அண்ணா 
சிறப்புக் கட்டுரைகள்

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

தமிழ்நாட்டின் இரு முக்கிய நிகழ்வுகளைக் கூறும் 'தீ பரவட்டும்' என்ற நூலைப் பற்றி...

இராஜ முத்திருளாண்டி

‘தீ பரவட்டும்’ என்ற இரண்டு சாதாரணச் சொற்களே தற்போதும் சிலரைச் சுடுகிறது. அண்மையில் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற அண்ணாவின் புகழ்பெற்ற கருத்தாழம்மிக்க வாசகமான "தீ பரவட்டும்" என்ற சொற்கள் தணிக்கைக்கு உள்ளாகி வெட்டி எடுக்கப்பட்ட செய்தி, நமக்குத் தெரியும். இதை அறியும்போது, "தீ பரவட்டும்" என்ற அந்த இரட்டைச் சொற்கள் எந்தக் காலத்தில், எதனைக் குறியீடாக்கிப் பயன்படுத்தப்பட்டது என்பதை அச்சொற்களை நீக்கச் செய்தவர்கள் சரியாக அறிந்திருக்கவில்லை என்ற நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

"தீ பரவட்டும்" என்ற சொற்கள் கலவரத் தீ பரவட்டும் எனத் தூண்டிவிடச் சொல்லப்பட்ட சொற்கள் அல்ல; அத்தகைய எண்ணமும் சிறிதும் கொண்டதல்ல. அடிப்படையில், மக்கள் மனங்களில் மண்டிக்கிடந்த அறியாமை இருளை அகற்றி அறிவுத் தீ நாடெங்கும் - மக்கள் கருத்திலெல்லாம் - பரவிட வேண்டும் என்று பெருவிழைவில் விளைந்த சொற்கள் அவை.

உண்மையில் அச்சொற்கள் அண்ணா மேடையில் உச்சரித்தவை அல்ல. அது, அண்ணா, தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈழத்து அடிகள் ஆகியோர் கலந்துகொண்ட - வழக்காடு மன்றம் போன்ற - இரு தனி நிகழ்வுகளின் சொற்பொழிவுகள் தொகுத்து வழங்கப்பட்ட நூலுக்கு வைக்கப்பட்ட தலைப்புதான்.

ஊடக வளங்களும் தொழில்நுட்பங்களும் பெருகிவழியும் இன்றைய காலத்தில் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் என்ற மேடைக் களம் பல நேரங்களில் பெரும்பாலும் கோமாளித்தனமான, ஒன்றுக்கும் உதவாத கேலிக்கூத்தான தலைப்புகளைக் கொண்டு நமது வீடுகளுக்கே நேரடியாக வந்துவிடுகிறது. எண்பது ஆண்டுகளுக்கு முன் (1943) தமிழ்நாட்டில் ஒரு கருத்தை நிறுவப் பட்டிமன்றம் (அல்லது வழக்காடு மன்றம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்) எவ்வளவு மேன்மையாக, இலக்கியச் சுவை நிறைந்ததாக, அறிவார்ந்ததாக, தரம் நிறைந்ததாக, செறிவானதாக நடைபெற்றது என்பதற்கு இன்றைக்கும் மங்காத சுவை தரும் இரு நிகழ்வுகளே எடுத்துக்காட்டு; அதுவே தீ பரவட்டும் என்ற 82 பக்கச் சிறு நூலின் உட்பொதிவு.

காலங்கடந்தும் சுவை தரும் என்ற உறுதியான நம்பிக்கையில்தான், அன்று (9-2-1943 மற்றும் 14-3-1943) இரு வேறு நகரங்களில் – முதலில் சென்னையிலும் அடுத்தது சேலத்திலும்- நடைபெற்ற இரண்டு பொருள் நிறைந்த சொற்போர் நிகழ்வுகளைக் கேளாதோரும் படித்து மகிழ்ந்திருக்க வெளிக்கொணரப்பட்டது அந்நூல் முதற்பதிப்பு 1943இல். முதல் பத்தாண்டுகளுக்குள் ‘தீ பரவட்டும்’ நான்கு பதிப்புகளைக் கண்டது என்பதே அதன் தீங்கற்ற தன்மைக்கும் மக்கள் அந்நூலுக்கு வழங்கிய ஆதரவுக்கும் சான்று.

நிகழ்வுகளின் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்வது நல்லதல்லவா? ‘தீ பரவட்டும்’ என்பதை நியாயப்படுத்துவதற்கும் உதவும். திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலங்களில், தமிழில் சில இலக்கியங்கள் புராண இதிகாசக் கருத்துகளை நிலைநிறுத்த உதவுவதுடன், அதன் மூலம் பகுத்தறிவுக்கு உடன்படாத மூட நம்பிக்கைகளை வளர்த்துவிடுவதாக உள்ளன. எனவே, அந்நூல்கள் தமிழர் பார்வையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களது எதிர்ப்பு என்பது தமிழுக்கோ, தமிழ் இலக்கியங்களுக்கோ எதிரானது அல்ல. தமிழில் நிலவும் இலக்கியங்களால் தமிழர் மரபுகள், நம்பிக்கைகளுக்கு ஒவ்வாத கருத்துகள் தமிழ் மக்கள் மனதில் பதிய வைப்பனவாக இருக்கலாகாது என்பதே கொள்கை. இந்த வகையில், கம்ப ராமாயணமும் பெரிய புராணமும் திராவிட இயக்க கருத்தாழத்தின்படி நீக்கப்பட வேண்டிய நூல்கள் என்ற நிலைப்பாடு கொண்டிருந்த காலம் அது. அக்கருத்தின் குறியீடாக, அந்நூல்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் பேசி வந்தது உண்மை. இலக்கிய அறிஞர்கள் பலர், இலக்கியச் சுவை மிகுந்த இத்தகைய நூல்களைக் கொளுத்துவது என்று பேசி வருவது சரியல்ல என்ற தமது தரப்புக் கருத்தை வலுவாக வெளிப்படுத்தி நின்றனர். இது ஒரு கருத்துப்போர் அல்ல; ‘உரையாடல்’ (‘டிபேட்’) என்றுதான் அந்த வாதப் பிரதிவாதங்கள் குறிப்பிட்டன.

முதல் உரையாடல் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் 9-2-1943 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது. “கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர், தோழர். இராமச்சந்திரஞ் செட்டியார், பி.ஏ., பி.எல். தலைமை வகித்தார். உரையாடலில், தோழர்கள் சி.என். அண்ணாத்துரை எம்.ஏ., ஈழத்தடிகள் பி.ஏ., ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ.,பி.எல்., சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு தத்தம் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்” என அவ்வெளியீடு பதிவு செய்துள்ளது. மேலும், “கூட்டத்தைப் பற்றிய எவ்விதமான விளம்பரமும் செய்யப்படவில்லை என்றபோதிலும், மக்கள் திரளாக வந்து குழுமியிருந்தனர். தன்மதிப்பு இயக்கத் தோழர்கள் பல நூற்றுக்கணக்கானவர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் புலவர்களும் தாய்மார்கள் பலரும் மண்டபம் நிறையக் குழுமியிருந்தனர்” என்ற தகவலும் உள்ளது.

கூட்டம், எவ்வளவு நாகரிகமாகவும், நடுநிலை எண்ணத்தோடும், கூடியுள்ளது என்பதைக் கூட்டத் தலைவரை முன்மொழிந்த சட்டக் கல்லூரித் தமிழ்க் கழக அமைச்சர் தோழர் வேணுகோபாலன் கூற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். அவர் கூறியது இதோ அப்படியே.

"பெரியோர்களே, தமிழருக்குச் செல்வம் போன்ற கம்ப ராமாயணம், பெரிய புராணம், ஆகிய நூற்களைக் கொளுத்த வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று பெரியார் ஈ.வெ. ராமசாமி கூறியது கேட்டு, தமிழ் மக்கள் கோபம் கொள்வது இயற்கை. ஆனால், சுயமரியாதைக்காரர்களின் தீர்மானத்தை புறக்கணிப்பதும் கூடாது. ஆகவே, அது பற்றி அவர்களின் கருத்தை அறிய தோழர் அண்ணாதுரையை அழைத்துள்ளோம். அவர் இந்திரஜித்துக்குச் சமம் என்று கூறுவேன். அவருரையை மறுத்துப் பேச, திருவாளர் சேதுப்பிள்ளை ராமபிரான்போல் வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலைமையாளராக இருக்க, ஜனக மகாராஜனைப்போல ராமச்சந்திரன் செட்டியார் வந்திருக்கிறார். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்க வேண்டும் என விழைகிறேன்.’’

தலைமை தங்கிய சி. எம். ராமச்சந்திரன் செட்டியார் (இந்து மத தர்ம பரிபாலன போர்டு கமிஷனர்) ‘’விவாதிக்கப்படும் இவ்விஷயம் மிக முக்கியமானது. விவாதிக்க வந்திருப்போரும் வல்லவர்கள். ஆகவே, விவாதம் மேலான நிலையிலேயே இருக்கும். நான் அவர்கள் பேசிய பின்னர் ஏதேனும் கூறுவதே முறை. ஆதலால், முன்கூட்டி ஏதும் கூறாது, முதலில் தோழர் அண்ணாதுரையை பேசும்படி அழைக்கிறேன்’’ என்று அண்ணாவைப் பேச அழைத்தார்.

அறிஞர் அண்ணா, ‘’கற்றுணர்ந்த நம் சேதுப்பிள்ளையிடம் தமிழ்ப் பெரியாரும் சைவத் திருவினருமான தோழர் இராமச்சந்திரஞ்செட்டியார் தலைமையில் நீதிமன்றங்களுக்கு நீதிமான்களையும் நீதி உரைப்போரையும் தயாரித்துத் தரும் சட்டக் கல்லூரி மன்றத்தில் விவாதம் நிகழ்த்துவது மிக்க சந்தோஷம். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கும்’’ என்று தொடங்கி ஒன்றரை மணி நேரம் உரையாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது உரையின் மைய நோக்கம், “ராமாயணம், பெரிய புராணம், முதலியவற்றைக் கண்டித்தால், அறிவிற் சிறந்தோர் கூடியுள்ள இங்கு, நாங்கள் கண்டிப்பது அவைகளில் புகுந்துள்ள பொய்மைகள், ஆபாசங்கள் ஆகியவற்றையே என்பதை அறிவர்” என விளக்கினார். உரையின் எந்த இடத்திலும் நயமற்ற தீச்சொற்கள் ஏதுமிலாத் தீந்தமிழ் உரை அது.

திராவிட இயக்கம் தன்காலத்திற்கு முற்பட்ட (ahead of the times) முற்போக்கான கருத்துகளைக் கூறி வருவதால், “கம்ப ராமாயணம், பெரிய புராணம், ஆகியவற்றை கொளுத்த வேண்டும் என்று பெரியார் ஈ வெ. இராமசாமி கூறியது கண்டு, மக்களுக்கு கோபம் வருவது இயற்கை... உண்மை, மக்கள் கோபிப்பர் என்பது நாங்கள் அறிவோம். நாங்கள் துவக்கிய எக்காரியத்துக்கும் நாங்கள் புகுத்திய எக்கருத்துக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு, மக்கள் கோபித்து, பின்னர் எம்முடன் சேர்ந்து எமது பாசறைகளுக்கு வந்துட்டனர்” என்பதை நயம்பட அறிவித்தார். ஆனால் யாரையும் புண்படச் செய்ய வேண்டுமென்பதற்காக, இக்காரியத்தை நாங்கள் துவக்கினோமில்லை” என்பதையும் தெளிவுபடுத்தினார்.

தனது தலைவரான பெரியாரின் கருத்தை நியாயப்படுத்த, "தமிழருக்குத் தமிழ் நெறி, தமிழ் முறை, ஒழுக்கம், வீரம், கற்பு, காதல் எனும் பண்புகளைத் தரக் கூடியன கலையாக இருத்தல் வேண்டுமேயொழிய, வேறோர் இனத்தைப் புகழ்வதும், அதற்கு ஆதிக்கமளித்துத் தமிழ் மக்கள் மனதிலே தன்னம்பிக்கையற்றுப் போகும்படிசெய்வதும், தமது இனத்தைப் பற்றியே தாழ்வாகக் கருதிக்கொள்ளும்படியான நிலைமை உண்டாக்குவதுமான கதை, காவியம், இலக்கியமென்பவைகளைக் கொளுத்த வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம். தமிழர் என்று நான் கூறும்போது, தமிழ்மொழி பேசுவோர் என்பவரை மட்டுமல்ல நான் குறிப்பது, தமிழ் இனத்தை” என்பதை நினைவூட்டி, “கலை , இலக்கியம், கற்பனை நூல் ஆகியவற்றின் மீதெல்லாமா எங்களுக்கு விரோதம்? இல்லை. தொல்காப்பியத்தைத் தொட்டோமில்லை. நற்றிணையை, நல்ல குறுந்தொகையை, கற்றறிந்தோர் ஏத்துங்கலியை, அகத்தைப் புறத்தை அழிக்கப் புறப்பட்டோமில்லை; ஆரியத்தை அழகுறப் புகுத்தித், தமிழரை அழிக்கும் நூற்களையே கண்டிக்கிறோம்” என்பதைக் கூட்டத்தினர் புரிந்துகொள்ளும்படி விளக்கினார்.

“பழைய மூல நூற்கள் இருக்கும்போது, இடையே ஆரியத்தைப் புகுத்தவந்த ராமாயணத்தை அழிப்பதனால் இலக்கியம் இறந்துபடுமா? கலை கெடுமா?” என்ற ஆணித்தரமான கேள்விகளையும் அவையினர் முன் வைத்தார். கம்பரின் கவித் திறமையைக்கண்டு நாங்கள் வியக்கிறோம். அந்தத் திறமை, ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு திகைக்கிறோம். அவரது கவிதையின் விளைவாகத் தமிழ்இனம் தாழ்ச்சியுற, ஆரியத்திடம் அடிமைப்படும் விளைவு நேரிட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவித்திறனை யல்ல; அதன் தன்மையை, விளைவை’’த்தான் என்பதை எளிமையாகத் தெளிவு படுத்தினார்.

‘’நமது பண்டிதர்களாவது இன்று வரை பொதுமக்களிடம் சென்று, இத்தகைய புராண இதிகாசங்கள் புனைந்துரை கவிகளின் கற்பனை, மக்களுக்குச் சில நீதிகளைப் புகுத்தும் நூற்கள், ஒழுக்கத்துக்காகக் கருத்து கூறும் ஏடுகள், கோயில் கட்டிக் கும்பிட அல்ல என்று கூறினது உண்டா, கூறுவரா?" என்று கேட்டார் அண்ணா.

பெரிய புராணம் பற்றி, “இனத்தைத் தாழ்த்தும் கருத்துரைகளை நாங்கள் கண்டிக்கவே பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம். அந்தப் புராணத்திலே வரும் அடியவர்களின் கதையினால் ஏற்படும் கடவுள் கருத்துரைகள், எவ்வளவு அறிவீனமானதாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். பக்திக்காக அடியவன் எதுவும் செய்வான் என்று அவன் பெருமையைக் கூறப் பெரிய புராணம் எழுதப்பட்டதென்றால், ஆண்டவன் இத்தனை கடுமையும் கொடுமையும் நிரம்பிய சோதனைகளைச் செய்தார் என்று கூறுவது, கடவுள் இலக்கணத்துக்கே இழிவைத் தராதா என்று கேட்கிறேன். உலகிலே எந்நாட்டிலும் எந்தப் பக்திமானுக்கும் நேரிடாத சோதனை, இங்கு மட்டும் நேரிடக் காரணம் என்ன?” என்ற பகுத்தறிவினடிப்படையிலான கேள்வியை எழுப்பினார்.

அவை முன்னர் அண்ணா எடுத்துவைத்த வாதங்களுக்கு நற்றமிழறிஞர் சேதுப்பிள்ளையின் மறுப்புவாதங்களும் குறையா நயமுடன், தமிழ் வளத்துடன் ஆனால் சுருக்கமாகவே வந்தன. சேதுப்பிள்ளையின் திறமையான மறுப்புரையில், “ இராவணன் தமிழ் மன்னன் அல்ல; அவன் ஆரியமொழி பேசுபவன் “ என்ற கருத்தை முன்நிறுத்தித் தானிழைத்த குற்றத்திற்காக ஆரிய மன்னன் - இரக்கமென்ற ஒரு பொருளிலா அரக்கன்- இராவணன் தண்டிக்கப்பட்டதைத் திராவிடர்கள் எதிர்க்கிறார்களா? என்ற வினாவை முன் நிறுத்தினார். கம்பரின் கவியால், சீதை நமக்கு ஓர் தமிழ் மங்கையாகவே தென்படுகிறாளென்றுரைத்தார். வில்முறித்து மணம் என்பதை மாற்றி, தமிழ் மரபுக்கேற்ப ‘’அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’’ எனக் காதல் மணமாகக் கம்பர் காட்டியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். பெரியபுராணம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

தமிழருக்குக் கம்ப இராமாயணம் செல்வம் போன்றதாகும். குற்றங்குறையுடைய ஆரிய பாத்திரங்களைக் கம்பர் தீட்டுகையில், பூசி மெழுகினார் என்று அண்ணா உரைத்தார். சிறியோர் செய்த சிறு பிழை பொறுத்தல் பெரியோர் கடன். கம்பரின் பெருந்தன்மையை அது காட்டுகிறது. இராவணனிடம் வீரமும் மானமும் இருந்தது, இரக்கமில்லை. எனவே, ஆணவத்தால் அழிந்தான் என்று கம்பர் நிறுவியிருப்பதால் அதனை எதிர்க்க வேண்டியதில்லை என்றார்.

அடுத்து உரையாடிய ஈழத்து அடிகள் மிகச் சுருக்கமாக வைத்த வாதம், பல காலமாகவே சுயமரியாதை இயக்கம் புராண, இதிகாசங்கள் யாவும் பொய்மைகளை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதைத் தெளிவுபடுத்தி அவற்றை எதிர்த்து வருகிறது. அதே அடிப்படையில்தான் இப்போதும் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், சேதுப்பிள்ளை இராவணனை ஆரிய மன்னன் எனக் குறிப்பிட்டது இதுவரை அவரே குறிப்பிடாத புதுச்செய்தியாக உள்ளது எனச் சாடினார்.

இரண்டாவது நிகழ்வு 14-3-1943 இல் மாலை 6 மணியளவில் சேலம் செவ்வாய்ப்பேட்டைத் தேவாங்க பாடசாலை மண்டபத்தில், கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமா,வேண்டாமா’’ என்ற பொருள் பற்றியே, பெரியதோர் கூட்டத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் கல்லூரி தலைமைப் பேராசிரியர் தோழர் ஏ. இராமசாமி தலைமை வகித்தார். “மேற்படி ஏடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று திராவிட நாடு ஆசிரியர் சி. என். அண்ணாதுரை பேசினார். ஒழிக்க வேண்டாம் என்பது பற்றி பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார் சொற்பொழிவாற்றினார்” என்று குறிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சொற்போர் எக்கட்சி கழகச் சார்பிலும் இன்றி பொதுவான முறையிலே நடத்தப்பட்டதுடன் சொற்போரின் போக்கும் மிகக் கண்ணியமான முறையிலே இருந்தது என்பதும் பதிவாகி உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்வாதம் செய்ய வந்தவர், நாவலர் சோமசுந்தர பாரதியார். 1937 முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற தமிழறிஞர். தமிழர் பெருமையை உயர்த்துவதிலும் தமிழர் பண்பாட்டைக் காப்பதிலும் முன்னோடி எனத் திராவிட இயக்கத்தாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இவற்றை எல்லாம் அண்ணா குறிப்பிட்டுத் தனது கருத்தை எடுத்து வைத்தார். “ஆரியத்துக்குப் பலம் அளித்து தமிழரைக் கெடுப்பதால்தான் கம்பராமாயணத்தை எதிர்க்கிறோம்’’ என்ற தனது நிலையை மீண்டும் அண்ணா தெளிவுபடுத்தினார். நாவலர் சோமசுந்தர பாரதியார், கம்பராமாயணத்தை கொளுத்த வேண்டியதில்லை, அதே சமயத்தில் அதிலுள்ள தமிழ் மரபுக்கு எதிரானவைகள் பற்றி மக்களிடையே தொடர்ந்து விளக்கம் அளித்து வர வேண்டும் என்று வலியுறுத்தினார். கம்ப ராமாயணத்தின் அருமை பெருமைகளை இரு தரப்புமே ஒத்துக்கொண்டு இருப்பதால், செய்ய வேண்டியது நூலை கொளுத்துவது அல்ல; அந்நூலின் பாதகங்களை மக்களுக்கு தொடர்ந்து எடுத்துச் சென்று, விளக்கி மக்களை விழிப்படையச் செய்து நல்வழிப்படுத்த வேண்டும் அதுவே நல்ல முயற்சியாக இருக்கும் என்று கூறினார்.

இப்படி உயர் நாகரிகமான முறையில், கூட்டத்தில் எந்தச் சலசலப்புமில்லாமல், மதிக்கத்தக்க அறிஞர்கள் இருதரப்பிலும் நின்று அழகு தமிழில், பண்பாடான முறையில் இரண்டு ஊர்களில் வேறுவேறு நாள்களில் கருத்துப் பகிர்வுகள் நிகழ்த்தியதன் தொகுப்புதான் 'தீ பரவட்டும்'.

எந்த தீச்சொல்லும் இடம்பெறாத இந்த நூலின் தலைப்புதான் சுமார் 80 ஆண்டுகளாகத் தமிழுணர்வைத் தமிழர் உயிர்ப்பினைத் தொய்விலாது தொடரச் செய்து வருகிறது. தற்போதும் இத்தலைப்பு தடைகளுக்குள்ளாக்கப்படுவதே அதன் வீரியத்துக்கு நற்சான்று.

(பிப். 3 - அண்ணா நினைவு நாள்)

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Let Arignar Anna's flame of knowledge spread, Two important events in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT