தலையங்கம்

விஷவிதை தூவுகிறார்கள்!

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் சக்திகளுக்கு எத்தகைய அரசியல் தொடர்பு இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆசிரியர்

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் சக்திகளுக்கு எத்தகைய அரசியல் தொடர்பு இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகளால் எந்த அரசியல் கட்சிக்குப் பயன் கிடைக்கிறது என நடத்தப்படும் விவாதம் துரதிருஷ்டவசமானது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை வகுப்புக் கலவரங்களுக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

ஆனால், முசாஃபர்நகர் வகுப்புக் கலவரம் உள்பட, செப்டம்பர் 15 வரையிலான கலவரங்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை மதவாரியாகப் பிரித்துப் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதுமட்டுமல்ல, சென்ற ஆண்டு எத்தனை வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றன, எந்தெந்த மாநிலங்களில் நடந்தன, இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் எந்தெந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. இதுநாள்வரை இத்தகைய நடைமுறை இருந்ததில்லை.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு வகுப்புக் கலவரத்தின் இரத்தம் காயாத நிலையில் இத்தகைய புள்ளிவிவரத்தை யாருக்காக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடுகிறது? இத்தகைய புள்ளிவிவரங்கள், மேலும் மதரீதியான உணர்வுகளைப் புண்படுத்தவும், இதுவரை அமைதியாக இருந்த வகுப்பாரிடத்திலும்கூட வெறியைத் தூண்டவும், நியாயப்படுத்துவதாகவும் அமையுமே தவிர இந்த புள்ளிவிவரத்தால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் பெயரை, புகைப்படத்தை பயன்படுத்துவதில்லை என்பது எப்படி பொதுமரபோ, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சிறார்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது எவ்வாறு பொதுமரபோ, அதேபோன்று, ஒரு இடத்தில் நடந்த சம்பவம் பிற இடங்களில் வசிக்கும் பிற மதத்தினரிடையே அச்சத்தையும், அவநம்பிக்கையையும், விரோதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் எந்தெந்த சாதியினர் எந்தெந்த மதத்தினர் மோதிக்கொண்டார்கள் என்பதைக் குறிப்பிடாமல் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம் என்று பொதுவாக தெரிவிக்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த மரபு மீறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, இதுபோன்ற கலவரங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வேளையில், இப்படி ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன?

இதுபோன்று, கடந்த பதின் ஆண்டுகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களையும் மதரீதியாக பட்டியலிட்டு புள்ளிவிவரம் வெளியிட்டால் என்ன ஆகும்? அதை எதிர்க்கட்சிகள் வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்? சமூகத்தில் தேவையற்ற மனவெறுப்புகளை ஏற்படுத்தும். எல்லா இடங்களிலும் நல்லிணக்கம் கெட்டுப் போகும். இதுதான் மத்திய அரசின் நோக்கமா? விருப்பமா?

நவகாளிக்கு செல்லும் வழியெங்கும் காந்திஜி பேசிய பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் காணப்படும் ஒரே அறிவுரை-அனைவரையும் பாதிக்கப்பட்ட மனிதர்களாகப் பாருங்கள், சகோதரர்களாகப் பாருங்கள், மதத்தை வைத்து மனிதர்களை பிரித்துப்பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோள்தான். எந்தப் பக்கம் அதிக மரணம் என்று கணக்குப் பார்க்கும் நேரம் அதுவல்ல. இந்த மரணங்களுக்கு அடிப்படையான வெறுப்பை விலக்குவதுதான் அவசியத் தேவை என்பதை அண்ணல் காந்தி உணர்ந்திருந்தார். காங்கிரஸ் அத்தகைய மரபுகளை மறந்துவிட்டது துரதிருஷ்டம்.

இறந்தவர்களை மதரீதியாகப் பிரித்து பட்டியலிடுவதாலோ புள்ளிவிவரங்களைத் தருவதாலோ வகுப்புக் கலவரங்களைத் தடுத்துவிட முடியாது. அது வெறுப்பை அதிகரித்து கலவரத்தைத் தூண்டிவிடுமே தவிர குறைக்காது.

சமூக வலைதளங்களால் இன்று ஏற்பட்டு வரும் ஆபத்தான சூழ்நிலையில் இத்தகைய தேவையற்ற விஷவிதைகளை ஆகாயத்திலிருந்து தூவிவிடுவார்கள் என்பது தெரியாமல் உள்துறை அமைச்சகம் செயல்பட்டிருக்கிறது என்று தோன்றவில்லை. சமாஜ்வாதி கட்சியினர் குற்றம் சாட்டுவதைப்போல, காங்கிரஸ் கட்சியானது தேசப்பாதுகாப்பையும், மத நல்லிணக்கத்தையும் காற்றில் பறக்கவிட்டு வாக்கு வங்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்றுதான் கருதத்தோன்றுகிறது.

வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தண்டிப்பாரா என்று கேட்டுவிடக் கூடாது. அன்றைய காந்தி வேறு... இன்றைய காந்தி வேறு...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT