மானியமா, விரயமா?
மானியத்தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும், "உங்கள் பணம் உங்கள் கையில்' (டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்பெர்) திட்டத்தை அமல்படுத்துவதில் பிரதமர் அலுவலகம் தீவிரமாக இறங்கியுள்ளது.
மானியத்தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும், "உங்கள் பணம் உங்கள் கையில்' (டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்பெர்) திட்டத்தை அமல்படுத்துவதில் பிரதமர் அலுவலகம் தீவிரமாக இறங்கியுள்ளது.
43 மாவட்டங்களைக் கடந்த ஜனவரியில் இத்திட்டத்துக்காகத் தேர்வு செய்தார்கள். தற்போது இரண்டாவது கட்டமாக 78 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 1.7.2013 முதல் 121 மாவட்டங்களில் இத்திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது இந்தியாவின் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இந்தப் புதிய நடைமுறை மூலம் மானியம் பெறப் போகிறார்கள்.
எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அது பற்றிய இருவேறு கருத்துகள் நிலவுவது சகஜம். ஆனால், எந்தவொரு திட்டத்தையும் அவசர கதியில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அது நன்மையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமாகவே இருந்தாலும்கூட, பயனற்றுப் போவதோடு, செயல்பாடுகளில் குளறுபடிகளை எதிர்கொள்ளும் என்பதுதான் அனுபவ உண்மை.
Advertisement
மானியம் முறையாகக் கணக்கிடப்பட்டு, முறையாக முறையானவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் மட்டுமே அந்தத் திட்டம் செயல்படுகிறது என்று கூற முடியும்.
மத்திய அரசு பல்வேறு துறைகளின் மூலமாக அமல்படுத்தும் 26 நலஉதவித் திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, விதவைகள் உதவித்தொகை ஆகியவற்றை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது சாத்தியம். இதற்கான தரவுகள் (டேட்டா) அந்தந்தத் துறையிடம் உள்ளன. அதனால், உதவித் தொகைகளை வழங்குவதற்கு வெறும் வங்கிக் கணக்கு விவரத்தைத் தெரிவித்தாலே போதுமானது. தற்போது, நேரடி மானியத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அஞ்சலக சேமிப்புக் கணக்குகளையும் "கோர் பேங்கிங்' முறைக்குக் கொண்டு வந்துவிடுவதால் மேலே குறிப்பிட்ட உதவித் தொகைகளை வழங்குவதில் சிக்கல் இருக்காது.
ஆனால், உணவுப்பொருள் வழங்கல், வேளாண்மை, எரிபொருள் ஆகியவற்றுக்கான மானியங்களை வழங்குவதற்கான தரவுகள் (டேட்டா) இன்னமும் எந்த மாவட்டத்திலும் முழுமையாகக் கணினிமயமாக்கப்படவில்லை. இவற்றை முழுமையாக கணினிமயம் செய்யாமல், நேரடி மானியத்தை உணவுப்பொருள், வேளாண்மை, எரிபொருள் ஆகியவற்றுக்கும் அமல்படுத்தினால் குழப்பத்துக்கும் ஊழலுக்கும்தான் அது வழி கோலுமே தவிர, நுகர்வோருக்கு நன்மையும் ஏற்படுத்தாது, அரசுக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தராது.
மே 15 முதல், சமையல் எரிவாயு உருளைக்கான மானியமும், முதல்கட்டமாக 20 மாவட்டங்களில், நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள், மானிய விலையில் பெறத் தகுதியுள்ள 9 எரிவாயு உருளைகளுக்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.4,000 அவரது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுவிடும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நுகர்வோரும் வாங்குகின்ற எரிவாயு உருளை பற்றிய கணக்குகள் அவர் சேவை பெறும் காஸ் ஏஜன்ஸி கணினியிலும், பெட்ரோலியத் துறையின் எண்ணெய் நிறுவனங்களின் கணினியிலும் ஒரே நேரத்தில் பதிவாக வேண்டும். தரவுகள் கணினிமயமாக்கப்பட்டால் மட்டுமே, எந்தக் கடையில் ஏ.டி.எம். கார்டு மூலம் பொருள் வாங்கினாலும் அதற்கான தொகை கழிக்கப்பட்டு, மீத இருப்பு விவரம் குறித்த குறுந்தகவல் வந்து விழுவதைப்போல ஒரு நுகர்வோர், சந்தை விலையைச் செலுத்தி எரிவாயு உருளை வாங்கிய அடுத்த சில நிமிடங்களில், மானியம் அவரது கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்ட குறுந்தகவல் அவரது கைபேசியில் வந்து விழும்.
தற்போதைய சூழ்நிலையில், பல மாவட்டங்களில் பொதுவிநியோகத்துக்கான குடும்ப அட்டைகளின் விவரங்களே முழுமையாகக் கணினிமயமாக்கப்படவில்லை. நுகர்வோர் தங்களுக்கான உணவுப் பொருளை வாங்கியவுடனே கணினியில் பதிவாகும்படியான தொழில்நுட்பம் முழுமை பெறாத நிலையில், இத்திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டே போனால், திட்டம் தோல்வியைத்தான் தழுவும். அரசு எதிர்பார்ப்பது போல தேர்தல் பிரசாரத்தில்கூட பயனளிக்குமா என்பது சந்தேகம்தான்.
எரிவாயு வாங்கியவர்கள், வாங்காதவர்கள் எல்லோருக்கும் பொதுவாக 9 சிலிண்டர்களுக்கான தொகை ஆண்டு இறுதியில் கிடைக்கும் என்பதும், சர்க்கரை, அரிசி, கோதுமை ஆகியவற்றை முதலிலேயே சந்தை விலைகொடுத்து வாங்கிய ஏழைக்கும், வாங்கத் தேவையே இல்லாமல் பொது விநியோகத்தைப் பயன்படுத்தாத நடுத்தர வருவாயினருக்கும், ஆண்டு இறுதியில் இந்தத் தொகை கிடைக்கும் என்பதும் எந்த வகையிலும் நியாயமல்ல. மானியம் என்பது ஆளும்கட்சியின் பணமல்ல. அரசு மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப்பணம். அதைப் பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாக வினியோகிக்க யாருக்கும் உரிமை இல்லை.
இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம், எல்லோரையும் சந்தை விலைக்கு வாங்குவதற்கு பழக்கிவிடுவதற்குத்தான். சந்தை விலையைக் கொடுத்து வாங்கிப் பழகிய பிறகு, படிப்படியாக மானியத்தைக் குறைத்துக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவதுதான் அரசின் நோக்கம்.
அனைத்துப் பயனாளிகள் மற்றும் அவர்கள் பயனடையும் துறை சார்ந்த தரவுகள் (டேட்டா) அனைத்தும் முழுமையாக கணினிமயமாக்கப்படாத நிலையில், திட்டத்தை அறிவித்துவிட்டு, தரவுகளை கணினிமயமாக்க முற்படுவதால், குளறுபடிகள் ஏற்பட்டு அரசின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். மானியத் தொகை கையில் கிடைப்பது இருக்கட்டும், மானியமில்லாமல் பொருள்களை வாங்கக் கையில் கூடுதல் பணம் தேவைப்படுமே; அது நுகர்வோருக்கு எரிச்சல் ஏற்படுத்தும் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?
அவசரக்காரர்களுக்கு புத்தி மட்டு!