ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையேயான இடைக்கால ஒப்பந்தம் உலகத்தை சற்று நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது. இதுவே நிரந்தரத் தீர்வு இல்லைதான் என்றாலும், அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது ஜெனீவாவில் ஈரான் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இடைக்கால ஏற்பாடு.
ஒரு காலத்தில் மேற்கத்திய வல்லரசு நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்த ஈரான், தனிமைப் படுத்தப்பட்டது என்பதைவிடத் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது என்பதுதான் சரி. அயத்துல்லா கொமேனியின் தலைமையிலான புரட்சி, தன்னை மன்னராக அறிவித்துக்கொண்ட ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு 1979-இல் முடிவை ஏற்படுத்தியபோது மேற்காசியாவின் அரசியல் சமநிலை மாறியது. மேற்காசியாவின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து மட்டுமே அரசியல் செய்து வந்த வல்லரசு நாடுகளுக்கு ஈரானின் இஸ்லாமிய மத அடிப்படைவாதப் போக்கு பிடிக்காமல் போனதில் வியப்பொன்றுமில்லை.
இன்றைய ஈரானின் பொருளாதார நிலைமை ஒன்றும் மெச்சும்படியாக இல்லை. சர்வதேசப் பொருளாதாரத் தடையால் ஈரானின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. டுனீசியா, எகிப்து, சிரியா, லிபியாவில் ஏற்பட்டதைப் போன்ற அரசியல் எழுச்சி ஈரானிலும் ஏற்பட்டிருக்கக்கூடும். நல்லவேளையாக அதிபர் தேர்தலில் ஹஸ்ஸன் ரெüஹானி வெற்றி பெற்றதால், ஈரான் அரசியல் நிலையின்மையிலிருந்து தப்பித்தது.
கையெழுத்திட்டிருக்கும் இடைக்கால ஒப்பந்தப்படி, ஈரான் பிரச்னைக்குரிய தனது அணுசக்திப் பரிசோதனைகளையும், இயக்கத்தையும் நிறுத்திக் கொள்ளவும், படிப்படியாகக் குறைத்துக் கொள்ளவும் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபட முடியாது என்று பொருள். 5 விழுக்காடுக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுவது இல்லை என்றும், தன்னிடம் ஏற்கெனவே உள்ள ஓரளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவைக் குறைத்துக் கொள்வதென்றும் ஈரான் ஒப்புக் கொண்டிருக்கிறது. மேலும், ஈரானின் அணுசக்தி தொடர்பான எல்லா ஆய்வுகளும், செயல்பாடுகளும் சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படுத்தப் படுவதையும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஈரானின் மீதான தடையும், பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் தொடரும் என்றாலும், உடனடியாக ஈரானுக்குச் சேரவேண்டிய சர்வதேச பெட்ரோலிய எண்ணெய் வருவாயில் ஏழு பில்லியன் டாலர்களை பயன்படுத்திக்கொள்ள வல்லரசு நாடுகள் அனுமதித்திருக்கின்றன. இதன் மூலம் ஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரச் சிக்கல் தாற்காலிகமாகத் தீரும் என்பதுடன், நீண்ட காலமாகத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.
பொருளாதாரத் தடை ஈரானை வெகுவாகவே பாதித்திருக்கிறது. 2012இல் நாளொன்றுக்கு 25 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருந்த ஈரான், இப்போது வெறும் 10 லட்சம் பேரல்கள்தான் விற்கிறது. இப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்தத்தால் இந்த நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதனால், உலகச் சந்தையில் அதிக கச்சா எண்ணெய் வருகையோ, அதனால் விலை குறைவோ ஏற்பட்டுவிடவும் போவதில்லை.
ஈரானுடனான ஒப்பந்தத்தால், அமெரிக்கா சில சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடும். அமெரிக்காவின் நீண்ட நாள் நட்பு நாடுகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும், அமெரிக்க - ஈரான் நெருக்கம் புதுப்பிக்கப்படுவதை நிச்சயமாக விரும்பாது. சிரியாவில் இப்போதிருக்கும் ஆட்சியை ஈரான் ஆதரிக்கிறது. அதனால் இஸ்ரேல், இந்த ஒப்பந்தம் தொடரக்கூடாது என்பதற்காகவே, ஈரானைத் தாக்கக்கூடும். அதேபோல, சவூதி அரேபியாவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பாகிஸ்தானின் உதவியுடன் அணு ஆயுத சோதனையில் இறங்க முற்பட்டலாம்.
கடந்த முன்று நான்கு ஆண்டுகளில், ஈரானிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு நாளொன்றுக்கு 4,26,000 பேரல்களிலிருந்து 2,63,000 பேரல்களாகக் குறைத்து விட்டிருக்கிறது. நமக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் சவூதி அரேபியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஈரான் இப்போது ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இராக், வெனிஸýலா போன்ற நாடுகள் அந்த இடத்தை நிரப்பி இருக்கின்றன. ஈரான் மீதானப் பொருளாதாரத்தடை தொடர்ந்தாலும் நமக்கு பாதிப்பு இல்லை என்றாலும், தடை அகன்றால் நிச்சயமாக இந்தியாவுக்கு நல்லது. காரணம், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் வரவு அதிகரித்தால் விலை குறையும். நமது அந்நியச் செலாவணி இழப்பு அதன் மூலம் குறையும்.
ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தம், நிரந்தத் தீர்வாக மாறுவதுதான் உலகத்துக்கு நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.