தலையங்கம்

மோடியின் புதிய கணக்கு!

பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையில் குறிப்பிட்டது போலவே "பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா' என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

ஆசிரியர்

பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையில் குறிப்பிட்டது போலவே "பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா' என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அத்தனை ஏழைகளுக்கும் வங்கிக் கணக்கு இருப்பது உறுதிப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடும் உறுதிப்படுத்தப்படுகிறது.

"நாம் வங்கி வசதி செய்து கொடுக்காததால், வங்கிப் பரிமாற்றம் பற்றிய தகவல் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதால், இந்திய விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்குப் பணம் பெற்று விவசாயத்தில் ஈடுபட வேண்டி இருக்கிறது. விவசாயம் பொய்க்கும்போது, அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது, ஏழை விவசாயிகள் பற்றிய அவரது ஆழ்மன அக்கறையின் வெளிப்பாடு. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, இந்தியாவின் 80% குடும்பங்களில் கைபேசிகள் இருக்கின்றன. ஆனால், வங்கிக் கணக்கு இல்லை.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் காணப்படும் புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள 24.7 கோடிக் குடும்பங்களில் 14.5 கோடி குடும்பங்கள் மட்டுமே வங்கிச் சேவையை ஏதாவது வகையில் பயன்படுத்துகின்றன. உலக வங்கியின் சமீபத்திய அறிக்கைப்படி, இந்தியாவிலுள்ள 73% விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வசதி கிடைப்பதில்லை. அதுமட்டுமல்ல, வெறும் 4% இந்தியர்கள்தான் அரசு மானியங்களை வங்கிக் கணக்கு மூலம் பெறுகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவிலுள்ள குடும்பங்களில் 58.69% மட்டுமே வங்கிக் கணக்கு உள்ளவையாக இருக்கின்றன. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 67.77% குடும்பங்கள் நகர்ப்புறங்களிலும், 54.43% குடும்பங்கள் கிராமப்புறங்களிலும் வங்கிச் சேவை பெற்று வருகின்றன. மகாராஷ்டிரம் (68%), தமிழ்நாடு (52%), உத்தரப்

பிரதேசம் (72.02%), மத்தியப் பிரதேசம் (46.60%), குஜராத் (51.29%), கர்நாடகம் (61.11%), மேற்கு வங்கம் (48.75%), பிகார் (44%) ஆகிய மாநிலங்களில் ஓரளவுக்கு வங்கிகள் கிராமப்புறங்

களிலும் செயல்பட்டு வந்தாலும், இன்னும் எந்த மாநிலத்திலும் 75%க்கு மேலான குடும்பங்கள் வங்கிச் சேவை பெறுபவையாக இல்லை.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற குறிக்கோள் நிறைவேற்றப்படுவதால் பல நன்மைகள் உண்டு. முதலில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல, விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் பெற்று அவதிப்படுவது தடுக்கப்படும். அரசு மானியங்

களும், உதவித்தொகையும், அரசின் பட்டுவாடாக்களும், இடையில் அதிகார வர்க்கத்தால் எடுத்துக் கொள்ளப்படாமலும், பகிர்ந்து கொள்ளப்படாமலும், கையூட்டுப் பெறாமலும் உரியவரைப் போய்ச் சேரும். மானியங்கள் மடை மாற்றப்பட மாட்டாது.

இப்போது முறையான வங்கி வசதி பலருக்கும் இல்லாததால், அவர்கள் தங்கள் சேமிப்புகளைத் தங்க நகைகளாகவும், பணமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்திலேயே மிக அதிகமான சேமிப்பு விகிதம் இந்தியாவில் இருந்தும், அதில் வெறும் 35% மட்டும்தான் வங்கிச் சேவை மூலம் பாதுகாக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்

கவும் இதன்மூலம் நடத்தப்படும் முயற்சி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் உத்தியாகத் தெரிகிறது.

நிச்சயமாக, பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு மிகவும் கடினமான ஒன்று என்பதில் ஐயமில்லை. பலருக்கும் தேவையான முகவரி, இருப்பிட அத்தாட்சி, ஆவணங்கள் இருக்கப் போவதில்லை. வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை வழங்குதலும் இணைக்கப்படுவது சாத்தியம்தான் என்றாலும், அதற்கான மனிதவளம் வங்கிகளுக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

பிரதமர் இலக்கு நிர்ணயித்திருப்பதால், வங்கிகள் ஒருவருக்கே இரண்டு கணக்குகளைத் தொடங்கிப் போலிக் கணக்குகளை உருவாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வோர் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியும் இந்த இரண்டு நாள்களில் கிளைக்கு 125 புதிய கணக்குகளைத் தொடங்குவது என்பது இலக்கு. அதற்கான ஆவணங்களை முறையாகச் சரிபார்க்க முடியுமா என்பது சந்தேகம்.

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இப்போதே வாராக்கடன்களில் மூழ்கிக் கிடக்கின்றன. அவை மேலும் நஷ்டமடைய, தனியார் வங்கிகள் சமூக அக்கறை பற்றிக் கவலைப்படாமல் பெரும் லாபம் ஈட்டுமென்றால், பிறகு எதற்காகத் தனியார்மயம்? அவர்

களுக்கும் அரசு இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடிக்கு நாம் விடுக்கும் கோரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT