“அமைதியடையட்டும்” (Rest in Peace - RIP) என்று இறந்தவர்களை ‘இறுதி’ (?) அடக்கம் செய்வது என்பது எந்த வகையிலும் உத்தரவாதமான வார்த்தை இல்லை போலும். பொதுவாக, மனிதர்கள் இறந்துவிட்டால், இறுதியாக அவர்களது உடல்கள் எரியூட்டப்படும் அல்லது அடக்கம் செய்யப்படும் (புதைக்கப்படும்) என்பதுதானே வழக்கம்? ஆனால், நெடிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல பக்கங்களில் - குறிப்பாகப் புகழ்பெற்ற பேரரசர்கள், அரசுத் தலைவர்கள், அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், கவிஞர்கள் எனப் பல்வேறுபட்ட வகையினரருள் - பலருக்கு இறப்பிற்குப் பின் அடக்கம் செய்யப்படுவதுகூட இறுதி அமைதியாக அமையவில்லை என்பது நமக்கு அறியக் கிடைக்கிறது.
பிரபலமானவர்கள் இறந்த பின், அவர்களது இறப்பில் மர்ம முடிச்சுகள் இருப்பதாக எழும் விவாதங்களுக்குத் தீர்வு காண (எ.கா.: பிரஞ்சுப் பேரரசர் நெப்போலியன்; அமெரிக்காவின் 12 ஆவது அதிபர் ஜாக்ரி டெய்லர்; பாலஸ்தீனத் தலைவர் யாஸர் அராபத்); உயிரோடிருப்பவர்களில் யாரோ ஒருவர், ‘இறந்தவர் தமக்கு உறவு’ என உரிமைகொண்டாடி, அதனை நிறுவுவதற்காக டி.என்.ஏ. சோதனைகோரி நீதிமன்ற ஆணைகளைப் பெறுவதால் (எ.கா: ‘மீசை’ புகழ் ஸ்பானிஷ் கலைஞர் சால்வடார் டாலி); தற்போது அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் உணரப்படும் பாதுகாப்புக் குறைபாடுகளால், இறந்தவர்களது உடல் எச்சங்களை மேலும் தீவிரமாகப் பாதுகாத்து வேறிடத்தில் வைக்க வேண்டிய வரலாற்று அல்லது அரசியல் அல்லது, உணர்வுபூர்வமான காரணங்களால் (எ.கா.: ஆபிரஹாம் லிங்கன், கிறிஸ்டோபர் கொலம்பஸ்); இவைபோக இன்னும் பல வித்தியாசமான காரணங்களால், இறந்தவர்களது உடல்கள் முதலில் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, தேவைப்படும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மறுபடியும் அதே இடங்களில் அல்லது வேறு, வேறு இடங்களில் - வேறு நாடுகளில்கூட- மறு அடக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. ஒருசிலரது உடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள்கூட இவ்வகையான தோண்டுதல்களையும், மறு அடக்கங்களையும் கண்டுள்ளன என்பதும் வியப்பளிக்கும் உண்மையே.
இவ்வகைக்கு – அதாவது ‘இறுதி அமைதி’யைக் குலைத்து, அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைத் தகர்த்து, உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மறு அடக்கம் செய்யப்பட்ட வகைக்கு – முன்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளுடன் கூடுதலாக - நீண்ட பெரும் பட்டியலே உள்ளது.
இங்கிலாந்தின் மிகவும் சர்ச்சைக்குரிய மன்னர்களில் ஒருவரான ரிச்சர்டு III; அதேநாட்டில் (சார்லஸ் I) மன்னராட்சியை வீழ்த்தி, முடிசூட்டிக் கொள்ளாமலே "லார்டு புரடெக்டர்” ஆக 1658 வரை ஆண்ட “ஆலிவர் குரோம்வெல்; ரஷியாவின், இரண்டாம் ஜார் மன்னர் நிக்கோலஸ் & அவரது குடும்பத்தினர்; ஜார் மன்னர்களாட்சியை புரட்சி நெம்புகோல் கொண்டு பெயர்த்தகற்றிய சோவியத் புரட்சியின் தலைவர்கள் விளாடிமிர் லெனின், ஜோசப் ஸ்டாலின்; சீனாவி்ன் புரட்சியாளர் மாசேதுங்; தென் அமெரிக்கா விடுதலைப் புரட்சித் தளபதி சைமன் பொலிவர்; லிபிய முன்னாள் தலைவர் முயம்மர் கடாபி; ஸ்பெயினின் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோ; அல்பேனியாவின் என்வர் ஹோக்ஷா; ருமேனியாவின் நிக்கோலே சௌசெஸ்கு, அவரது மனைவி எலெனா; எத்தியோப்பியாவின் ஹெய்லி செலாசி; இராக்கின் சதாம் உசேன்; ஜெர்மனியின் ருடால்ஃப் ஹெஸ்; ஆர்ஜென்டினாவின் அதிபராக இருந்து கிளர்ச்சியாளர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜுவான் பெரோனின் (Juan Perón), அதிபிரபலமான துணைவி ஈவா பெரோன்; வியத்நாம் புரட்சியாளர் கவிஞர் ஹோ சி மின், லத்தீன் அமெரிக்கப் பெருங் கவிஞரான சிலியின் பாப்லோ நெருடா ஆகியோர் அடங்கிய இப்பட்டியல் ஒரு மிகச் சிறு சாம்பிள்தான்!
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
இப்பட்டியலிலுள்ள ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க முன்னோடிக் கடல்பயணி, புதிய புவிப்பரப்பு ஆய்வாளர், கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகு காண அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து, வரலாற்றில் நீண்ட விளைவுகளை ஏற்படுத்திய, நான்கு பெரும் கடற்பயணங்களை மேற்கொண்டவர்.
"சமுத்திரம், மக்கள் கூடியிருக்கும் பூமியின் முடிவான எல்லைகளைச் சூழ்ந்திருக்கிறது, அதற்கு அப்பால் உள்ள அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை" என நூபியன் என்ற புனைபெயர் கொண்ட செரிஃப் அல்எட்ரிசி [Xerif al Edrisi] என்ற புகழ்பெற்ற அரேபிய கவிஞர், எழுத்தாளர் அட்லாண்டிக் பெருங்கடலைப் பற்றி வர்ணித்துள்ளதை, அக்காலத்தில் புவியியல் பற்றி அறியப்பட்டிருந்த யாவற்றுக்குமான ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.
“உலகின் ஐந்தில் ஒரு பகுதியைச் சூழ்ந்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் எதுவுமில்லை” என்பதே கொலம்பஸ் காலத்துப் (15 ஆம் நூற்றாண்டு) புவியியல் அறிவு.
கடல்வழித் தெளிவின்மை, அட்லாண்டிக்கின் பேராழம், அக்கடலில் அடிக்கடி ஏற்படும் சூறைக் காற்றுகள், கடும் புயல்கள், வலிமையான கடல்வாழ் இனங்கள் ஆகிய கண்ணுறா கடினங்கள் கடக்க வேண்டிய அபாயகரமான கடற்பயணம் மேற்கொண்டு, அட்லாண்டிக்கிற்கு அப்பால் என்ன உள்ளது என்பதை அறியவோ, அறியக் கிடைத்துள்ளவற்றைச் சரிபார்க்கவோ ஓரிரு ஆரம்ப முயற்சிகள் தவிரக் குறிப்பிடத் தக்க தொடர் முயற்சிகள் அப்போது தோன்றவில்லை எனலாம். மலைகளைப் போல உயர்ந்தெழுந்து திரண்டுருளும் அட்லாண்டிக்கின் அலைகள் மேலேறி, ஆழநீரில் நுழையத் துணியும் மாலுமிகள் இல்லை என்ற குறையும் இருந்துவந்தது.
ஸ்பெயின் நாட்டவர் எனப் பரவலாக அறியப்படும் கொலம்பஸ் இத்தாலியில் பிறந்தவர். அவரது பிறந்த ஆண்டு, சரியான பிறப்பிடம், மறைவின்போது அவரது வயது, இறந்தபின் இறுதியாக எங்கு அமைதி அடையுமாறு அவர் உடல் வைக்கப்பட்டது போன்ற அடிப்படைத் தகவல்களில் வரலாற்றாசிரியர்களிடையே ஒற்றுமை காண்பது மிக அரிதாகவே உள்ளது.
முதலில், கொலம்பஸின் பிறப்பு ஆண்டு, பிறப்பிடம் குறித்த தகவல்களை அவர் குறித்த முதன்மை வரலாற்று நூல்கள் எவ்வாறு வழங்கியுள்ளன என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
“கிறிஸ்டோபர் கொலம்பஸ், இத்தாலிய மொழியில், ‘கொழும்பு’ (Colombo) என்று உச்சரிக்கப்படுமாறு எழுதப்பட்டவர். லத்தீன் வழக்கின்படி, ‘கொலம்பஸ்’ எனத் தன் பெயரை அவர் எழுதிக்கொண்டார். அதுவே நிலைத்துவிட்டது. ஜெனோவாவைச் சேர்ந்த, அவர் பிறந்த நேரம், அவரது பிறந்த இடம், அவரது பெற்றோர் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தெளிவற்ற நிலையில் உள்ளன. அவரது சமகாலத்தவர்கள் மற்றும் நெருங்கியவர்களில் ஒருவரின் சாட்சியத்திலிருந்து ஆராயும்போது, அவர் 1435 அல்லது 1436 ஆம் ஆண்டில் பிறந்திருக்க வேண்டும். ஏழ்மையான, ஆனால் கெளரவமான, ஒரு கம்பளி வியாபாரியான டொமினிகோ கொலம்போ, அவரது மனைவி சூசன்னா ஃபோன்டனரோசா ஆகியோரின் மகனாவார்" என்கிறது கொலம்பஸ் பற்றிய முன்னோடியான நூல் [பார்க்க: ‘கிறிஸ்டோபர் கொலம்பஸின் வாழ்க்கையும் பயணங்களும்’, (நான்கு தொகுதிகள்) வாஷிங்டன் இர்விங், ஜான் முர்ரே, லண்டன் பதிப்புகள் 1827; அதனுடன் (1827 ஆண்டு வெளியிடப்பட்ட) தனது நான்கு தொகுதி நூல்களிலிருந்து நூலாசிரியரே சுருக்கித் தொகுத்துள்ள ஜி.பி. புட்னம்ஸ் & சன்ஸ், வெளியீடு 1893 ஆகிய நூல்கள்].
“கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜெனோவா குடியரசில் பிறந்தார். அவர் பிறந்த இடத்தின் பெருமைக்காக அந்தக் குடியரசின் பல கிராமங்கள் உரிமை கொண்டாடியுள்ளன. அவர் பிறந்த வீட்டை இப்போது உறுதியாகச் சுட்டிக்காட்ட முடியாது. கிறிஸ்டோபர் 1436 ஆம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது, இருப்பினும் சில வரலாற்றாசிரியர்கள் அவர் இதைவிட வயதானவர் என்றும், சிலர், ‘இல்லை, அவர் இளையவர்’ என்றும் கூறுகின்றனர். அவருடைய பிறப்பு, முழுக்காட்டுதல் (பாப்டிஸம்) பற்றிய பதிவுகள் எதுவும் காணப்படவில்லை” என்கிறது ‘கிறிஸ்டோபர் கொலம்பஸ்: அவரது சொந்த கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் (Journals) மற்றும் அவரது காலத்தின் பிற ஆவணங்களிலிருந்து’. எட்வர்ட் எவரெட் ஹேல், சிகாகோ: ஜி.ஐ. ஹோவ் & கோ. 1891 என்ற நூல்.
‘கிறிஸ்டோபர் கொலம்பஸ்: ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு வாழ்க்கை’, ஹவர்லி ஹிஸ்டரி வெளியீடு, நியூயார்க், லண்டன்; 2016 என்ற நூலில் “கிறிஸ்டோபர் கொலம்பஸின் தொடக்க ஆண்டுகளைப் பற்றி உண்மையில் அறியப்பட்டவை அரிதானவை. அவர் அக்டோபர் 31, 1451-க்கு முன்னர் நவீன இத்தாலியில் உள்ள ஜெனோவா குடியரசில் பிறந்தார். ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நகரங்கள் கொலம்பஸின் பிறப்பிடம் என்று கூறுகின்றன, ஆனால் ஜெனோவாதான் மிகவும் உண்மையானதாகத் தெரிகிறது. கொலம்பஸின் தந்தைக்கு அங்கே ஒரு சிறிய வீடு இருந்தது” என்பது வழங்கப்பட்டுள்ள தகவல்.
இளமையிலேயே கடற்பயண ஆர்வம் கொண்டிருந்த கொலம்பஸ், போர்ச்சுகல் நாடு முதல் பல தரப்புகளில் தொடர்ந்து கடற்பயண நிதியுதவிக்கு மிகவும் முயன்று, இறுதியாக ஸ்பெயின் அரசி இஸபெல்லாவின் ஆதரவைப் பெற்றுக் கடலோடியானவர். அவரைப் பற்றிய பல மேலோட்டமான வரலாற்று நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், இணையதளங்களில் உலவும் செய்திகள் நமக்கு அறியத் தரும் செய்திகள், தெளிவைவிட, அதிகக் குழப்பங்களையே விளைவிக்கின்றன.
அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதிகள் பற்றி கொலம்பஸின் பயணங்களுக்கு முன் ஐரோப்பாவில் அதிகம் அறியப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை. அதுவே அவரது கடற்பயணங்களின் வரலாற்று முக்கியத்துவம். கொலம்பஸ் ஒன்றும் அமெரிக்காவை முதலில் “கண்டுபிடித்தவர்” அல்லர்; அவரது 1492 கடற்பயணத்திற்கு ஐநூறு ஆண்டுகளுக்கே முன்பே வைகிங் (Viking) என்பவர் அமெரிக்கக் கண்டத்தின் நியூ பவுண்ட்லாண்டை கடல்வழியாக அடைந்துள்ளார் என்கிறது ஒரு தரப்பு.
அமெரிக்காவை முதலில் “கண்டுபிடித்தவர்” யார் எனும் விவாதத்தை மேலும் சிக்கலாக்கும் விதமாக, 2014 நவம்பர் 15இல் இஸ்தான்புல்லில் துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆற்றிய உரையின்போது, “கொலம்பஸின் வருகைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், 1178 இல் முஸ்லிம் மாலுமிகள் அமெரிக்காவைக் "கண்டுபிடித்தனர்" என்று முழங்கினார். தனது கூற்றுக்கான ஆதாரமாக, “கொலம்பஸ் எழுதிய 1492 டைரி பதிவில் - கியூபாவில் உள்ள ஒரு மலையில் ஒரு மசூதியைக் குறிப்பிடும் பகுதியை” எர்டகன் குறிப்பிட்டார்.
இறப்பதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பு வரை, தீராக் கடலோடியாக இருந்த கொலம்பஸின் பயண ஆண்டுகள், இறப்பு ஆண்டு குறித்த மாறுபட்ட தகவல்களே உலவுகின்றன.
வரலாற்றில் குறிக்கத் தக்க நிகழ்வுகளை ஏற்படுத்திய கொலம்பஸின் முதற் கடற்பயணம், 1492 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில், பாலோஸுக்கு முன்னால் - ஒடியல், டின்டோ ஆறுகளால் ஆன சால்டெஸ் என்ற சிறு தீவிலிருந்து - கிளம்பிப் புதிய உலகு காணப் புறப்பட்டது என்பதில் கருத்து ஒற்றுமை இருக்கிறது. தொடர்ந்து 1493, 1496, 1502 ஆண்டுகளில் அவர் கடலோடினார், எண்ணிறைந்த கடினங்கள் கடந்து 1504-இல் மறைந்தார் என்பது மிகப் பழமையான இரு நூல்களில் கிடைக்கும் செய்தி [வாஷிங்டன் இர்விங், 1827 & 1893]. மற்றொரு நூலில் (எட்வர்ட் எவரெட் ஹேல், ஜி.ஐ. ஹோவ் & கோ.1891) கொலம்பஸின் கடற்பயண ஆண்டுகளாக 1492 ,1493 ,1494, 1502 என்றும் 21 மே 1506 இல் இறந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அறிகிறோம்.
இன்னொரு நூலில் (ஹவர்லி ஹிஸ்டரி வெளியீடு, 2016) அவரது கடற்பயணங்களின் ஆண்டுகளை 1492 ,1493, 1498, 1502 எனவும், கொலம்பஸ் மே 1505 இல் இறந்தார். இறக்கும்போது அவரது வயது 54 என்றும் குறிப்பளிக்கப்பட்டுள்ளது.
தன்னைப் பற்றி இவ்வாறான மாறுபட்ட கருத்துகளை அறிந்து கொலம்பஸ் தனது கல்லறையில் உருண்டுகொண்டிருப்பார் (rolling in his grave) என உருவகமாகச் சொல்லலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இறுதியாக அவர் எங்கு கிடக்கிறார் என்பது இன்று வரை உறுதியாகத் தெரியவில்லையே.
கொலம்பஸின் அடக்கங்கள்
கொலம்பஸுக்கு மரணத்திற்குப் பின்னரும் பயணங்கள் அதிகம் இருந்ததால், இத்தாலிய ஆய்வாளர் கொலம்பஸ் துண்டு துண்டாகக் கிடக்கிறாரோ என்ற ஐயம் அகலாது நிற்கிறது. பல செய்திகளின் ஊடே, அவரது எச்சங்களை வைத்திருப்பதாக இரண்டு தளங்கள் உரிமை கொண்டாடி வருகின்றன. இது, பல ஆண்டுகளாக, ஸ்பெயினும் டொமினிகன் குடியரசும் கிறிஸ்டோபர் கொலம்பஸின் உடலை யார் சொந்தமாக்குவது என்பது குறித்து வாதிட்டு வருவதன் நீட்சியாகும்.
நிலவுகிற செய்திகளின்படி, 1506 ஆம் ஆண்டு வல்லடோலில் கொலம்பஸ் இறந்த பிறகு அங்கேயே (வல்லடோலிடில்) அடக்கம் செய்யப்பட்டார். அவரது மகன் டியாகோ இந்த ஏற்பாட்டில் திருப்தி அடையவில்லை. தொடர்ந்த அவரது வலியுறுத்தல்களால், அவரது தந்தையின் உடல் எச்சங்கள் வல்லடோலில் இருந்து அகற்றப்பட்டு, செவில்லில் (Seville Cathedral) உள்ள மடாலயத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு மறு அடக்கம் செய்யப்பட்டது. 1542 வரை கொலம்பஸ் அங்கேயே அடங்கியிருந்தார்.
பிற்காலத்தில், டியாகோவின் மனைவி, ஸ்பெயின் நீதிமன்றத்தில் இவ்வுடலை, முதற் கடற்பயணத்தில் கொலம்பஸ் கரையிறங்கிக் காலனியை உருவாக்கிய புதிய உலகத்தில் - ஹிஸ்பானியோலாவில் - உள்ள சாண்டோ டொமிங்கோவில் உள்ள தேவாலயத்திற்கு மாற்றுமாறு மனு செய்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்பட்டுக் கொலம்பஸின் எச்சங்கள் அட்லாண்டிக் கடலைக் கடந்து கொண்டு செல்லப்பட்டு, சான்டோ டொமிங்கோவில் உள்ள தேவாலயத்தில் பலிபீடத்தின் வலது பக்கத்தின் கீழ் புதைக்கப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகளாக அங்கேயே இருந்தது என்பது ஒரு செய்தி.
1795 ஆம் ஆண்டில், பிரான்ஸ், ஸ்பெயினை ஹிஸ்பானியோலாவிலிருந்து (இப்போது ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு பகிர்ந்துகொண்டிருக்கும் தீவு) வெளியேற்றியபோது, கொலம்பஸின் எச்சங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட கியூபாவின் ஹவானாவிற்குக் கொண்டு செல்லப்பட்டன.
1898 ஆம் ஆண்டு ஸ்பெயினிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, கொலம்பஸ் உடல் எச்சங்கள் அண்டலூசியாவிற்குத் திரும்பிச் சென்று, மீண்டும் செவில்லே கதீட்ரலில் உள்ள ஓர் அலங்கரிக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன.
பயணக் கதை அங்கேயே முடிந்திருந்தால் பரவாயில்லையே. டொமினிகன் குடியரசில், சான்டா மரியா லா மேனர் கதீட்ரலை, 1877 ஆம் ஆண்டில், தொழிலாளர்கள் புனரமைப்பு செய்துகொண்டிருந்தபோது, பலிபீடத்தின் இடது பக்கத்தின் கீழ், மனித எச்சங்களைக் கொண்ட, "புகழ்பெற்ற மற்றும் சிறந்த மனிதர், டான் கோலன், பெருங்கடல் அட்மிரல்" என்று எழுதப்பட்ட ஓர் எலும்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது ("கோலன்" என்பது கொலம்பஸைக் குறிக்கச் சொல்லப்படும் ஸ்பானிஷ் சொல்). இந்தக் கண்டுபிடிப்பின் உட்பொருள் என்னவென்றால், ஸ்பானியர்கள் தவறான நபரின் எச்சங்களை செவில்லுக்கு எடுத்துச் சென்று, "புகழ்பெற்ற மற்றும் சிறந்த மனிதர்" கொலம்பஸை சான்டோ டொமிங்கோவில் விட்டுச் சென்றுள்ளனர்” என்பதாகும்.
ஸ்பானியர்கள் அட்மிரல் கொலம்பஸின் எச்சங்களை ஒரு தேசிய பொக்கிஷமாகக் கருதியதால்தான் அவை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்படுவதை எவ்விலை கொடுத்தும் தடுக்க விரும்பி, பழைய ஆவணங்களை நம்பி, அவர்கள் சான்டோ டொமிங்கோவில் இருந்த எச்சங்களைத் தோண்டி எடுத்து கியூபாவின் ஹவானாவுக்கு எடுத்துச் சென்றனர். இதில் தவறு நேர்ந்திருக்கலாம்.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல்! கொலம்பஸின் மகன் டியாகோவும், ‘டான் கோலன்’, ‘கடல் அட்மிரல்’ என்றும் அழைக்கப்பட்டார். ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்ட அந்த எச்சங்கள் டியாகோவுடையதாக இருக்கலாமோ எனச் சந்தேகப் பூதம் கிளம்பியது.
‘எது எப்படியிருப்பினும் இருக்கட்டும்’ என்று 1992 இல் 688 அடி நீளமுள்ள ஒரு பெரிய, சிலுவை வடிவ "கொலம்பஸ் கலங்கரை விளக்கத் தொகுதியை” சான்டோ டொமிங்கோவில், கொலம்பஸின் கல்லறையாகக் கட்டினார்கள். இந்த வளாகம் கொலம்பஸின் 1492 முதற் கடற்பயணத்தின் 500-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கட்டித் திறக்கப்பட்டதாகும்.
இறுதியாக, செவில்லே கதீட்ரல் மற்றும் கொலம்பஸ் கலங்கரை விளக்கம் இரண்டுமே இத்தாலியக் கடற்பயண ஆய்வாளரின் எச்சங்களைத் தாங்கள் வைத்திருப்பதாகக் கூறுகின்றன. இந்த வாதத்தில் அறிவியலும் ஒருமுறை தலையிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில், செவில்லே எலும்புத் துண்டுகளில் டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டு அவை 95% கொலம்பஸுடையதாக இருக்கலாம் என்று உறுதிப்படுத்தியது. இருப்பினும், கொலம்பஸின் சில பகுதிகள் இன்னும் சான்டோ டொமிங்கோவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அது முற்றாக மறுக்கவில்லை. அங்கும் டிஎன்ஏ சோதனை நடத்திப் பார்த்தால் ஒருவேளை உண்மை வெளிச்சத்திற்கு வரலாம். ஆனால், கொலம்பஸ் கலங்கரை விளக்கத்தின் நிர்வாகிகள், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறி, தாங்கள் வைத்திருக்கும் எச்சங்களை அகற்றவோ டிஎன்ஏ சோதனை செய்யவோ மறுக்கின்றனர்.
“நீங்கள் இன்று செவில்லில் உள்ள கதீட்ரலுக்குச் சென்றால், கொலம்பஸின் கல்லறையைக் காண்பீர்கள்” என்றழைக்கிறது ஸ்பெயின் தரப்புச் செய்தி.
“ஹவானாவுக்கு 1795 இல் மாற்றப்பட்ட உடல் உண்மையில் டியாகோவுடையது, அதே நேரத்தில் அட்மிரல் கொலம்பஸின் எச்சங்கள் சான்டோ டொமிங்கோவில்தான் இருந்தன. ஆகவே, நீங்கள் இன்று சான்டோ டொமிங்கோவில் உள்ள கதீட்ரலுக்குச் சென்றால், கொலம்பஸின் கல்லறையைக் காண்பீர்கள்” என்றழைக்கிறது ஹைட்டி தரப்பு.
குழப்பங்களைக் கூடுதலாக்கும் வகையில், ஒரு வரலாற்றாசிரியர் “தவறான உடல் ஹவானாவிலிருந்து செவில்லுக்கு மாற்றப்பட்டது என்றும், கொலம்பஸின் எச்சங்கள் உண்மையில் ஹவானாவிலேயே இன்னும் உள்ளன” என்றும் ஒரு வாதத்தைத் தொடங்கினார். மற்றொரு வரலாற்றாசிரியரோ, “கொலம்பஸின் எச்சங்கள் ஆரம்பித்ததிலிருந்த வல்லாடோலிட்டை விட்டே ஒருபோதும் வெளியேறவேயில்லை” எனச் சாதிக்கிறார் (யாரைத்தான் நம்புவதோ?).
இறுதியாக செவில், சான்டோ டொமிங்கோ ஆகிய இரு நகரங்களிலுமே கடற் பயணி கொலம்பஸின் உடல் பாகங்கள் (எச்சங்கள் ) இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பது ஒரு சமரசக் கருத்தாக தற்போது முன்வைக்கப்படுகிறது.
இறந்த பின்னும் பயணங்கள் பல மேற்கொண்ட கொலம்பஸின் உடல் எச்சங்கள் புதிய உலகத்திலா (ஹிஸ்பானியோலாவில் உள்ள சான்டோ டொமிங்கோவிலா?) அல்லது, பழைய உலகத்திலா (ஸ்பெயின், செவில்லிலா?) அல்லது இரண்டிலுமே உள்ளதா என்ற மர்மம் இன்று வரை இழுபறி நிகழ்வுகளால், கருத்துகளால், முற்றிலும் தீர்வாகாத ஆய்வுகளால், விடாது வாதங்களைத் தோற்றுவிக்கும் வரலாற்றாசிரியர்களால், அவிழ்க்கப்படாமலே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
RIP!
கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.