திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் காலமாகிவிட்டார். திரையுலகப் பிரபலங்கள் எல்லாரும் அஞ்சலி செலுத்தினர். அத்தனை ஊடகங்களும் அவருடைய மறைவுக்காகச் சிறப்புச் செய்திகளை வெளியிட்டன; ஒளிபரப்பின. அவரைத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனப் பலரும் கண்ணீர் சிந்தினர். எல்லாருக்குள்ளும் ஊடாடிக் கொண்டிருந்த பெருந் துயரம், நம்பவே முடியாத அவருடைய வயது – வெறும் 46!
மேடை நாடகக் கலைஞராக இருந்து, ரோபோவாகத் தோன்ற உடலில் அலுமினிய பெயின்ட் அடித்துக் கொண்டு பல மணி நேரங்களைக் கழித்து, மிமிக்ரி, நகைச்சுவை எனப் பல விஷயங்களை வென்று, வாழ்வின் மிகக் கடினமான காலகட்டங்களை எல்லாம் கடந்து வெள்ளித் திரைக்குள் நுழைகிறார். நகைச்சுவை நட்சத்திரமாக மின்னத் தொடங்குகிறார். மிகப் பெரிய உயரங்களை எட்டக் கூடிய திறமை, எட்டாத உயரத்திலிருந்து வாய்ப்புகள் கிட்டே வரத் தொடங்கியிருந்த வேளை.
ரோபோ சங்கரின் உடல் நலம் குன்றுகிறது. தொடர்ந்து, சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிறார். தோற்றம் மாறுகிற அளவுக்கு உடல்நலத்தில் பாதிப்புகள். ஆனாலும், சிகிச்சைக்குப் பின் சற்று மீண்டு வருகிறார். நம்பிக்கை ஒளிரத் தொடங்கிய தருணத்தில்... திடீரென மயங்கிவிழுகிறார், மருத்துவமனையில் அனுமதி, தீவிர சிகிச்சை, மறைவுச் செய்தி, இரங்கல்கள், இறுதிச் சடங்குகள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள்...
... காலத்தில் கரைந்துவிடுவார் ரோபோ சங்கர். உலகம் என்னவோ எப்போதும் போல இயல்பாக இயங்கத் தொடங்கிவிடும். ரோபோ சங்கரோ அல்லது இவரைப் போன்று அகாலத்தில் இறந்துவிடுவோரின் குடும்பங்களில் மட்டும் அவர்கள் இல்லாததன் அந்த வெறுமை அப்படியே துயரமாக அழுத்திக் கொண்டிருக்கும். பொருளாதாரச் சூழலைப் பொருத்து இந்த அழுத்தத்தின் வலிகளும் குடும்பத்தின் எதிர்காலமும் இருக்கும். இப்படியாக விட்டுச் செல்வோரைப் பற்றி, இன்னாருடைய குடும்பம் என எல்லாரும் பேசினாலும்கூட, அந்த இன்னாருக்கு நிச்சயம் இவை எதுவும் தெரியப் போவதில்லை. இதுவே நிதர்சனம்.
ஏதோ ஒரு வீட்டில் ‘எக்ஸ்’ என்பவர் இறந்துவிடுகிறார். துக்கம் கேட்கச் செல்கிற யாரும் எக்ஸ் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்று கேட்பதில்லை. எக்ஸின் உடல் எங்கே இருக்கிறது? என்றுதான் கேட்கிறார்கள். எக்ஸின் உடல் முன்னறையில் வைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் பதிலும் சொல்கிறார்கள். இவ்வளவு காலமாக எக்ஸ் என்றழைக்கப்பட்டவரின் ‘உடல்’ மட்டும்தான் அது. அப்படியானால், எக்ஸ்? அந்த உயிர் வெளியேறிச் சென்றுவிட்டது; வெளியேறிச் சென்ற கணத்தில், உயிரோடு இருந்துகொண்டிருந்த உடல், வெறும் சடலமாக, சவமாக, பெயரற்றதாகிவிட்டது.
இவ்வளவு காலம் எக்ஸ் பயணம் செய்துகொண்டிருந்த அந்த உடலை, எக்ஸ் எவ்வளவுதான் நெருக்கமானவராக இருந்தாலும் யாராலும் இனியும் சும்மா வைத்துக்கொண்டிருக்க முடியாது; வைத்துக் கொண்டிருந்தும் ஆகப் போவது ஒன்றுமில்லை. அகற்றிவிடத்தான் வேண்டும்.
பிறப்பிலிருந்து எக்ஸ் என்பவரின், அதாவது எக்ஸ் அல்லது ஒய், இசட் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தவரின் உயிரைச் சுமந்து சென்றுகொண்டிருந்த கேரியர், கேரேஜ், கோச் அல்லது வாகனம்தான் அந்த உடல். எக்ஸ் என்ற உயிர் வளர்த்துக் கொண்டிருந்த அந்த உடல் இணக்கமாகச் செயல்பட மறுத்ததும் / அல்லது உடலை அந்த உயிரே முறையாகப் பராமரிக்க மறந்து பழுதாக்கியதும் / அல்லது நிறைய செலவு செய்து பழுதுபார்த்த போதும் உயிரைச் சுமக்க முடியாத நிலையை உடல் எட்டிவிட நேர்ந்ததும் எல்லாவற்றையும் உயிர் துறந்தேயாக வேண்டும், யார் அழுதாலும் கதறினாலும்.
மெலிதாகத் தத்துவம் போலத் தோன்றினாலும் அப்படியெல்லாம் அல்ல. மிக எளிய உண்மை. உயிரையும் உடலையும் கொஞ்சம் பிரித்துப் போட்டுப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது. தன்னைச் சுமந்திருக்கும் உடலை - வாகனத்தைப் பேண – முறையாகப் பராமரிக்க வேண்டியது ஒவ்வோர் உயிருக்கும் எந்தளவுக்கு முக்கியம், அவசியம் என்பதை உணர முடிகிறது.
ரோபோ சங்கரின் மரணத்துக்கு அவருடைய குடிப் பழக்கமும் அதனால் நேரிட்ட கல்லீரல் பாதிப்பும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன; இல்லாமலும் இருக்கலாம் (தவிர்க்க இயலாமல் இதை, இங்கே, இவ்வாறு குறிப்பிட நேர்ந்ததற்காக சங்கரின் குடும்பத்தினரும் நண்பர்களும் மன்னிக்க வேண்டும்). இப்படியான, இதேபோன்ற காரணங்களால் முதல்முதலாக உயிரிழந்த திரைப் பிரபலமா, இவர்? இல்லையே. திரைத்துறையில் ஏற்கெனவே, இவ்வாறு உயிரிழந்தோரின் நீண்டதொரு பட்டியல் இருக்கிறது. இவரே கடைசியாக இருப்பாரா என்றால், இருந்தால் மகிழ்ச்சி என்றாலும், அப்படியோர் அற்புதமான சூழலுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கொஞ்சமும் நம்பிக்கை வரவில்லை.
மிகவும் கஷ்டப்படுகிறார்கள். வாய்ப்புகளுக்காக அலைகிறார்கள். சின்னச் சின்னதாகக் கிடைக்கத் தொடங்கும்போது மிகக் கடினமாக உழைக்கிறார்கள். ஏற்கெனவே சோகத்தின் பெயரால் மதுவைக் குடித்துக் கொண்டிருந்தவர்கள், கைகளில் காசு புரளத் தொடங்கும்போது, அதையே மகிழ்ச்சியைக் கொண்டாடும் வழியாக மாற்றிக்கொண்டு மறுபடியும் தொடர்ந்து குடியோ குடியெனக் குடிக்கிறார்கள் – தங்களைச் சுமந்துகொண்டிருக்கும் உடலைப் பற்றிய எவ்வித கவலையோ அக்கறையோ இல்லாமல். தாங்க முடியாத அல்லது பொறுக்க முடியாத ஒருகட்டத்தில் உடல் கைவிட்டு விடுகிறது; வேறு வழியின்றி உயிருக்குப் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டி வந்துவிடுகிறது!
இப்போது இறந்தவர் திரைப் பிரபலம் என்பதால் எல்லா தரப்பு மக்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளபடியே நகரத்துக்கு ஒருவர், ஊருக்கு ஒருவர், வீதிக்கு ஒருவர், சில வாரங்களுக்கு ஒரு முறை அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை என செத்துக்கொண்டுதானிருக்கிறார்கள். குடி, குடி, குடி… ...குடிப் பழக்கம்தான் காரணம்!
உலகில் வேறெங்காவது நம் நாட்டைப் போல என்றுகூட கூற முடியாது, நம் மாநிலத்தைப் போல, குடித்துவிட்டு, மதுபோதையில் நிதானமிழந்து மட்டையாகிக் கடைவாசல்களிலும் தெருவோரங்களிலும் மக்கள் விழுந்து கிடக்கும் காட்சிகளைக் காணக் கிடைக்குமா?
வெளிநாடுகளை விடுங்கள். அருகேயுள்ள மாநிலங்களில் எல்லாம்கூட மதுக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்துகொண்டுதானே இருக்கிறது; இப்படியா, மக்கள் விழுந்துகிடக்கிறார்கள்?
இந்த மக்கள் எதற்காகக் குடிக்கிறார்கள்? எதற்காக இந்தக் குடிபோதை? எங்கிருந்து, எவ்வாறு தோன்றியது இந்தக் குடிப்பழக்கம்? எப்படி உத்வேகம் பெற்றது? எவ்வாறு இன்று ஒட்டுமொத்த சமுதாயத்தையுமே பிடித்து அழுத்தி, ஆட்டிக் கொண்டிருக்கிறது?
மது விற்பனையில் கிடைக்கிற வருவாய் இல்லாவிட்டால் அரசை நடத்துவதே சிரமமாக இருக்கும் என்று நியாயப்படுத்திப் பேசப்படுகிற அளவுக்குச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மது விற்பனை!
2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 48,344 கோடி. முந்தைய ஆண்டைவிட ரூ. 2,488 கோடி அதிகம். 2023-24-ல் 45,855 கோடி, 2022-23-ல் 44,121 கோடி, 2021-22 நிதியாண்டில் ரூ. 36,051 கோடி. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 12,000 கோடி அதிகரித்திருக்கிறது – படிப்படியாக ஆனால் உறுதியாக சற்றும் மனந்தளராமல் போதையில் ஆழ்ந்துகொண்டிருக்கிறோம்.
38 மாவட்டங்களில் அலுவலகங்கள், 43 இடங்களில் மது இருப்பு வைக்கக் கிடங்குகள், 4,787 சில்லறை விற்பனைக் கடைகள், இந்தக் கடைகளுடன் இணைந்த 2,362 மதுக்கூடங்கள், சுமார் 250 பிராண்ட் சரக்குகள் - 185 பிராண்ட் பிராந்தி, விஸ்கி போன்றவை, 43 பிராண்ட் பீர்கள்; வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 பிராண்ட் பீர், 223 பிராண்ட் வொய்ன் உள்பட 551 பிராண்ட் மது வகைகள். எல்லாம் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் – உற்சாகத்திலேயே உருண்டு புரண்டுகொண்டிருக்கச் செய்வதற்காக அரசே செய்து தந்திருக்கும் அற்புத ஏற்பாடுகள்! (எல்லாமும் ஆண்டுத் தொடக்கத்தில் சட்டப்பேரவையில் அரசு கொள்கைக் குறிப்பில் மதுவிலக்கு - எக்சைஸ் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கூறிய புள்ளிவிவரங்கள்தான்).
இந்த சாதனைப் புள்ளிவிவரங்களுடன் இன்னமும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய, மக்களும் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு சில தகவல்களையும் சேர்த்து அரசும் அமைச்சர்களும் அப்டேட் செய்தால் ரொம்பவே சிறப்பாக இருக்கும்!
· தமிழ்நாட்டில் மதுக் கடைகள் திறந்துவிடப்பட்ட காலந்தொட்டு (1971 ஆகஸ்ட் 30) இந்த 54 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் குடித்தும், குடிப்பழக்கத்தால் நோய்ப்பட்டும் செத்தவர்கள் எத்தனை பேர்?
· ஒவ்வோராண்டும் மாநிலம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் குடிப் பழக்கத்தால் வந்த பாதிப்புகள் / நோய்கள் காரணமாக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை எவ்வளவு?
· இவர்களில் எத்தனை பேர் நலம் பெற்றனர்? ஒவ்வோராண்டும் எத்தனை பேர் செத்துப் போனார்கள்?
· குடியில் மூழ்கிப் போனதால் தந்தையை, சகோதரனை, கணவனை, மகனை, பேரனை இழந்த, அவ்வாறு இழந்ததால் ஆதரவற்றுப் போன பெண்கள் எத்தனை பேர்? வீதிக்கு வந்த குடும்பங்கள் எத்தனை?
· எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் குடிப்பழக்கத்தால் - சம்பாதித்த பணத்தை வீடுகளில் கொடுக்காமல் குடித்து அழிக்கும் ஆண்களால், சீரழிந்துபோன, சீரழிந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் எத்தனை?
ம்.
இதுவரையில் ஆட்சி நடத்திய, நடத்தும் இரு கழகங்களைச் சேர்ந்த எந்தவோர் அரசிடமாவது இதுபற்றிய கணக்குகள் / தரவுகள் இருக்கின்றனவா? எடுத்திருக்கிறதா?
குறைந்தபட்சமாகக் குடிபோதை காரணமாக நடைபெறும் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளை, களவு, பாலியல் வன்கொடுமைகள் – அத்துமீறல்கள் பற்றியாவது அரசிடம் - காவல்துறையிடம் தரவுகள் இருக்கின்றனவா?
ஆனால், இத்தனை ஆயிரம் குடும்பங்களை நாசமாக்கி, இத்தனை உயிர்களைப் பலிகொள்ளும் மது விற்பனையின் மூலம் எவ்வளவு வருவாய் வந்துகொண்டிருக்கிறது என்பதை மட்டும்தான் ஆண்டுதோறும் பெருமை பொங்க அறிவித்துக்கொண்டிருக்கிறது அரசு.
மக்களை மதுவின் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியாக முழு மதுவிலக்கு பற்றி, அல்லது படிப்படியான விலக்கு பற்றி ஒரே ஒருவரிடமிருந்தேனும் ஒரேயொரு சொல்?
மதுக் கடைகள் திறக்கப்பட்ட காலத்திலேயே பெண்கள்தான் பெரும் போராட்டங்களை நடத்திக் கைதானார்கள். இன்றுவரையிலும் இதே பெண்கள்தான் இதன் பெரும் பாதிப்புகளைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனர் (நாகரிக முன்னேற்றமாக இப்போது பெருநகர்களில் பணிபுரியும் பெண்களும் மாணவிகளும்கூட இப்போது மது அருந்தத் தொடங்கியிருக்கின்றனர்).
முன்னரெல்லாம் ஏதோ ஒரு வகையில் மது வணிகத்தில் தொடர்புடையவர்கள் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், அவ்வப்போது மதுவிலக்கு பற்றிப் பேசிக்கொண்டாவது இருந்தார்கள். இப்போது பேசக்கூட நாதியில்லை. பிரிக்க முடியாததாக மட்டுமல்ல, பிரிக்க நினைக்க முடியாததாகவும் ஆகிவிட்டது குடிபோதையும் தமிழ்ச் சமூகமும்.
2014, 2015 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மதுவுக்கு எதிராகத் திடீரென மக்கள் எழுச்சி கொண்டனர். பெண்களும் பங்கேற்கப் பெரும் போராட்டங்களும் நடைபெற்றன. மதுவிலக்கை வலியுறுத்திய போராட்டத்தில் இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்றார். இந்த எழுச்சியை நம்பி, 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றுகூட அறிவித்தார். ஆனால், தேர்தலில் திமுக தோற்றுப் போனது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்கும் வெற்றியைத் தந்த அடுத்த (2021) பேரவைத் தேர்தல் அறிக்கையில் அதைத் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் நிறைய ரோபோ சங்கர்கள் செத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். என்ன, இவர்கள் எல்லாரும் வெளிச்சமற்றவர்கள், உழைக்கும் / கூலித் தொழிலாளர்களாக இருப்பார்கள், ஊழியர்களாக இருப்பார்கள், அல்லது வேலையைத் தொலைத்தவர்களாக இருப்பார்கள்; குடித்தே வேலைக்குத் தகுதியற்றவர்களாக ஆனவர்களாகவும் இருப்பார்கள் (நட்சத்திரங்களைத் தாண்டி குடித்துச் செத்த பெரும் பணக்காரர்கள் மிகவும் அபூர்வம்). எனவே, இவர்களை அந்தத் தெருவைத் தாண்டி, ஊரைத் தாண்டி, அவருடைய உறவுகளைத் தாண்டி யாருக்கும் எதுவும் தெரிவதில்லை. மதுவால் இறந்துபோகிற ஒவ்வொருவருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது; உறவுகளுக்கு மோசமான / துயரமான நிகழ்காலமும் இருந்திருக்கும். போதைக்குப் பழகாமல் போயிருந்தால் மிகச் சிறந்த எதிர்காலம்கூட அமைந்திருக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் என்றாலும் மதுக் கடைகள் விஷயத்தைப் பொருத்தவரை மக்களைப் பற்றிய இவற்றின் அக்கறை என்பது, ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று மது பாட்டில்களின் ஓரத்தில் அச்சிடுவதுடன் முடிந்து போய்விடுகிறது.
தவிர, பல்லாயிரம் கோடிகளில் நடைபெறும் இந்த மது விற்பனையால் - மக்களைப் போதையில் ஆழ்த்தி வைத்திருப்பதால் அரசுக்கு மட்டுமல்ல வருவாய், மது உற்பத்தித் தொழிலில் செல்வாக்குள்ள பலரும் செல்வம் கொழித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, தென்னை மரத்தில் ஒருவேளை தேள் கொட்ட நேரிட்டால் பனை மரத்தில் நெறி கட்டுகிற அதிசயம் நிகழ வேண்டி வந்துவிடும்.
மதுவுக்கும் போதைக்கும் எதிராகப் பெண்கள் திரண்டெழுவது மட்டுமே நிரந்தரமான தீர்வுக்கு வழிவகுக்கும். இவ்வாறு போராடத் திரளும்போதெல்லாம் யாரோ, எங்கிருந்தோ நீரூற்றி அணைத்தும் விடுகிறார்கள். போதைக்கு அடிமையானவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்வதன் மூலம் தங்கள் உடலை மீட்டுக் கொள்வதன் வழியே தங்களையும் மீட்டு, தங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் அப்படியே தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும்கூட நல்ல நிலையில் வைத்துக்கொண்டுவிட முடியும். குடித்ததால் அழிந்தோரின் குடும்பத்தைக் காக்க அரசும் வராது; அயலவரும் வரப் போவதில்லை.
இப்போதும் ஒவ்வொரு நாளும் பகல் 12 மணிக்குக் கடை திறக்க வாசல்களில் காத்துக்கொண்டிருப்போர் பல்லாயிரம். சனிக்கிழமை இரவுகளில் டாஸ்மாக் கடைகளின் முன்னால் திருவிழாக் கூட்டம். குடிக்கக் குடிக்கக் கோடி இன்பம், ஆனால், அத்தனையும் பழங்களை ஊறவைத்துக் காய்ச்சி வடித்த இதிகாச கால மது அல்ல; முழுக்க முழுக்க ரசாயனம் மட்டுமே கலக்கப்பட்ட வண்ணத் திரவம்! உடலைக் கெடுத்து, உடல் உறுப்புகளைக் கெடுத்து மதியை மயங்கச் செய்கிறது!
திக்குத் தெரியாத கடலில் நட்சத்திரங்கள் வழிகாட்டுகின்றன. எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் எத்தனை கோடி ரூபாய்கள் கொட்டிக் கிடந்தாலும் உயிரேறிப் பயணிக்கும் உடலைப் பராமரிக்காமல் விட்டுவிட்டால், குடித்துக் கெடுத்துப் பழுதாக்கி விட்டால், ஒரு நாள் உடல் கைவிட்டு விடும்; உயிர் வெளியேற வேண்டியிருக்கும்!
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே...
_ திருமூலர் திருமந்திரம் (708)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.