தலையங்கம்

தோண்டி எடுத்த தீர்ப்பு!

உச்சநீதிமன்றம் 1993 முதலான மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் சட்ட விரோதமானவை என்று தீர்ப்பளித்திருக்கிறது.

ஆசிரியர்

உச்சநீதிமன்றம் 1993 முதலான மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் சட்ட விரோதமானவை என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஒதுக்கீடு செய்த அரசின் நடைமுறையிலும், ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வின் தலைவர் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா குற்றம் சாட்டியிருக்கிறார்.

நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடாமல், விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காமல் ஒதுக்கீடு செய்ததால் 1.83 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 2012இல் உச்சநீதிமன்றம் தனது நேரடி மேற்பார்வையில் மத்தியப் புலனாய்வுத் துறையால் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.

மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருந்த வினோத் ராய்க்கு மட்டுமல்ல, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுகிறது என்று உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து இதற்கு எதிராகப் போராடி வந்த இடித்துரைப்பாளர் (விசில் ப்ளோயர்) மக்களவை பா.ஜ.க. உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீருக்கும், இப்போது மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருக்கும் பிரகாஷ் ஜாவ்டேகருக்கும்கூட இந்தத் தீர்ப்பு, மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும்.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு பிரச்னை பல விசித்திரமான நிகழ்வுகளை எதிர்கொண்டது. இந்த ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மத்திய நிலக்கரி அமைச்சகத்திலிருந்தும், பிரதமர் அலுவலகத்திலிருந்தும் மாயமாய் மறைந்தன. கடுமையான விமர்சனங்கள் வெளிவந்ததும் திடீரென மறுபிறவியும் எடுத்தன. உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளும், மத்திய சட்ட அமைச்சரும் சி.பி.ஐ.யின் கோப்புகளைப் பார்த்துத் திருத்தம் செய்ய முற்பட்டனர். உச்சநீதிமன்றம் பகிரங்கமாக மத்தியப் புலனாய்வுத் துறையை மத்திய அரசின் "கூண்டுக் கிளி' என்று விமர்சனம் செய்யும் அவலமும் ஏற்பட்டது.

மத்திய அரசு சட்டப்படியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தது ஒரு புறம்; ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களும், ஒப்பந்தப்படி அந்தச் சுரங்கங்களை பயன்படுத்தாமல், திட்டக் குழுவின் பரிந்துரையைவிட குறைவான அளவே நிலக்கரி வெட்டி எடுத்து, வேண்டுமென்றே நிலக்கரி உற்பத்தியைக் குறைத்து இறக்குமதிக்கு வழிகோலி தில்லுமுல்லுகள் செய்தன.

1993 முதல் காங்கிரஸ், ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகளின் காலகட்டங்களில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் நடந்திருந்தாலும் அதிகமான ஒதுக்கீடு, அதாவது 218 சுரங்கங்களில் 166 சுரங்கங்களின் ஒதுக்கீடு, மன்மோகன் சிங் பிரதமராகவும், நிலக்கரித் துறையில் நேரடிப் பொறுப்பிலும் இருந்த காலகட்டத்தில்தான் நடைபெற்றிருக்கிறது.

ஏல முறையில்தான் ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அப்படியானால், அவரது கருத்துக்கு எதிராக நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் நடந்தன என்பதை அவர் ஏற்றுக் கொண்டார் என்பது அதன் பொருள். அப்படியானால், பிரதமராகவும் நிலக்கரித் துறையின் அமைச்சராகவும் இருந்த மன்மோகன் சிங்கின் கரங்களைக் கட்டிப் போட்டது யார் என்கிற கேள்வி எழுகிறது.

தவறான முடிவு என்று தெரிந்தும் அதற்குத் துணை போயிருக்கிறார் மன்மோகன் சிங் என்பது அவருக்கும் அவர் வகித்த பதவிக்கும் பெருமை சேர்க்காது. யாரால், எதற்காக அவர் முறைகேடான ஒதுக்கீட்டுக்குத் தலையசைத்தார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை மன்மோகன் சிங்கிற்கு உண்டு. அவர் இனியும் மெளனம் சாதித்துத் தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணலாகாது.

வெளிப்படையான ஏல முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 சுரங்கங்களைத் தீர்ப்பு ஏற்றுக் கொள்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால், மின்சார உற்பத்தி பாதிக்கப்படும், தயாரிப்புச் செலவு கூடிவிடும், அந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்த நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பன போன்ற பல விமர்சனங்களும் எதிர்ப்பும் எழலாம். அதற்காக, தவறுகளை நியாயப்படுத்த முடியாது.

இந்த ஒதுக்கீட்டின் மூலம், பெரும் லாபம் ஈட்டியவர்கள் யார் யார் என்பது அறியப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இந்த முறைகேடான ஒதுக்கீட்டுக்குப் பின்னணியில் இருந்த அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT