நிர்வாகத்தின் எல்லா முடிவுகளிலும் கண்காணிப்பும், ஒரு பக்கம் கோடாமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, நீதிபதிகள் நியமனத்தில் மட்டும் நீதித் துறைக்கு தனிச் சுதந்திரமும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதும் தவறு என்கிற சட்ட அமைச்சர் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது.
முகம்மது தாஹீர், பிஸ்வநாத தாஸ், பேராசிரியர் கே.டி. ஷா, ஆர்.கே. சித்வா, ரோகிணி குமார் சௌதரி, ஷிபன்லால் சாக்சேனா, சதீஷ் சந்திரா, எம். அனந்தசயனம் ஐயங்கார், கே. சந்தானம், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், ஹெச்.வி. காமத், நசீருதீன் அகமத், ஜஸ்பத்ரால் கபூர், மோகன்லால் கௌதம், பி.கே. சென், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, பக்ஷி தேக்சந்த் உள்ளிட்ட பலரும் விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். அதன் பிறகுதான் நீதித் துறை தொடர்பான அரசியல் சட்டப் பிரிவுகள் 124-ம், 217-ம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் (Concurrence) நீதிபதிகள் நியமனம் என்பது, கலந்தாலோசனையுடன் (Consultation) என்று அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டது. அதாவது, மத்திய அரசு தனது சட்ட அமைச்சகத்தின் மூலம் நீதிபதியாக ஒருவரை நியமிப்பது பற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிக்கும். ஆனால், அவரது ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதுதான் அரசியல் சட்டத்தின் சாரம்.
இந்தியாவில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடனான கலந்தாலோசனைப்படிதான் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்றவை நடந்து வந்தன. அரசுக்கும், சட்ட அமைச்சகத்திற்கும்தான் நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமையும், அதிகாரமும் இருந்து வந்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்துகள் ஏற்கப்பட்டு, அதற்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் செயல்பட்டு வந்த நீதிபதிகள் நியமன முறை, 1970 முதல் தடம் புரளத் தொடங்கியது.
நீதித் துறையில் அரசியல் தலையீடு என்பது மட்டுமல்ல, ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படும் போக்கும் எழுபதுகளில் தொடங்கியது. கேரளத்தில், கட்சி உறுப்பினராகவும், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் அங்கம் வகித்தவருமான ஒருவர் நீதிபதியாக்கப்பட்டார். தமிழகத்தில் அன்றைய ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த கட்சிக்காரர் நீதிபதியாக்கப்பட்டார். எல்லா மாநிலங்களிலும் இதுபோல நீதித் துறையில் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கத் தொடங்கின. அன்றைய காங்கிரஸ் அரசுக்கும், பிரதமர் இந்திரா காந்திக்கும் விசுவாசமாக இருந்த பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது மட்டுமல்ல, பணிமூப்பு அடிப்படை புறக்கணிக்கப்பட்டு விசுவாசிகள் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட முன்னுதாரணங்களும் அரங்கேறின.
அவசர நிலைச் சட்டம், எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இந்த விபரீதப்போக்கு, நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்கிற கருத்துக்கு வலிமை சேர்த்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக, எல்லா உயர்நீதிமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் வெளிமாநிலத்தவராக இருக்க வேண்டும் என்கிற சுற்றறிக்கையை அன்றைய சட்ட அமைச்சர் எல்லா முதலமைச்சர்களுக்கும் அனுப்பினார். இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பும், நாடு தழுவிய சர்ச்சையும் எழுந்தன.
இதற்கு முன்னதாகவே, "முதலாவது நீதிபதிகள் வழக்கு' என்று பரவலாக அறியப்படும் இந்திய யூனியனுக்கு எதிரான எஸ்.பி. குப்தாவின் வழக்கில், நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்குத்தான் இறுதி அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் 1981-இல் தீர்ப்பு வழங்கியதுடன், அந்தச் சர்ச்சை அப்படியே அடங்கியது என்றாலும், நீறுபூத்த நெருப்பாக, நீதித் துறையில் அரசியல் தலையீடு அறவே இருக்கக் கூடாது என்கிற கருத்து அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்தது.
1993-இல், உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் இந்திய யூனியனுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு ("இரண்டாவது நீதிபதிகள் வழக்கு') உச்சநீதிமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. 1981-இல் தனக்கு எதிராகச் செய்துவிட்ட தவறைத் திருத்தும் முகமாக, நீதிபதிகள் நியமனத்தில் நீதித் துறைக்குத்தான் முழு அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. "கலந்தாலோசனை' என்கிற அரசியல் சட்ட வார்த்தைக்கு, "தலைமை நீதிபதியின் ஆலோசனைப்படி' என்கிற புதிய விளக்கத்தை, இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் அளித்தது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.