தலையங்கம்

வேதனையான சாதனை!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் இறங்குமுகத்தைக் கண்டு வருகிறது. தொடர் வீழ்ச்சிதான் இப்போதைய சாதனை. இதற்கிடையே, இது மேலும் வீழ்ச்சியை சந்திக்கும் என்கிற செய்தி இந்திய தொழில் துறையினரை மட்டுமின்றி, சாதாரண மக்களையும் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆசிரியர்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் இறங்குமுகத்தைக் கண்டு வருகிறது. தொடர் வீழ்ச்சிதான் இப்போதைய சாதனை. இதற்கிடையே, இது மேலும் வீழ்ச்சியை சந்திக்கும் என்கிற செய்தி இந்திய தொழில் துறையினரை மட்டுமின்றி, சாதாரண மக்களையும் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து ரூ.70-ஐ நெருங்கி வீழ்ச்சியில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது நினைவிருக்கலாம். அதன் பின்னர், மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜனின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரூபாய் மதிப்பு சற்று உயரத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அண்மையில் ரூ.60 வரை உயர்ந்தது. அவரால், ரூபாயின் மதிப்பை ரூ.60-க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள முடிந்ததே தவிர, எதிர்பார்த்த அளவுக்கு உயர்த்த முடியவில்லை.

இப்போது மீண்டும் வீழ்ச்சிப் பாதையில் இந்திய நாணயத்தின் மதிப்பு பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த வார இறுதியில் ரூ.62.91-க்கு சரிந்து இரண்டரை மாதங்களில் குறைந்தபட்ச மதிப்பைப் பதிவு செய்தது. ஊக பேர வணிகர்கள் அன்னியச் செலாவணிச் சந்தையில் புகுந்து விளையாடுவதால்தான் ரூபாயின் மதிப்பை நினைத்தபடி உயர்த்த முடியாமல் போவதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், உயர்ந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பொருளாதார சிக்கல் உள்ளிட்டவற்றை சமாளிக்க வேண்டிய சவாலான இந் நேரத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவது மேலும் நிலைமையை மோசமாக்கும் என்றே சொல்லலாம்.

இதற்கிடையே எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் உயர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக நமது நாட்டில் 40 சதவீதத்துக்கும் மேல் உள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் தங்களது வருமானத்துக்குள் அத்தியாவசிய செலவுகளைக் கூட சரி செய்து கொள்ள முடியாத நிலையில் திணறி வருகின்றனர். பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்ததால், நுகர்வு சக்தியும் குறைந்துள்ளது.

மேலும், வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு கூடுதல் நிதிச் சுமையும் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

தொழில் துறையினரைப் பொருத்தவரை இடுபொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் உற்பத்திப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

அப்படியே உற்பத்தி செய்தாலும், உற்பத்திப் பொருள்களை கட்டுப்படியான விலைக்கு விற்க முடியாமல் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால், கதவடைப்பும், அதைத் தொடர்ந்து ஏற்படும் ஊழியர்கள் வேலையிழப்பும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கும்.

நம் நாடு இப்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையால் திணறி வருகிறது. இதைச் சரி செய்யும் பொருட்டு தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது; எடுத்து வருகிறது. இது எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பலனளிக்கவில்லை என்பதே நிதர்சன உண்மை.

மேலும், ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசும் தொடர்ந்து முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது நிதித் தேவைகளுக்கு வெளிநாடுகளில் கடன் வாங்குவதை ஊக்குவிப்பதிலும், பங்குச் சந்தையில் அன்னிய நிறுவன முதலீடுகளை வரவேற்பதிலும் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. இது குறுகிய கால அடிப்படையில் மட்டும் உதவுமே தவிர, நீண்ட கால செயல்பாட்டுக்கு உதவாது.

மத்திய அரசு நினைத்தால் களத்தில் இறங்கி வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகளை டாலரில் இந்தியாவுக்கு கொண்டு வர முடியும். இதைச் செயல்படுத்த கடந்த காலங்களில் செய்தது போன்று "சாவரின்' அரசு பாண்டுகளை வெளியிட்டு ரூ.2,000 கோடிக்கும் மேல் நிதி திரட்ட முடியும் என்று நிதி சார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ரூபாயின் மதிப்பும் வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அரசு அதற்கு தயாராக வேண்டுமே... வீழ்ச்சிக்கான காரணங்களை சொல்லி தப்பித்துக் கொள்ளத்தான் அரசு முயல்கிறதே தவிர, ரூபாயின் மதிப்பை உயர்த்த ஆக்கபூர்வமான, உருப்படியான நடவடிக்கைகள் எதையும் நிதியமைச்சகம் எடுப்பதாகத் தெரியவில்லை. இப்போதைய தேவை காரணங்கள் அல்ல; ஆக்கபூர்வப் பலன்கள்தான். அதை அரசு உணர்ந்ததாகவே தெரியவில்லையே!

இந்தியா சுதந்திரமடைந்த 1947-இல் ஒரு டாலருக்கு ரூ.1 அளித்தால் போதுமானதாக இருந்தது. இன்று ஒரு டாலரின் விலை ரூ.63.71. இதுதான் நமது 66 ஆண்டு சாதனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT