தலையங்கம்

காங்கிரஸ் பிடித்த புலிவால்!

அரசுத் துறையில் பணிபுரியும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு தருவதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்

அரசுத் துறையில் பணிபுரியும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு தருவதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமாஜவாதி கட்சி தவிர இதர அனைத்துக் கட்சிகளும் வாக்களித்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாலேயே, எல்லா தரப்பினரும் மனமுவந்து இந்த மசோதாவை ஆதரித்திருப்பதாகவோ, இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகும் என்றோ நினைத்துவிட வேண்டாம். உள்ளார்ந்த ஈடுபாடு இல்லாமல் உதட்டளவு ஆதரவு காட்டியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதுதான் காரணம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொருத்தவரை, இரண்டு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கிறது. முதலாவது, பன்னாட்டு நிறுவனங்களும், அன்னிய முதலீட்டாளர்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு, அவர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வது. அடுத்தது, எந்த வகை உத்திகளைக் கையாண்டாலும் சரி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது. சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ள, அந்தக் கட்சிக்குக் கொடுத்த வாக்குறுதிதான் அரசியல் சட்டத்தைத் திருத்தி, பதவி உயர்விலும் பட்டியல் வகுப்பினருக்குப் பதவி உயர்வுக்கு வழிகோலுவது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து விட்டது. அதனால், அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்ற நிலைமை. இதற்கு வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் கட்சி சமாஜவாதி மட்டுமே. காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட ஏனைய கட்சிகள் உதட்டளவு ஆதரவு தருகின்றனவே தவிர, இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி சட்டமாக்குவார்களா என்பது சந்தேகம்தான். மகளிர் இடஒதுக்கீடு மசோதா போல, இந்த மசோதாவும் தொங்கலில் விடப்படுவதற்கான சாத்தியம்தான் அதிகம்.

இடஒதுக்கீடு பற்றிய ஒரு தவறான கருத்து நிலவுகிறது. கல்வியில் இடஒதுக்கீடு, தரமற்றவர்களுக்குத் தகுதியை வழங்குகிறது என்று யாருக்காவது கருத்து இருந்தால் அதை தயவுசெய்து மாற்றிக் கொள்ள வேண்டும். பொதுப் பிரிவில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறும் மாணவர்களுக்கும், இடஒதுக்கீட்டின் மூலம் இடம்பெறும் பட்டியல் வகுப்பு மாணவர்களுக்குமான மதிப்பெண்கள், ஏறத்தாழ அதிக வித்தியாசமில்லாமல் இருப்பது பலருக்கும் தெரியவில்லை. ஆகவே, தகுதியற்றவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் கல்வித் தகுதி பெற்றுவிடவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

அப்படி தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கல்வியில் வாய்ப்புப் பெறுவது இடஒதுக்கீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய மாணவர்களுடன் அவர்கள் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் போட்டி போடுவதுதானே நியாயம்? கல்வித் தேர்ச்சி பெற்ற பிறகும், அரசு வேலைவாய்ப்புகளில், பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பதவி உயர்விலும் ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

கல்வி, வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடஒதுக்கீட்டை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. அரசுத் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்துவிட்ட பிறகு, அவர் அரசு ஊழியர் என்ற அடையாளம் மட்டுமே பெற்றிருக்க முடியும். அவர் மதத்தால், சாதியால் தனிப்பட்ட அடையாளங்களுடன் செயல்படுவார் என்றால், அதனால் பாரபட்சமான முடிவுகளும் விளைவுகளும் ஏற்படும் வாய்ப்புகள்தான் அதிகம். இதற்கு சமீபத்திய உதாரணம், தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய் பகுதியில் கலவரம் வெடிக்கக் காரணம், அதிகாரிகள் நிலையிலும் சாதிஉணர்வு தலையெடுத்ததுதான்.

சாதிகள் மறக்கப்பட வேண்டிய அரசுத் துறையில் சாதி உணர்வு தலையெடுத்திருக்கும் இந்த நேரத்தில், "பதவி உயர்வில் இடஒதுக்கீடு' அரசு நிர்வாகத்தில் எத்தகைய பனிப்போரை உருவாக்கும் என்பதையும் பணிகள் பாதிக்கப்படும் என்பதையும் யாரும் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்களிடையே சாதியால் குழுமனப்பான்மை உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

வாக்குவங்கி அரசியலின் உச்சகட்டமாக, இந்த மசோதாவில் இடம்பெற்றிருந்த, பதவி உயர்வுக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய பணிதொடர்பான மந்தண அறிக்கை (அய்ய்ன்ஹப்

ஸ்ரீர்ய்ச்ண்க்ங்ய்ற்ண்ஹப் தங்ல்ர்ழ்ற்) விதிகளை மசோதாவில் மாற்றி அமைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருப்பதுதான். இது எந்த வகையில் சரி?

இந்த மசோதா கவனமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. எந்தெந்த பதவிகளுக்கு பதவிஉயர்வில் இடஒதுக்கீடு வழங்கலாம்; மருத்துவம், ஆராய்ச்சி போன்ற பணிகளுக்கும் பதவிஉயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்படுமா? பதவிஉயர்வுக்குப் பிறகு அவர் அதற்கேற்பச் சிறப்பாகச் செயல்பட முடியாத நிலையில் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது? அந்த நடவடிக்கையை எடுப்பது யார்? இப்படி விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் நிறையவே இருக்கின்றன. அப்படி விரிவாக விவாதிக்காமல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது இந்திய அரசு நிர்வாகத்துக்கு "முடக்குவாதமாக' அமைந்துவிடும்.

தொலைநோக்குப் பார்வையோ, வருங்காலத்தின்மீது அக்கறையோ இல்லாமல், இப்போதைக்குத் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு வாக்குறுதியை அளித்துவிட்டுத் திண்டாடுகிறது காங்கிரஸ் தலைமை. அடுத்தாற்போல சிறுபான்மையினருக்கும் பதவி உயர்வில் ஒதுக்கீடு சமாஜவாதிக் கட்சியால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர் விளைவு, எல்லா தரப்பு மக்களின் எதிர்ப்பையும் காங்கிரஸ் பெறுவதாகத்தான் முடியப் போகிறது. புலிவாலைப் பிடித்திருக்கிறார்கள். என்னவாகும் என்று சொல்லியா தெரியவேண்டும்...  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT