"நீதிபதிகள் தேர்வுக் குழு' முறை என்பது நல்லெண்ணத்துடன் கூடிய முயற்சியாக இருக்கலாம். ஆனால், குறைபாடுகள் இல்லாத முயற்சியும் அல்ல; வெளிப்படைத்தன்மையுடைய வழிமுறையும் அல்ல; இதில் ஊழல் இருப்பதாகத் தெரியாவிட்டாலும், நிச்சயமாக விருப்பு வெறுப்புகளும், சமரசங்களும், சலுகைகளும் காணப்
படுவது உண்மை.
பெருவாரியான தேர்வுகளில், "நீதிபதிகள் தேர்வுக் குழு'வின் உறுப்பினராக இருப்பவர்கள், அவரவருக்கு வேண்டியவர்களை "உனக்கு அவர், எனக்கு இவர்' என்கிற பாணியில் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. முன்னாள் நீதிபதிகள் தேர்வுக்
குழுவில் இடம்பெறும் நண்பர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை நீதி
பதிகளாக்கும் போக்கும் காணப்படுகிறது. அதை எதிர்த்து யாரும் வழக்குத் தொடுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாது.
"நீதிபதிகள் தேர்வுக் குழு' ஒருவரை எந்த அடிப்படையில் நீதி
பதியாகத் தேர்வு செய்கிறது, யாரால் யார் பரிந்துரைக்கப்படுகிறார் போன்ற எதுவுமே எழுத்து மூலம் பதிவு செய்யப்படுவதில்லை. அதுபற்றி யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. அதனால்தான், "இந்தியாவிலேயே மிகவும் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்
படும் ரகசியம் நீதிபதிகள் நியமனம்தான்' என்று 2011-இல் வி.எம். தார்குண்டே நினைவுச் சொற்பொழிவில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரூமாபால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில், அதன் அதிபர் முக்கியமான தலைவர்களுடனும், அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து நீதிபதிகளாக நியமிக்க சில நபர்களைப் பரிந்துரைக்கிறார். அமெரிக்க மேலவையான செனட்டின் நீதித் துறைக் குழு, அதிபர் பரிந்துரைத்திருக்கும் நபர்
களின் தகுதி, பின்னணி, திறமை, ரகசிய போலீஸ் அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்த பிறகு, அந்த நபரை நேர்காணலுக்கு அழைக்
கிறது. அவரிடம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அதன் பிறகு, நீதித் துறைக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அந்த நபர் நீதிபதி நிய
மனத்திற்காக மேலவைக்குப் பரிந்துரைக்கப்படுகிறார். மேலவையில் விவாதம் நடைபெற்று, ஐந்தில் மூன்று பங்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, வாக்கெடுப்பில் பெரும்பான்மையினரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அவர் நீதிபதியாக நியமிக்கப்படும் தகுதி பெறுகிறார். அதாவது, அமெரிக்காவில் நீதிபதிகள் மேலவையின் ஒப்புதலுடன் அதிபரால் நியமிக்கப்படுகின்றனரே தவிர, நீதிபதி
களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவதில்லை.
இங்கிலாந்தில், 15 உறுப்பினர்கள் கொண்ட குழு நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. இந்தக் குழுவில் ஒரு பாரிஸ்டர், ஓர் அரசு வழக்குரைஞர், ஐந்து நீதிபதிகள், ஏதாவது ஓர் ஆணையத்தின் உறுப்
பினர் ஒருவர், கீழமை நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாக இருக்கும் ஒருவர், பொது வாழ்க்கையிலோ சமுதாயத் தொண்டிலோ ஈடுபடும் ஆறு பேர் } ஆகியோர் அடங்கிய குழுதான் நீதிபதிகள் நியமனத்தில் முடிவெடுக்கிறது. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர் பொதுமக்களில் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
உயர்நீதித்துறைக்கான நீதிபதிகள் நியமனத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவது தொடர்பான விவாதம், அரசியல் நிர்ணய சபையிலேயே எழுந்தது. ஷிபன்லால் சாக்சேனா என்பவரின் இந்தக் கருத்தை ரோகிணி குமார் சௌத்ரியும், எம். அனந்தசயனம் ஐயங்
காரும் கடுமையாக எதிர்த்து வாதிட்டனர். பாபாசாகேப் அம்பேத்கரும், நீதித் துறை மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதல் பெற்று செயல்
படுவதை விரும்பவில்லை.
""என்னுடைய கருத்தில், அன்றைய ஆளும் கட்சியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர்நீதித்துறைப் பதவிகளுக்கு நியமனங்களை அறிவிப்பது ஆபத்தானது. அது, அரசுக்கு சாதகமான நீதித் துறைக்கு வழிகோலிவிடும். அதேபோல, நீதிபதிகள்
நியமனத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது என்பதும் ஏற்புடையதல்ல. இது மிகவும் சிரமமானது என்பது மட்டுமல்ல,
அரசியல் காரணங்களும், நிர்பந்தங்களும்கூட நீதிபதிகள் நியமனத்தில் நுழையக்கூடும்'' என்று அப்போதே எச்சரித்திருக்கிறார்.
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரும் சரி, அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களும் சரி, நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலைமைக்கோ, நீதித் துறைக்கோ எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத வரம்பு மீறிய அதிகாரத்தை அளிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்வதையும் ஏற்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
நீதிபதிகள் நியமனத்தில் உலகில் எங்குமே இல்லாத ஒரு விசித்திரமான நடைமுறை இந்தியாவில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்தது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் மூலம் அதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.