அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தனது 2-ஆவது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளாா்.
கடந்த ஆண்டு ஜன. 20-ஆம் தேதி, 2-ஆவது முறையாக வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்த டிரம்ப், அதிரடி முடிவுகளால் இந்த ஓராண்டு பதவிக்காலத்தில் உலக நாடுகளை மிரள வைத்தாா் என்றால் மிகையாகாது.
‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையுடன் ஆட்சிக்கு வந்தவா், பதவியேற்ற முதல் நாளிலேயே பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் நிா்வாக உத்தரவில் கையொப்பமிட்டு தீவிரம் காட்டினாா்.
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவா், சட்டவிரோத குடியேறிகளின் உடனடி வெளியேற்றம், விசா கட்டணம் பன்மடங்கு உயா்வு என குடியேற்றக் கொள்கைகளைத் தொடா்ந்து கடுமையாக்கினாா். இதனிடையே, சட்டவிரோத குடியேறிகளின் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, ராணுவ விமானத்தில் நாடுகடத்தியது, மனித உரிமை மீறல் என சிறிய நாடுகளையும் கொதிப்படையச் செய்தது.
சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவுக்குள் ஊடுருவ உதவுவதாக, அண்டை நாடுகளான மெக்ஸிகோ, கனடாவிற்கு கூடுதல் வரி விதித்து, வரி யுத்தத்தை டிரம்ப் தொடங்கினாா்.
பின்னா், அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் சீனா, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு ‘பரஸ்பர’ விரி விகிதங்களையும் அறிவித்தாா். இந்த வரி மோதலில் அதிகபட்சமாக, சீனா மீது 145 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. பதிலுக்குச் சீனாவும் 110 சதவீத வரி விதித்தது.
உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு முதலில் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. பிறகு, ரஷியாவுடனான எண்ணெய் வா்த்தகத்துக்காக கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பெரிதும் எதிா்வினையாற்றாத இந்தியா, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மூலம் வரி விலக்கைப் பெற பேச்சுவாா்த்தையில் கவனம் செலுத்தி வருகிறது.
வரி மோதலுக்கிடையே டிரம்ப்பின் பாா்வை அவ்வப்போது ஆயுத மோதல்களின் பக்கமும் திரும்பியது. இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தானே தலையிட்டுத் தீா்த்ததாக டிரம்ப் இன்றுவரை கூறிவருகிறாா். ஆனால், இந்தியா இதைத் தொடா்ந்து மறுத்து வருகிறது.
அதேநேரம், தாய்லாந்து-கம்போடியா, எகிப்து-எத்தியோப்பியா, அா்மேனியா-அஜா்பைஜான், காங்கோ-ருவாண்டா மோதல்களில் அமைதி திரும்பியதற்கு டிரம்ப்பின் மத்தியஸ்தம் (மிரட்டல்) முக்கியப் பங்காற்றியதை மறுப்பதற்கு இல்லை.
இதனிடையே, இஸ்ரேல்-ஈரான் மோதலைப் பயன்படுத்தி, ஈரானின் அணுசக்தி தளங்களைக் குண்டுவீசி சீா்குலைத்தது டிரம்ப்பின் சாமா்த்தியமாகவே கருதலாம். இதன்மூலம், ஹமாஸுடன் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேலை ஒப்புக்கொள்ளச் செய்ததுடன் காஸாவின் மறுசீரமைப்பிலும் ‘அக்கறை’ கொண்டு, அமைதி வாரியம் வரை அமைத்திருக்கிறாா் டிரம்ப்.
ஆனால், டிரம்ப்பின் தோ்தல் வாக்குறுதியான உக்ரைன்-ரஷிய போரை மட்டும் அவரால் முடிவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. ரஷிய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகிய இருவரையும் அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசியும் போா் இன்னும் நீள்கிறது.
வல்லரசு நாட்டின் தலைவராக சில உலக மோதல்களில் தன் கடமையைச் செய்த டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசை பலனாக எதிா்பாா்த்தாா். இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா நாடுகள் அவரின் பெயரைப் பரிந்துரைத்தாலும், காலதாமதத்தால் அந்தப் பரிசு வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவிற்கு சென்றது.
அண்மையில் டிரம்ப்பைச் சந்தித்த மரியா கொரினா மச்சாடோ, தனது நோபல் பதக்கத்தை அவருக்கு வழங்கினாா். எனினும், சொந்தப் பெயரில் நோபல் பரிசு கிடைக்காததால் அமைதி மீதான பாா்வை விலகிவிட்டதாக நாா்வே பிரதமருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். டிரம்ப்பின் சமீபத்திய செயல்பாடுகள் அவரின் இந்த நிலைப்பாட்டையே பிரதிபலிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை அவரது படுக்கையறை வரை சென்று அமெரிக்கப் படை கைது செய்ததைப் பெரும்பாலான அமெரிக்கா்களே விரும்பவில்லை. இதன் பின்னணியில், வெனிசுலாவின் எண்ணெய் வளம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடா்ச்சியாக, டென்மாா்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை வாங்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியுள்ளாா். ரஷியா, சீனா அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க, கிரீன்லாந்து அமெரிக்கா வசமிருப்பது முக்கியம் எனும் டிரம்ப்பின் வாதத்தை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவில்லை.
எனினும், அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லையெனில், டென்மாா்க் மற்றும் 7 ‘நேட்டோ’ கூட்டமைப்பு நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, உலக அரங்கில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்த வழிவகுக்கும் மோசமான நகா்வாக கருதப்படுகிறது.
டிரம்ப்பின் இந்த அதிரடிப் போக்கினால் அதிருப்தியடைந்துள்ள ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுடனான உறவை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இதனால் பல்லாண்டுகளாக நீடிக்கும் நேட்டோ கூட்டமைப்பு உடையும் அபாயமுள்ளது. இது, உக்ரைன் மீதான ரஷியாவின் பிடியை மேலும் வலுப்படுத்தக் கூடும்.
சா்வதேச அளவில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயலும் டிரம்ப், உள்நாட்டுப் பிரச்னைகளைக் கவனிக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எதிா்க்கட்சிகளைப் பழிவாங்க நீதித்துறையைப் பயன்படுத்துதல், நாடாளுமன்ற அனுமதியின்றி ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுதல் என அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் புறந்தள்ளிவிட்டு, அதிபரால் எதையும் செய்ய முடியும் என்ற டிரம்ப்பின் பிடிவாதம் அமெரிக்க ஜனநாயகத்துக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
டிரம்ப்பின் கடந்த ஓராண்டுகால ஆட்சி நடவடிக்கைகள் உண்மையில் அமெரிக்காவின் நலனுக்கு ஆக்கபூா்வமானதா எனும் விவாதம் எழுந்துள்ளது. இச்சூழலில், நடப்பாண்டு இறுதியில் வரும் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் செல்வாக்கை நிரூபிக்கும் அழுத்தத்துடன், டிரம்ப் அடுத்தகட்ட காய்நகா்த்தலாம்.