தலையங்கம்

இது தொடக்கம் மட்டுமே..!

இந்தியத் தூதரகத்தையும்கூட அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பு உளவு பார்த்துள்ளது என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. "அமெரிக்கா வெறுமனே தரவுகளை மட்டுமே ஊடுருவிப் பார்த்தது, தகவல்களை அல்ல' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் அதற்குச் சப்பைக் கட்டும் கட்டுகிறார்.

ஆசிரியர்

இந்தியத் தூதரகத்தையும்கூட அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பு உளவு பார்த்துள்ளது என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. "அமெரிக்கா வெறுமனே தரவுகளை மட்டுமே ஊடுருவிப் பார்த்தது, தகவல்களை அல்ல' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் அதற்குச் சப்பைக் கட்டும் கட்டுகிறார். இந்த சூழலில், தேசிய இணையப் பாதுகாப்பு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு முதலாக விவாதிக்கப்பட்டு, கலந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக இப்போது தேசிய இணையப் பாதுகாப்பு கொள்கையை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டுள்ளார்.

1.5 கோடி பேர் இணையத் தொடர்புகள் பெற்று, 10 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்த கொள்கையை அறிவிக்க வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இது ஒரு தொடக்கம் மட்டுமே. இந்தக் கொள்கையும்கூட தொழில்நுட்பத்தின் மாறுதலுக்கு ஏற்ப மாறக்கூடியவை; மாற வேண்டியவை. இந்தக் கொள்கையை அரசு எவ்வாறு அமல்படுத்துகிறது என்பதைப் பொருத்தே இதன் பயனையும், நன்மையையும் நாம் கணக்கிட முடியும்.

தனிநபர், வணிக நிறுவனங்கள், அரசு அலுவல்கள் ஆகியவற்றின் மீதான இணைய தாக்குதலைத் தடுத்தல், தாக்குதல் இல்லாமல் பாதுகாத்தல், இப்பிரச்னைக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கு தற்போதைய தேசிய இணையப் பாதுகாப்பு கொள்கை கவனம் செலுத்துகிறது.

ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் வெளியாகும் தகவல்கள் மீது அரசுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத நிலையில், கடந்த ஆண்டு சென்னையிலும் பெங்களூருவிலும் வடஇந்திய மாணவர்கள் தாக்குதல் தொடர்பான தகவல்கள் தொற்றுநோய்போல இணையதளத்தில் பரவியதால், அவர்கள் கூட்டம்கூட்டமாக தங்கள் மாநிலத்துக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் அரசு உடனடியாகத் தலையிட்டு, அந்தப் படங்களை, குறிப்புகளை அகற்ற முடியவில்லை.

இப்போதும்கூட, பல விடியோ காட்சிகளை மின்னேற்றம் செய்வதைத் தடுக்கும் நடைமுறைகள் அரசிடம் இல்லை. இத்தகைய மின்னேற்றங்களைத் தடுக்க முடியாவிட்டாலும் அவற்றைக் கண்காணிக்கவும், யார் இதைச் செய்கிறார்கள் என்று கண்டறியவும்கூட தனியான அமைப்பு இந்திய அரசிடம் இல்லை. இப்போதைய நடைமுறை, யாராகிலும் இதுகுறித்து புகார் எழுப்பினால், அதனை காவல்துறையின் இணைய குற்றப்பிரிவு பதிவு செய்து விசாரிக்க முடிகிறது என்பது மட்டுமே ஆறுதல் தரும் விஷயம்.

அண்மையில், ஐபிஎல் சூதாட்டத்தின் போது இணையத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் பலவற்றை எவ்வாறு சாட்சியங்கள் ஆக்குவது, இவை சாட்சியங்களாக ஏற்கப்படுமா என்ற குழப்பமே காவல்துறைக்கு பெருந்தலைவலியாக இருந்தது என்பதே உண்மை. இன்னுமும்கூட, இணைய குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் போதிய தொழில்நுட்ப அறிவு இல்லாமலும், சட்டத் திருத்தங்கள் இல்லாமலும் இருக்கும் நிலை நீடிக்கிறது.

தேசிய குற்றப் பதிவுகள் கழகத்தின் புள்ளிவிவரப்படி 2010-ஆம் ஆண்டு பதிவான இணைய குற்ற வழக்குகள் 698 மட்டுமே. இதற்குக் காரணம், இணையதளப் பயன்பாட்டிலும், பயன்படுத்துவோர் குறித்தும் உள்ள குழப்பங்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகள்தான்.

இன்றைய காலகட்டத்தில், இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் நுழைந்து குளறுபடிகள் செய்ய முடியும். இணைய குற்றங்கள் நடத்த முடியும். அது தனிமனித அந்தரங்கமாக இருக்கலாம், அல்லது ஒரு வணிக வங்கியாக இருக்கலாம், அரசு நிறுவனமாக இருக்கலாம், ராணுவப் பிரிவாகவும்கூட இருக்கலாம்.

ரயில்வே சென்ற ஆண்டு இணையத்தின் மூலம் ரூ.3,800 கோடிக்கு ரயில் டிக்கெட் விற்பனை செய்துள்ளது. இது மட்டுமல்ல, வானூர்தி இயக்கம், ரயில் இயக்க சமிக்ஞைகள் எல்லாமும் மின்னாக்கம் பெற்றுள்ள நிலையில், கணினி வல்லுநராக இருக்கும் யாரும் இந்த சேவைகளில் நுழைந்து குளறுபடி செய்ய முடியும் என்கிற ஆபத்து நிலவுகிறது.

இத்தகைய குற்றங்கள் நடக்கத் தொடங்கியது தெரியவந்தவுடனே அதைத் தடுத்து நிறுத்தவும், குற்றம் எங்கே தொடங்கியது என்பதை உடனே கண்டறிவதும்தான் இன்றைய தேவை. அதற்கு இந்தப் புதிய கொள்கை உதவி செய்வதாக இருக்க வேண்டும். இந்தக் கொள்கையின்படி ஒரு தேசிய இணைய முகமை அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த முகமை நடைமுறைக்கு வந்த பிறகு, இதன் வரம்புகள் அறிவிக்கப்படும்.

அமைச்சர் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளதைப் போல, ""கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் செமிகண்டக்டர் சிப்ஸ் ஆகியன இந்தியமயமாக வேண்டும்''. நாம் இன்றுவரையில் பயன்படுத்தும் கணினி மென்பொருள் எல்லாமும் வெளிநாட்டு நிறுவனங்களுடையதாக இருக்கின்றன. நமக்குள் புகுந்து பார்க்கும் ஓட்டைகளை வைத்துத்தான் இந்த மென்பொருள்கள் வழங்கப்படுகின்றன என்று சந்தேகப்பதில் தவறல்லை.

இணையத்தில் நமக்கான மென்பொருள், நமக்கான தொழில்நுட்பம், நம்மைப் பாதுகாக்கும் உட்கருவிகள் உருவாக்கம் ஆகியவை இன்று மிகமிக அவசியம். இதற்கான ஆய்வுகள்தான் நமக்கு மிகமிகத் தேவை. இந்த விஷயத்தில் சீனாவுக்கு இருக்கும் முன்னெச்சரிக்கை நமக்கு இல்லாமல் போய்விட்டதே, ஏன்?

இணைய குற்றங்களைத் தடுத்தல், இணைய தாக்குதலிருந்து பாதுகாத்தல் ஆகிய பணிகளை அரசு - தனியார் பங்கேற்பு மூலம் செய்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றும், இதற்கான தொழில்நுட்பம், வல்லுநர்கள் தனியார் நிறுவனங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் ஒரு கருத்தாக்கம் தனியார் மென்பொருள் நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது. இது மேல்துண்டை தண்ணீரில் நனைத்து தோளில் போட்டுக்கொள்கிற கதையாகத்தான் இருக்கும் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் அரசு செயல்பட வேண்டுமே தவிர, இதிலும் தனியார்மயத்துக்குத் தலையாட்டிவிடலாகாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT