தலையங்கம்

குழந்தைகளல்ல, வருங்காலம்...

பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள தர்மஸதி கிராமத்து தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 22 பேர் இறந்துள்ளது வேதனையானது.

ஆசிரியர்

பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள தர்மஸதி கிராமத்து தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 22 பேர் இறந்துள்ளது வேதனையானது. இறந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு கருணைத் தொகை அறிவிக்கப்படுவதும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, இந்த மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிவதும் ஒரு பக்கம் நடைபெற்றாலும், இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.

குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மதிய உணவுத் திட்டம் பல்வேறு பெயர்களில் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் செலவிடுகின்றன. இருப்பினும் திட்டம் நிறைவேறும் இடத்தில் உள்ள குளறுபடிகள் காரணமாக, இத்தகைய அசம்பாவிதங்களையும் எதிர்கொள்ள நேர்கிறது.

1982-இல் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்குமான சத்துணவுத் திட்டத்தை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தபோது, முதலில் கேலி பேசப்பட்டது. இத்திட்டம் "மிகச் சிறப்பானது, மனிதநேயமானது' என்று சாதனையாக மாறத்தொடங்கியபோது, தமிழகத்தின் பல இடங்களில், சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்தன. சாம்பாரில் "திடீரென' பல்லிகள் செத்து மிதந்தன. அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காதபடி மிகக் கடுமையான எதிர்நடவடிக்கைகளை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் மேற்கொண்டார். அதன்பிறகு அவரது ஆட்சிக்காலத்தில் சாம்பாரில் பல்லிகள் "திடீரென மிதப்பது' இல்லாமல் போனது.

மதியஉணவு அல்லது சத்துணவுத் திட்டத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாமும் அரசினால் வழங்கப்படுகின்றன. ஆனால், இவற்றை முழுமையாகப் பயன்படுத்தாத ஏமாற்றுச் சமையலும், கலப்படங்களும் சில நேரங்களில் அசம்பாவிதத்தை ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் இத்தகைய அசம்பாவிதங்களுக்குக் காரணம் - சமையலர்களின் அலட்சியம் மட்டுமே!

பிகார் சம்பவத்தில், அந்தத் தொடக்கப் பள்ளியின் சமையல்காரரும் நஞ்சானஉணவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற போதிலும், இத்தகைய நிகழ்வுகளுக்குக் காரணம் - சமையல் செய்பவரின் அலட்சியம் அல்லது அக்கறையின்மை, பொறுப்பின்மை ஆகியவையே என்பதை மறுப்பதற்கில்லை. குழந்தைகளுக்காகச் சமைக்கின்றோம் என்ற அர்ப்பணிப்பு உணர்வே இல்லாமல், வெந்ததும் வேகாததுமாய் சமைத்துப் போட்டுவிட்டு, வீடு செல்ல வேண்டும் என்கின்ற அவசரம்தான் இத்தகைய நேர்வுகளுக்கு அடிப்படைக் காரணம்.

சத்துணவுக்கூடங்கள் அடிப்படை சுகாதாரம் இல்லாத இடமாக இருப்பது இரண்டாவது காரணம். பள்ளியில் ஒதுக்குப்புறமான இடமாகவும், அழுக்கடைந்த இடமாகவும் உள்ள பகுதியில்தான் சமையல்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த சமையல்கூடங்களில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை. பல இடங்களில் சமையல்கூடம்தான் பண்டகசாலையாக மாற்றப்பட்டு பூட்டு போடப்பட்டிருக்கும். சமையல், திறந்த வெளியில் நடைபெறும்.

மதிய உணவுத் திட்டம் மிகச் சிறப்பாக, முன்னுதாரணமாக நடைபெற்று வரும் மாநிலம் தமிழ்நாடு. இருப்பினும் தமிழ்நாட்டிலேயே பல பள்ளிகளின் சத்துணவு சமையற்கூடங்கள் மிக மோசமாக, சுகாதாரமில்லாமல் அடைசலாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த சத்துணவு மையங்கள், சமையலுக்கான நீர்த் தேவையை எப்படிப் பெறுகின்றன என்பதைப் பார்த்தால், பல தருணங்களில் இவர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது என்பது புரிகிறது. பல பள்ளிகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் இருக்காது. பள்ளியில் அல்லது அருகில் இருக்கும் கிணற்றுக் குடிநீரையே சமையலுக்குப் பயன்படுத்தும் நிலைமை காணப்படும். அந்தக் கிணறு தூய்மையானதாக இல்லாமல் இருந்தால், அதன் விளைவு உணவிலும் தெரியும்.

சத்துணவு சமைக்கப்படும் அனைத்து மையங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆனால், யாரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. குடிநீர் பற்றி கண்காணிப்பது எங்கள் வேலை அல்ல என்று இருந்துவிடுகிறார்கள். ஆசிரியர்கள் தங்களுக்கான குடிநீர் போத்தலுடன் பள்ளிக்கு வருகிறார்கள். அல்லது ஆசிரியர்கள் மட்டுமே அருந்துவதற்காக தனியார் "குடிநீர் கவிழ்ப்-பானை'யைக் கூட்டுச்செலவில் நிறுவிக்கொள்கிறார்கள். ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்கு...?

தமிழ்நாட்டில் நிகழாண்டில் (2013-14) 53.5 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் சத்துணவுத் திட்டத்துக்காக ரூ.1,493 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 14,130 சமையலறை இணைந்த பண்டகசாலை கட்டுவதற்காக ரூ.360 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவற்றுடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், நஞ்சான உணவை உண்டதும் குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள், வாந்தி, வயிற்றுப்போக்கு தொடங்கியதும் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சியை சத்துணவு அமைப்பாளர்களுக்கு அளிப்பது அவசியம்.

தமிழகத்தில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. இதற்கு முதன்மைக் காரணம் - தரமற்ற, கெட்டுப்போன முட்டைகள்! முட்டை சைவமா அசைவமா என்று விவாதிப்பதைக் காட்டிலும், முட்டை சீக்கிரம் கெட்டுப்போகும் என்பதையும், ஒப்பந்ததாரர்கள் கொண்டு வந்து கொடுக்கும்போது பல நாள்கள் ஆகிவிடுவதையும் கருத்தில்கொள்ள வேண்டும். எல்லா குழந்தைகளுக்கும் சுண்டல் வழங்கி, முட்டையைத் தவிர்க்கலாம்.

சத்துணவை வெறும் திட்டமாகக் கருதாமல், வருங்கால சந்ததியரை ஆரோக்கியமானவர்களாக உருவாக்கும் சேவையாக சம்பந்தப்பட்ட எல்லோரும் கருதுவார்களேயானால், தவறுகள் தடுக்கப்படும். கவனக் குறைவுகள் தவிர்க்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT