது தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது.

நீண்ட விடுதலைப் போராட்ட காலங்களில் மக்களிடையே தலைவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட உயரிய நோக்கங்களையும் பெருவிழைவுகளையும் வருங்காலங்களில் தொடர, அந்த நோக்கங்களை, விழைவுகளை வென்றடைய ஏதுவான தேசிய நிறுவனங்களை உருவாக்கும் பணியை அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் சுதந்திரமாகவும் போற்றத்தக்க லட்சிய வேட்கையுடன் சுதந்திரப் போராட்ட காலத்தில் பிறந்த நோக்கங்களின் வலிமையுடனும் அணுகினர் என்பது குறிப்பிட உரியது. ஒரு அரசியலமைப்பு ஆவணம் மட்டுமே ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியாது என்பதை சபை உறுப்பினர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதும் உண்மையே. 

சபையின் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன், சபையை எவ்வாறு முறைப்படுத்தி நடத்திச் செல்வது என்பதை உறுதி செய்து வரைவு செய்யும் பொறுப்பை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி, ஜவாஹர்லால் நேரு தலைமையில், அசப் அலி, கே.எம். முன்ஷி, என். கோபாலசுவாமி அய்யங்கார், கே.டி. ஷா, டி.ஆர். காட்கில், ஹுமாயுன் கபீர் மற்றும் கே. சந்தானம் ஆகியோர் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. இந்த குழு முதலில் 1946 ஜூலை 20 முதல் 22 வரையிலும் அடுத்து ஆகஸ்ட் 15 முதல் 17 வரையிலும் இரு முறை கூடி தீவிரமாக விவாதித்து சபையை நடத்துவது குறித்தான முதற்கட்ட முடிவுகளை வரையறுத்தது. 

அதன்படி, முதலில் ஒருமித்த கருத்தில் தற்காலிகமாக ஒருவரை சபையின் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்றும் அதன் பிறகு வரையறுக்கப்பட்டுள்ள முறைகளின்படி நிரந்தரத் தலைவரை சபையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு துணைத் தலைவர், ஒரு பொதுச் செயலர், 15 உறுப்பினர்கள் கொண்ட ஒரு வழிநடத்தல் குழு(Steering Committee) 12 உறுப்பினர்களுடன் பணியாளர், நிதிக்குழு மற்றும் ஒரு நடைமுறைகள் குழு (Procedure  Committee) ஒன்றும் அமைப்பதென முடிவு செய்தது. சபைக் கூட்டத்தின்போது 45 உறுப்பினர்கள் கொண்ட அடிப்படை உரிமைகள் குழு அமைத்துக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. சபையின் உறுப்பினர்களல்லாத வல்லுநர்களையும் இந்த 45 பேர் குழுவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946 இல் நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபம் என்று தற்போது அழைக்கப்படும் ‘அரசியலமைப்பு மண்டபத்தில்’ தொடங்கியது. அந்த நேரத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை காங்கிரஸ் கட்சி பெருந்தன்மையாக, முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சபைக்கு வரும் வரை சிறுபான்மையினர் தொடர்பான அல்லது அவர்களைப் பாதிக்கக் கூடியது என்ற கருதும் விஷயங்களைச் சபையில் விவாதித்து முடிவெடுப்பதில்லை என்று உறுதி அறிவித்தது. சபையின் முதற்கூட்டத் தொடர் டிசம்பர் 9இல் தொடங்கி டிசம்பர் 23 வரை தொடர்ந்து நடைபெற்றது.

முதல் நாள் கூட்டத்தின் முதல் நிகழ்வாக, ஆச்சார்ய ஜே.கே. கிருபளானி எழுந்து நின்று, சபையின் மிக மூத்த உறுப்பினர், பாட்னா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், மத்திய சட்டப் பேரவையின் துணைத் தலைவர் (1920வரை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்த)  டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை, (10-11-1871---5-3-1950)  அரசியலமைப்புச் சபையின் தற்காலிகத் தலைவராக இருந்து அவை நடவடிக்கைகளை வழிநடத்துமாறு தீர்மானம் முன்மொழிந்தார். ஒருமனதாக அது ஏற்றுக்கொள்ளப்பட, ஆச்சார்ய கிருபளானி, டாக்டர் சச்சிதானந்ந சின்ஹாவை அவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்து வந்து அமரச் செய்தார்.

டாக்டர் சின்ஹா தனது ஏற்புரைக்குப் பின், சபையின் துணைத் தலைவராக ஃப்ராங் அந்தோனி பெயரை முன்மொழிய அதுவும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பெயர் அழைக்கப்பட்டு, அவர்கள் தமது தேர்தல் சான்றிதழ்களை அவைச் செயலரிடம் வழங்கி அரசியலமைப்பு சபை உறுப்பினர் பதிவேட்டில் கையொப்பமிடும் நிகழ்வு தொடங்கியது. 207 உறுப்பினர்கள் பதிவேட்டில் கையொப்பமிட்டுத் தங்கள் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தனர். முதல் நாள் நடவடிக்கைகள் இவ்வாறு தொடங்கி மதியம் 1.42-க்கு  அடுத்த நாள் காலை 11 மணிக்குக் கூடுவதாக ஒத்திவைக்கப்பட்டது.

அந்த முதற்கூட்டத் தொடரில் மூன்றாவது நாள் (11-12-1946) சபையின் நிரந்தரத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயரை இரண்டு வெவ்வேறு மனுக்களில் முறையே ஜே.பி.கிருபளானி, ஸ்ரீ ஹரேகிருஷ்ணா மஹ்தாப் முன்மொழிய, வல்லபாய் படேல், நந்த் கிஷோர் தாஸ் ஆகியோர் வழிமொழிந்திருந்தனர். (பிரகாசம், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆகிய இருவருங்கூட டாக்டர் ராஜேந்திர பிரசாத் பெயரை முன்மொழிந்து மனு அளித்தனர். ஒன்று தாமதமாகச் சமர்ப்பிக்கப்பட்டதாலும் மற்றொன்று உரியவாறு அளிக்கப்படாததாலும் ஏற்கப்படவில்லை என்பது கொசுறுத் தகவல்.)

அரசியல் நிர்ணய சபையில் நோக்கங்கள் தீர்மானத்தை (Objectives Resolution) டிசம்பர் 13இல் ஜவாஹர்லால் நேரு முன்மொழிய, ஆறு நாள்கள் தீர்மானம் மீது விவாதம் நடந்த பின்னரும், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வருகையை எதிர்நோக்கி உடனடியாக முடிவெடுக்காமல் முடிவை பின்னர் எடுத்துக் கொள்வது என்பது தீர்மானிக்கப்பட்டது. 1947 ஜனவரி வாக்கில்  இனி முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வருகை நிகழாது என உறுதிப்பட்டதால் 23 ஜனவரி 1947இல் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 29,1947இல் வரைவுக் குழு அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்குழுவின் அடிப்படையான பணி அரசியலமைப்பு ஆலோசகர் பி.என். ராவ் அளித்துள்ள அரசியலமைப்பு வரைவை, அரசியலமைப்பு சபையின் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், தீர்மானங்களுக்கேற்ப முறைப்படுத்திச் சீர்பட வடிவமைப்பதாகும். வரைவுக் குழு அக்.27, 1947 முதல் பிப்ரவரி 1948 வரை தினமும் கூடி விவாதித்து சீரமைக்கப்பட்ட வரைவை இறுதி செய்தது. 

இவ்வாறு தொடங்கப்பட்ட அரசமைப்புச் சட்ட உருவாக்கப் பணிகள் பல அமர்வுகளில் உறுப்பினர்கள் மிகச் சுதந்திரமாகக் கருத்துகள் தெரிவிக்கவும் திருத்தங்களை முன்மொழியவும் தளைகளற்ற வாய்ப்புகளோடு நடைபெற்றது. கிட்டத்தட்ட மூன்றாண்டுக்கால அரும்பணி சிறப்பாக நிறைவுற்றது.

அரசியலமைப்பு தினமென நாம் போற்றி வரும் 26 நவம்பர் 1949 நிகழ்வுகளைச் சுருக்கமாக நினைவு பரப்பிற் காண்போம். 

அரசியலமைப்பு சபை, புது தில்லியில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூடியது, டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். வல்லபாய் படேலின் ஒரு அறிவிப்பிற்குப் பிறகு, உறுப்பினர் பி. தாஸ் எழுந்து 

"ஐயா, வந்தே மாதரம் தேசியப் பாடலாக இருக்க வேண்டுமா, நமது தேசிய கீதம் எதுவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் ஒரு அறிவிப்பைச் செய்யப் போகிறீர்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றார். 

அதற்குத்  தலைவர், “நான் இப்போது எந்த அறிவிப்பையும் வெளியிடப் போவதில்லை. தேவைப்பட்டால், ஜனவரியில் நாம் கூடும் சட்டமன்றத்தில் அந்த விஷயம் பின்னர் பரிசீலிக்கப்படும்” என்று விடையளித்தார். அடுத்து வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன.

அல்கு ராய் சாஸ்திரி என்ற உறுப்பினர் "இந்த அரசியலமைப்பின் இந்தி மொழிபெயர்ப்பு எப்போது, ​​எந்த வடிவத்தில் வெளியிடப்படும் என்பதை நான் உங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன்” என்றார். அதற்கு “ஜனவரி 26 ஆம் தேதிக்கு முன் நாம் சந்திக்கும்போது, ​​அந்த மொழிபெயர்ப்பின் பொது விவாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் அவகாசம் அளித்து அதை அங்கீகரிக்க வேண்டும்” என்ற பதில் தலைவரிடமிருந்து வந்தது.

மேலும் அவர், "அரசியலமைப்பில் சில பிரிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதில் எந்த மொழி அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு மையத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ பணிகளும் ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவசியமானது மற்றும் பொருத்தமானது என்று கருதப்பட்டால் இந்தி மொழியும் அதில் இடம் பெறலாம். தற்போது இந்த அவையில் அரசியலமைப்பை இந்தியில் சமர்ப்பித்து அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தவிர, அரசியலமைப்பின் இந்தி மொழிபெயர்ப்பை ஜனவரி 26 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று என்னை வழிநடத்தும் ஒரு தீர்மானத்தை அரசியலமைப்பு சபையே நிறைவேற்றியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வருகிறேன், மொழிபெயர்ப்பு ஜனவரி 26 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்” என்று அறிவித்தார் .

டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த தீர்மானத்தை முறையாக முன்வைப்பதற்கு முன், தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் நமது அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பான அம்சங்கள் குறித்து ஒரு நீண்ட உரையளித்தார். அதன்பின் டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தது.

தீர்மானம்: "சட்டமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்"

தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது (நீண்ட ஆரவாரம்).

தலைவர் அறிவிப்பு : “இப்போது சட்டமாக மாறியுள்ள மசோதாவில் நான் முறையாக கையெழுத்திட வேண்டும், அதன் அங்கீகாரத்தின் மூலம் அது உடனடியாக அதிகாரம் பெற்று அமலுக்கு வரும்”.

அந்த சமயத்தில், ரகு வீரா என்ற உறுப்பினர் எழுந்து 'இந்தியில் கையெழுத்திடுவீர்களா?' என்றார்.  'ஏன் அந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்ற தலைவர், நேரடி பதில் அளிக்கவில்லை.

அரசியலமைப்பு 26-11-1949 இல் அங்கீகரிக்கப்பட்டது. அன்றுடன் முழுமையாக பணி முடிந்தது என்று சொல்லிவிட இயலாது. மேலும் நாம் அக்காலத்தில் டொமினியன் அந்தஸ்தில்தான் இருந்தோம்.

நவம்பர் 26ல் சபை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு ஜனவரியில் சட்டமன்றத்தின் மற்றொரு கூட்டத்தொடரைக் கூட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. 

1949க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம் தலைவர்கள் மேற்கொண்ட பணியின் மகத்தான தன்மை போற்றுதலுக்குரியது. நாடாளுமன்ற ஜனநாயகம், வயது அடிப்படையில் அனைவருக்கும் வாக்குரிமை, சுதந்திரமான நீதியமைப்பு, நலிவடைந்துள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, சிறப்பான அடிப்படை உரிமைகள் தொகுப்பு எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டு இன்றளவும் உயிர்ப்போடு செயல்படும், செயல்படுத்தத்தக்க ஆவணத்தை சுய லாப எண்ணங்களெதற்கும் இடங்கொடாது அர்ப்பணிப்புணர்வுடன் நமக்கு வடிவமைத்தளித்த முன்னோர்களை அழியா நினைவிலமரத்தி என்றும் போற்றுவோம்.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

History and some unforgettable memories on Indian Constitution Day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT