தலையங்கம்

ஏதோ கிடைத்திருக்கிறது...!

தமிழக அரசுக்கு 2013-14-ஆம் ஆண்டுக்கான திட்டச்செலவு மதிப்பீட்டை இறுதி செய்த திட்டக் கமிஷன், தமிழக அரசு மீது "கரிசனத்துடன்' அதிக நிதிஒதுக்கியுள்ளது - ரூ.37,128 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர்.

ஆசிரியர்

தமிழக அரசுக்கு 2013-14-ஆம் ஆண்டுக்கான திட்டச்செலவு மதிப்பீட்டை இறுதி செய்த திட்டக் கமிஷன், தமிழக அரசு மீது "கரிசனத்துடன்' அதிக நிதிஒதுக்கியுள்ளது - ரூ.37,128 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். இது தவிர, ரூ.9,000 கோடி மத்திய அரசு ஆதரவு திட்டங்கள் மூலம் வந்து சேரும்.

சென்ற ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திட்டக் கமிஷன் மிகவும் பாரபட்சமாக நடந்துகொண்டு, தமிழ்நாட்டுக்குக் கேட்டதைக் காட்டிலும் குறைவாக நிதிஒதுக்கியுள்ளது என்று வெளிப்படையாகவே குறைகூறி பேட்டி அளித்தார். அப்போது திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்த நிதி ரூ.23,535 கோடி மட்டுமே!

நிகழாண்டில் தமிழகத்தின் மீது திட்டக் கமிஷன் அதிக நிதிஒதுக்கீடு செய்ய முதன்மையான காரணம் - அடுத்த ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான். நிதியை மிகவும் குறைவாகக் கொடுத்தால் இதையே காங்கிரஸýக்கு எதிரான அஸ்திரமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தக்கூடும் என்கிற அச்ச உணர்வு காரணமாக இருக்கும். மேலும், தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக இடம்பெறவில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதிகமாக நிதிஒதுக்கீடு செய்தால் அதற்காகக் கோபப்படவோ, தடுக்கவோ யாருமில்லை என்பதும் காரணமாக இருக்கக்கூடும்.

இத்தகைய காரணிகளை மனதில் கொண்டு திட்டக் கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்வது முறையானதாக இருக்க முடியாது. ஒரு மாநிலம், தனக்கு வழங்கப்படும் நிதியை முறையாகச் செலவிடுகின்றது, இந்த நிதிஒதுக்கீட்டினால் அந்த மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, அதன் அடிப்படையில்தான் திட்டக்கமிஷன் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் கட்சிகளே மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருந்தால் அதிக நிதிஒதுக்கீடு என்கின்ற பாரபட்சம் சரியன்று.

தற்போது தமிழ்நாட்டுக்கு ரூ.37,128 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னமும் நாம் குறைபட்டுக்கொள்ள காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

மகாராஷ்டிர மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.49,000 கோடி! மத்திய அரசின் நிதியுதவிகள் ரூ. 31,500 கோடி என மொத்தம் ரூ. 80,500 கோடியை 2013-14-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிர மாநிலம் பெறப்போகிறது. ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 53,700 கோடி! சிறிய மாநிலமான கேரளத்துக்கு ரூ. 17,000 கோடி! தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.37,128 கோடியில், மத்திய அரசு மாநில அரசின் திட்டங்களுக்காகக் கொடுத்தாக வேண்டிய மானியம் ரூ. 3,165 கோடியும் உள்ளடங்கும்! இதைக் கழித்துப் பார்ததால் தொகை மேலும் குறையும்!

தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகள், தேசிய சராசரியைக் காட்டிலும் விஞ்சியதாக இருப்பதை திட்டக் கமிஷன் பாராட்டியுள்ளது. மாநிலத்தின் வரி மூலமான மொத்த வருவாய், 2013-14-ஆம் ஆண்டில் 10 விழுக்காடு அதிகரிக்கவுள்ளது. வரிநிலுவையும் சராசரி அளவுக்குள் கட்டுப்பட்டு இருக்கிறது. சிறப்பான வரி வசூலில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது என்று திட்டக் கமிஷன் பாராட்டியுள்ளது.

குழந்தை இறப்பு விகிதம், பேறுகால இறப்பு விகிதம், பச்சிளங்குழந்தைகள் மரண விகிதம் எல்லாவற்றிலும் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருக்கும் தமிழகம், மாநில மொத்த உற்பத்தியில் மட்டும் பின்னடைவு கண்டிருப்பது வேதனையான ஒன்று. 2011-12-ஆம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த உற்பத்தி 7.3 சதவீதம் ஆக இருந்தது. ஆனால் அது 2012-13-இல் 4.6 விழுக்காடு ஆக, அதாவது தேசிய சராசரி 5 விழுக்காடுக்கும் குறைவாக ஆகிப்போனதன் காரணம் என்ன? மின்தட்டுப்பாடு, காவிரி நீர் கிடைக்காததால் வேளாண்மையில் ஏற்பட்ட இழப்பு ஆகிய இரண்டும்தான் தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தவை.

குஜராத் மாநிலத்திலிருந்து தமிழகம் விலைக்கு வாங்க முற்பட்ட 1,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டுவரக்கூட மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இதனால் மிக மோசமான மின்வெட்டினை தமிழகம் சந்திக்க வேண்டியிருந்தது. இதற்குக் காரணம், தமிழக அரசு நல்லவிதமாகச் செயல்படக்கூடாது என்கின்ற அரசியல் உள்நோக்கம்தான் என்பதைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா எல்லா மேடைகளிலும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியும் மின்சாரப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை.

நெய்வேலியிலும், கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக தமிழகமே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டும் பதில் கிடைக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் 900 மெகாவாட் கிடைக்கும் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் மொத்த உற்பத்தி எப்படி அதிகரிக்கக்கூடும்!

காவிரிப் பிரச்னையிலும் இதே நிலைதான். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மைக் குழு அல்லது தற்போது அமைத்துள்ளதைப் போன்ற மேற்பார்வைக் குழுவைச் சென்ற ஆண்டே அறிவித்திருந்தால், பற்றாக்குறை காலம் என்றபோதிலும்கூட, தமிழகத்துக்குக் கிடைத்திருக்க வேண்டிய தண்ணீர் ஓரளவு நியாயமாகக் கிடைத்திருக்கும். குறுவைச் சாகுபடி பாதித்திருக்காது.

அதிகம் கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைவதா? இல்லை, அதிகம் கெடுத்தார்களே என்று வேதனைப்படுவதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT