கரூர் கூட்ட நெரிசல் தினமணி
சிறப்புக் கட்டுரைகள்

நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் எளிதாக நடைமுறைப்படுத்த ஏதுவானதா?

கரூரில் நடந்த சோக நிகழ்வின் பின்னணியில் புதிய எஸ்.ஓ.பி. வெளியீடு பற்றி...

இராஜ முத்திருளாண்டி

பத்து நாள்களுக்கு முன் நாம் கடந்துவந்த ஆண்டில் (2025) செப்டம்பர் மாதத்தில் கரூரில் புதிய அரசியல் கட்சியொன்றின் பரப்புரையின்போது 41 மனித உயிர்கள் கொத்தாகப் பலியான பெருந்துயரை மறக்கவும் கூடுமோ? நிலைத்துள்ள கனத்த கரூர் சோகப் பின்புலத்தில், பொதுக் கூட்டங்களை, சாலை வலங்கள் ஒழுங்குபடுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. இடையில், இவ்விஷயத்தில் நீதிமன்றத் தலையீடுகளும் நிகழ்ந்ததை நாமறிவோம். மிக அண்மையில், மாநிலத்தில் பொதுமக்கள் கூடும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) தமிழ்நாடு அரசால், அரசாணை மூலம் (G.O No 5 Home (Police VIII) Department, Dated 5-1-2026) வெளிப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்க உரிய செயல்பாடுதானிது.

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கண்டன, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சாலை வலங்கள், பெரிய அளவில் மக்கள் கூடும் பல்வேறு நிகழ்வுகள் முதலியன ஜனநாயக வெளிப்பாடுகளிலும், குடிமக்களின் கலாசார, மத நடைமுறைகளிலும், ஈடுபாடுகளிலும் இன்றியமையாதவை ஆகியுள்ளன. என்றாலும், 'கட்டுப்பாடற்ற கூட்டங்கள் மனித உயிர், பொது ஒழுங்கு, அரசு, தனியார் சொத்துகளுக்குச் சேதம் மற்றும் ஆபத்துகளையும் விளைவிக்கக் கூடும்' என்ற அனுபவ எச்சரிக்கை பொதிந்த முகப்புரையுடன் தற்போதைய எஸ்.ஓ.பி. அறிவிப்பாகியுள்ளது. இந்த எஸ்.ஓ.பி. பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமல்ல, ஊர்வலங்கள், ‘ரோடு ஷோ’ எனப்படும் தலைவர்களது 'சாலை வலங்கள்' முதலியவற்றுக்கும் சேர்த்தே செயல்பாட்டு நடைமுறைகளை வகுத்தளித்துள்ளது.

இந்த எஸ்.ஓ.பியைச் சற்று விரிவாக அலசிப் பார்ப்பதற்கு முன், ஒரு பறவைப் பார்வையாகக் காணும்போது, நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் கடமைப் பொறுப்புகள் (Vide SOP Section 9), காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு (SOP Section 10) ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நிகழ்வில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி உறுதி செய்வதற்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களே முதன்மைப் பொறுப்புக் கொண்டவர்கள் என்பதை எஸ்.ஓ.பி. தெளிவாக வலியுறுத்துகிறது [Preamble d) iii].

ஆரம்பத்திலேயே, இந்த எஸ்.ஓ.பி.யின் முகப்புரையில் (உட்பிரிவு d) அரசின் பங்காக என்னென்ன உறுதி செய்யப்படும் என்ற முக்கியமான அம்சம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசுத் தரப்பில்,

  • 1. ஏற்பாட்டாளர்களுக்கும், நிகழ்வுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் (நிகழ்வு நடத்த அனுமதிக்கப்பட்டால், எந்தவொரு வெளிப்புற சக்தியாலும் தொந்தரவு செய்யப்படாது).

  • 2. அனுமதிக்கப்படும் நிகழ்ச்சி, எவ்வகையிலும் பொதுமக்களுக்குத் தொந்தரவு, அசௌகரியத்தை ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்படும்.

  • 3. நிகழ்வை நடத்துவதால் போக்குவரத்து, பொது ஒழுங்கு போன்றவை பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்யும்.

இதனுடன், முன்னர் குறிப்பிட்டுள்ளவாறு பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி உறுதி செய்வதற்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களே முழுப்பொறுப்பு என்பதை மிகத்தெளிவாகப் புரிந்துகொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செயல்பட வேண்டும். அடிப்படையில், இந்த எஸ்.ஓ.பி. நான்கு அடுக்குகள் கொண்டதொரு செயல்பாட்டு நடைமுறைகளை வகுப்பதாக அமைந்துள்ளது.

  • 1. நிகழ்வு நடத்த விரும்புவோர் உரியவாறு விண்ணப்பம் அளிக்கும் நிலை (Pre-Event Application Process-SOP Section 5).

  • 2. விண்ணப்பம் பரிசீலனை, அனுமதி வழங்கல் நிலை (Scrutiny and Approval Process-SOP Section 6).

  • 3. நிகழ்வு மேலாண்மை (Managing the Event).

  • 4. நிகழ்வுக்குப் பிந்தைய நிலவர மதிப்பீடு (Post-event Assessment of compliance, complaints etc- SOP Section 12).

எஸ்.ஓ.பி. எந்த நிகழ்வுகளுக்குப் பொருந்தும்?

இந்த எஸ்.ஓ.பி. 5,000 பேருக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருக்கும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், சாலை வலங்கள் பவனிகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முதலியவற்றுக்கு மட்டுமே பொருந்தும். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் குறைவாக இருக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் இந்த எஸ்.ஓ.பி. பொருந்தாது. அவ்வாறான நிகழ்வுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும். வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நிகழ்வுகளாக ஏற்பாடு செய்யப்படும் மதக் கூட்டங்கள், முன்னுதாரணங்களால் இடம் / பாதை முதலியன ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட மத நிகழ்வுகளை இந்த செயல்பாட்டு நடைமுறைகள் கட்டுப்படுத்தாது. அதுபோலவே, தேர்தல் காலங்களில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகள், மாதிரி நடத்தை விதிகள் (எம்.சி.சி.) நடைமுறையில் இருக்கும் காலங்களில், கூட்டங்கள் நடத்த 'சுவிதா' போர்ட்டல் மூலம் விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டியதிருக்கும். இருப்பினும், கூட்டப் பாதுகாப்பு விதிமுறைகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் தொடர்புடைய அத்தியாவசிய வசதிகளை வழங்குவது தொடர்பான நிகழ்வு அமைப்பாளரின் பொறுப்புகள் எஸ்.ஓ.பி.யில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு தொடர்ந்து பொருந்தும்.

16 பக்க எஸ்.ஓ.பி.

மொத்தம் 56 பக்கங்கள் கொண்ட தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் 16 பக்க இணைப்பாக வழங்கப்பட்டிருப்பதே கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) ஆகும். இதனுடன் (1முதல் 7 வரை) படிவங்களும் அதற்கடுத்து இரண்டு பிற்சேர்க்கைகளும் உள்ளன.

படிவங்கள் 1, 2.5.

எஸ்.ஓ.பி.யுடன் உள்ள படிவங்களில் குறிப்பாக, படிவம்-1 என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், (சென்னையைப் பொருத்தவரை சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர்) தத்தமது ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் எந்தெந்த இடங்களில், விதிக்கப்படும் நிபந்தனைகளுக்குள்பட்டு பொதுக் கூட்டங்கள் முதலியவற்றை நடத்தலாம்; எந்தெந்த வழித்தடங்களில் ஊர்வலங்கள், சாலை வலங்கள் நடத்தலாம்; ஒவ்வொரு இடத்திலும் அதிக அளவாக எவ்வளவு பேர் நின்றுகொண்டோ, அமர்ந்தோ திரள முடியும் என்பதை முன்கூட்டியே உரியவாறு நிர்ணயித்து, அறிவிப்புச் செய்து வைத்திருக்கும் (Designated places/ routes-vide section 4 of the G.O.) தகவலைக் கொண்டதாக இருக்கும்.

கூட்டம் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த விரும்புவோர், அந்தந்தப் பகுதி காவல் நிலைய ஆளுகையுள்ள காவல் துறை அதிகாரியிடம் கூட்டம் நடத்த அனுமதி வேண்டி நேரில் அளிக்கப்பட உரிய விண்ணப்பம், படிவம்-2. இப்படிவங்கள் இரண்டுடன், நிகழ்வினை நடத்த வழங்கப்படும் நிபந்தனைகள் அடங்கிய அனுமதியும் (படிவம்-5) நிகழ்வுகளை, பொதுக் கூட்டங்களை நடத்தக் கருதுவோர்களால் கூர்ந்து கவனங்கொள்ள உரியதாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, இனி, மாநிலத்தின் எப்பகுதியிலும் (முன்னர் குறிப்பிட்ட படிவம்1இல்), அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இடங்கள், வழித்தடங்களில் மட்டுமே, கணித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் கூட்டம் அல்லது பிற நிகழ்வுகளை நடத்த முடியும்.

அறிவிப்புச் செய்யப்படாத வேறு இடங்களில் நிகழ்வுகளை நடத்துவதாயின், அவ்விடத்தின் அமைப்பு, பரப்பு, கூட்டக் கொள்ளளவு முதலியன குறித்துப் பொதுப் பணித் துறைப் பொறியாளர் அளிக்கும் சான்றிதழ், கூட்டம் நடத்த நிலம் / இட உரிமையாளரின் எழுத்துப்பூர்வ இசைவு, நுழைவு, வெளியேற்ற வழிகள் முதலியன தெளிவாகக் குறிப்பிடப்பட்ட தளவரைபடம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட அவசியமாக்கப்பட்டுள்ளது. (எஸ்.ஓ.பி. படிவம் 2, பிரிவு 4)

அனுமதி கோரும் விண்ணப்பம் (படிவம்- 2)

கூட்டம் நடத்த அனுமதி வேண்டி காவல்துறை அலுவலரிடம் நேரில் விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் விரிவான பல விவரங்களுடனும், இணைப்புகளுடனும் அளிக்க வேண்டியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளிப்பவர் அல்லது நிகழ்வு ஏற்பாட்டாளர் குறித்த முழு விவரங்கள்; நிகழ்வு என்ன வகையானது? (பொதுக்கூட்டம், ஊர்வலம், சாலை வலம் போன்றவை); நிகழ்வு நடத்த உத்தேசித்துள்ள இடம் அல்லது வழித்தடம் (படிவம்-1ன்படி அங்கீகரிக்கப்பட்டதா?) குறித்த விவரங்கள்; நிகழ்வு நாள், நேரம் (தொடக்கம், முடிவு) ஆகியன அளிக்க வேண்டும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஊர்வலமாக இருந்தால், எங்கு தொடங்கி, எவ்வழிச் சென்று எங்கு முடியும் என்ற விவரங்கள் (ரூட் மேப்புடன்); முதன்மை விருந்தினர் வருகையும் அங்கிருந்து, வெளிச் செல்லும் நேரமும்; எதிர்பார்க்கப்படும் கூட்ட அளவு; நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கியத் தலைவர்கள், பேச்சாளர்கள் விவரங்களுடன் முழு நிகழ்ச்சி நிரல், எதிர்பார்க்கப்படும் வாகனங்களின், எண்ணிக்கை, அவை முறையாக நிறுத்தப்படும் இடம், அளவு, பிற ஏற்பாட்டு விவரங்கள், 50 வாகனங்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ள விவரம் ஆகியன யாவும் விண்ணப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும்.

நிகழ்வானது ‘சாலை வலம்’ என்றால், இடம், எங்கிருந்து எதுவரை, எங்கே நிறுத்தம் / பேச்சு, நிகழ்வு நாள், நேரம், முதன்மை விருந்தினர் வருகை நேரம் (தொடக்கத்தில், முடிவில்), எதிர்பார்க்கும் கூட்ட அளவு வழியில் ஒவ்வொரு இடத்திலும், தொடரும் வாகனங்கள் எண்ணிக்கை, கூட்டத்தின் அளவு குறித்து பொதுப் பணித் துறைப் பொறியாளர் மதிப்பீட்டுச் சான்று (இணைப்பு), சாலையைப் பராமரிக்கும் / நிர்வகிக்கும் அதிகார அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ள விவரம் ஆகியன இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில், கூட்டத்திற்கான பாதுகாப்பு, பிற வசதிகள் குறித்த முழு விவரங்கள், முதலுதவி மையங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவர், செவிலியர், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் ஏற்பாடு, கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு வேலிகள், பிரிவுகள், தடுப்புகள், கயிற்றுத் தடுப்புகள், கூட்ட மேலாண்மைக்கென 100 பேருக்கு ஒரு தன்னார்வலர் ஏற்பாடு, முதலிய பல்வேறு விவரங்களும் முழுமையாக விண்ணப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும். இவற்றுடன், இடம், சாலைப் பயன்பாட்டுக்கு உரிய அனுமதி, மதிப்பீட்டுச் சான்றுகளுடன், விதிக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் மீறப்படாமல் கடைப்பிடிக்கப்படும் என்ற உறுதிமொழியளித்து விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு விண்ணப்பத்தை உரிய காவல்துறை அலுவலரிடம் (கவனிக்க) நேரில் வழங்க வேண்டும். கூடுதலாகத் தனியே படிவம் -3 இல் நிபந்தனைகள் அனைத்தையும் பொறுப்போடு ஏற்றுச்செயல்பட ஒரு 13 அம்ச இசைவும் எழுத்துப்பூர்வமாகத் தரவேண்டும்.

அனுமதி கோரும் விண்ணப்பம் எப்போது அளிப்பது?

1. அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இடத்தில் நிகழ்வை நடத்துவதாக இருந்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாளுக்குப் பத்து (10) நாள்களுக்கு முன் (21 நாள்களுக்கு முன் அமையாமல்) விண்ணப்பம் முன் விவரிக்கப்பட்டவாறு சமர்ப்பிக்க வேண்டும்.

2. அறிவிக்கப்படாத, மாற்று இடத்தில் நிகழ்வு திட்டமிடப்பட்டால், முன்மொழியப்பட்ட தேதிக்கு பதினைந்து (15) நாள்களுக்கு முன்பு, (ஆனால் முப்பது (30) நாள்களுக்கு முன் இல்லாமல்) வழங்க வேண்டும்.

3. கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு, எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் எண்ணிக்கை 50,000-க்கும் அதிகமாக இருந்தால், நிகழ்வுக்கு முன்மொழியப்பட்ட தேதிக்கு 30 நாள்களுக்கு முன்பே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

4. மேற்கண்ட 1 & 2 க்கு விதிவிலக்காக, திடீர் சம்பவங்கள் அல்லது விஷயங்களால் எழும் அவசர ஜனநாயக வெளிப்பாடுகளுக்கு அவசியமான போராட்டங்கள் அல்லது கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் / பெருநகர சென்னை காவல்துறை ஆணையர், தங்கள் விருப்பப்படி, விண்ணப்பத்தைப் பெறவும், அதனை SDPO-யால் பரிசீலனை செய்யவும் அனுமதிக்கலாம்.

ஒப்புகை, அனுமதி, நிபந்தனைகள்

விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளும் அலுவலர், அதற்கான ஒப்புகையைப் படிவம்-4இல் உள்ளவாறு வழங்க வேண்டும். அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து 18 நிபந்தனைகள், தேவைப்படும் கூடுதல் நிபந்தனைகளுடன் நிகழ்வு நடப்பதற்குக் குறைந்தது 5 நாள்களுக்கு முன் அனுமதி அல்லது அனுமதி மறுப்பு வழங்கப்படும்.( எஸ்.ஓ.பி. பிரிவு 6 d).

அனுமதி மறுக்கப்பட உரியதானால், படிவம்-6 இல் கண்டுள்ளவாறு உரியக் காரணங்களைப் பட்டியலிட்டு, குறைகளைக் களைந்து, மீண்டும் மாற்றிடம் வேண்டியோ, பிற நாளிலோ அனுமதிக்காக விண்ணப்பிக்க வாய்ப்பளித்து ஆணை பிறப்பிக்கலாம். நிகழ்வு நடந்தபின், இடம், சேதங்கள், திடக்கழிவுகள் முதலியவற்றை மதிப்பீடு செய்து அபராதம், இழப்பீடு முதலியன விதிப்பது வழக்குத் தொடர்வது குறித்தது படிவம் -7.

எஸ்.ஓ.பி. எளிதாகச் செயல்படுத்த ஏதுவாக உள்ளதா?

அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஓ.பி. மிக விஸ்தாரமானது என்ற தோற்றம் உள்ளது. இரண்டு பிற்சேர்க்கைகளாக இணைத்திருப்பவற்றுள் (Annexures A & B) சில பொதுவான, நிலைத்த (ஸ்டாண்டர்டு) கருத்துகள், ஏற்பாடுகள் எதிர்பார்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு சதுர மீட்டருக்கு நிற்பதென்றால் எத்தனை பேர்?, அமர்ந்திருந்தால் எத்தனை பேர், எத்தனை பேருக்குள் இருந்தால் இலகுவாக ஒரு இடத்திலிருந்து கூட்டத்திற்குள் மற்ற இடங்களுக்கு ஒருவர் வசதியாக நகர அல்லது பரவ இயலும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்ற தெளிவான செயல்முறை எஸ்.ஓ.பி.யில் இல்லை.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டவாறான ஏற்பாடுகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரால் நிகழ்வு நடக்கும் வரை செய்யப்படாவிட்டால் என்ன செய்வது? அல்லது அனுமதி அளிக்கப்படும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பாட்டாளர் நிகழ்வு நடக்கும் வரை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? பார்வையாளர்கள் காத்திருப்பு நேரம் விதிக்கப்பட்டுள்ள 2 மணி நேரத்திற்கு மேல் முக்கியப் பிரமுகரின் வருகை பெரிதும் தாமதமானால் என்ன செய்வது?

விண்ணப்பம் அளிக்க வரையறுக்கப்பட்டுள்ள காலம் (10 நாள்களுக்கு முன்), நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள காலம் (நிகழ்வுக்கு 5 நாள்கள் முன்) ஆகியவற்றுக்கிடையே, விதிக்கப்பட்டுள்ள பற்பல நிபந்தனைகளின்படி உறுதியான கட்டமைப்புடன், மேடை, வேலிகள், தடுப்புகள், சுகாதார வசதிகள், ஒலி, ஒளி, மின்சார அமைப்புகள் முதலியவற்றை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மிக அவசர கதியில் நிறைவேற்ற வேண்டியதாக இருக்கும். அல்லது நிறைவேற்றாத நிலை ஏற்படலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள நேர்வுகளில், பாதுகாப்பு உள்ளிட்ட, பிற வசதிகள் குறைபாடுகளோடு நிகழ்வுகள் / கூட்டங்கள் நடைபெறும் வாய்ப்புகள் ஏற்படலாம். அவற்றை முன்கூட்டியே தவிர்க்க, மக்களுக்கான பாதுகாப்பு, பிற வசதிகளை உறுதிப்படுத்த வலுவான ஏற்பாடு எஸ்.ஓ.பி.யில் இல்லையே. அப்படியுள்ள சூழல்களில் நிகழ்வை நிறுத்தலாமா? தள்ளி வைக்கலாமா? என்பதை (கரூர் நினைவிலாவது) எஸ்.ஓ.பி. உறுதிப்படத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். நிலையான செயல்முறைகள் வேறெதற்கு?

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாட்டில் 5,000 பேர்களுக்கு அதிகமான கூட்டம் கூடும் நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும். மத வழிபாட்டுத்தலங்களில் கூடும் கூட்டங்களுக்குப் பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் மத நிகழ்வுகளில், வழிபாட்டுத் தலங்களில் அதிக மனித உயிர்கள் இழப்புகள் நிகழ்ந்துள்ள வரலாற்றை நோக்கும்போது, இந்த நெறிமுறைகளில் மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு விலக்கு அளித்திருப்பது சரியல்ல.

விண்ணப்பத்திற்கான அனுமதி அளிக்கும்போது 18 வகை நிபந்தனைகளும், (படிவம்-5) தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நிகழ்வு நடப்பதற்கு முன்போ அல்லது நிகழ்வின்போதோ அத்தகைய நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் உடனடியான நிவர்த்திக்கோ, தண்டிக்கவோ, வழியைக் காணோம். நிகழ்வை ரத்து செய்யவும் எஸ்.ஓ.பி. மூலம் அதிகாரம் அளிக்கப்படவேண்டும். நிகழ்வு நடந்தபின், விசாரணை, வழக்குகள் நடத்துவது என்ன பயன் தரும்?

நிகழ்வு / கூட்டம் நடைபெற்றபின் இழப்புகள், சேதங்கள், திடக்கழிவு அகற்றுதல் முதலியவற்றுக்கான மதிப்பீடுகளைச் செய்து, அதனடிப்படையில் கூட்ட ஏற்பாட்டாளர்களிடமிருந்து அபராதம் அல்லது இழப்பீட்டுத் தொகை நிர்ணயித்துப் பெற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, விண்ணப்பத்துடன், நியாயமான அளவு முன் பணத்தை வைப்புத்தொகையாக நிர்ணயிப்பது நடைமுறைக்கு எளிதாகும்; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும்; அதனை வளர்க்கும்.

ஒரு வழியாக எஸ்ஓ.பி. வெளியாகியுள்ளதை வரவேற்கலாம். அதனை எந்த விலக்குகளுக்கும் யாருக்காகவும் இடமளிக்காமல், 'மக்கள் பாதுகாப்பே தலை' எனக்கொண்டு உரிய துறைகளின் அலுவலர்கள் உறுதிப்படச் செயல்படுத்த வேண்டும். இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள தேவைகளும், எஸ்.ஓ.பி.யை நடைமுறைப்படுத்தும் போது பெறக்கூடிய அனுபவங்களும் வருங்காலத்தில் அதன் திருத்தங்களுக்கும் செம்மைக்கும் வழியமைக்கும் என எதிர்பார்ப்போம்.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Regarding the release of new SOPs in the wake of the tragic incident in Karur...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கச்சத்தீவு திருவிழா: ஜன. 15 முதல் விண்ணப்பம் விநியோகம்

பொங்கலுக்குள் இனிப்பான செய்தி! மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா?

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

அஜித்தைச் சந்தித்த அனிருத்!

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT