தலையங்கம்

நக்ஸல் நுண்ணுயிரி!

தமிழக - கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வனத்துறை அலுவலகம் சூறையாடப்பட்டு, ஒரு ஜீப் எரிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டுக்குள் வரக்கூடும்

ஆசிரியர்

தமிழக - கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வனத்துறை அலுவலகம் சூறையாடப்பட்டு, ஒரு ஜீப் எரிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டுக்குள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளத்திலிருந்து கோவை மாவட்டத்துக்கு வரக்கூடிய ஆறு வழித்தடங்களில் காவல் பலப்படுத்தப்பட்டு, வாகனச் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாநில எல்லை கடந்து வருவோர் அனைவரையும் விசாரித்த பிறகே அனுமதிப்பதாகத் தமிழகக் காவல்துறை தெரிவிக்கிறது.

இந்தத் தாக்குதல் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று மகிழ்ச்சி அடையலாமே தவிர, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தும்கூட தமிழக வனத்துறையும் காவல்துறையும் விரைந்து செயல்படவில்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தியல்ல.

இம்மாதம் 18-ஆம் தேதி, தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனப்பகுதியில் எட்டு பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதத்தில் உலவுவதாகவும், எச். அக்ரஹாரம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே, 25 முதல் 35 வயதுள்ள எட்டு பேர் (இவர்களில் இரண்டு பேர் பெண்கள்) சமைத்துச் சாப்பிடுவதாகவும், இவர்கள் அன்னியர்கள் என்பதோடு தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு உலவுகின்றனர் என்றும் உள்ளூர் கிராமவாசிகள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். இது பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்தது.

நக்ஸல்கள் நடமாட்டமா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, காவல்துறை நடத்திய விசாரணைக்குப் பிறகு, நக்ஸல்கள் நடமாட்டம் என்று உறுதியாகக் கூற முடியாது என்று சொன்னார்கள். அவர்கள் யார் என்றே தெரியாமல், அவர்களை நக்ஸல்கள் அல்ல என்று தமிழக காவல்துறையால் எப்படி சொல்ல முடிந்தது?

அப்போதே இதுகுறித்து கேரள மாநில காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் பேசி, தேடுதல் வேட்டையை இணைந்து நடத்தியிருந்தால், அமைதிப் பள்ளத்தாக்கு சென்று பதுங்கியிருந்த இந்த மாவோயிஸ்டுகளை பிடித்திருப்பதோ அல்லது இவர்களது திட்டத்தைக் குலைத்திருப்பதோ சாத்தியமாகியிருக்கும். ஆனால், நக்ஸல்கள் நடமாட்டம் இல்லை என்கின்ற தீர்மானத்துக்கு காவல்துறை வந்துவிட்டது. ஒருவேளை, ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பாக வேண்டாம் என்பதற்காக நக்ஸல்கள் நடமாட்டம் இல்லை என்று காவல்துறை தெரிவித்ததோ என்னவோ? நக்ஸல் நடமாட்டத்தை உணர்ந்து ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதற்காக நாம் தமிழக காவல்துறையை பாராட்டத்தான் வேண்டும்.

கேரள மாநிலத்துடன் தங்களுக்குக் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பிறகும்  கேரள வனத்துறையும், கேரள காவல் துறையும் அமைதிப்பள்ளத்தாக்கு, அட்டப்பாடி பகுதிகளில் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தாமல் விட்டிருந்தால், அவர்கள் மீதுதான் தவறு.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. திட்டங்களின் முழுமையான பலன் போய்ச்சேரவில்லை என்பதையும், அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. இருப்பினும்கூட, இங்குள்ள ஆதிவாசி அமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கின்றன. இயற்கை ஆர்வலர்களுக்கும் ஆதிவாசிகளுக்குமான நட்பு, இவர்களுக்கான நல உதவிகள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. ஆகவே பழங்குடியினருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துக் களம் இறங்க வேண்டிய, நக்ஸல்கள் தலையிட்டு அக்கிரமத்தை தடுத்து நிறுத்த வேண்டிய மோசமான சூழ்நிலை தமிழகத்தில் இல்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் பகுதியில் நக்ஸல் வேட்டை நடத்தியது போன்ற சூழ்நிலை நிச்சயமாக இன்றில்லை. இன்று பழங்குடியினர் குடியிருப்புகளில் ஒரு சிலராவது செல்பேசி வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான ஆதிவாசி குடியிருப்புகள் "ஒரு விளக்கு' திட்டத்தில் மின்சாரம் பெற்றுள்ளன. மலை ஓடைகளின் குடிநீரை உறிஞ்சி பாட்டில் குடிநீராக விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட கேரள வனப்பகுதியினரைப் போல தமிழக எல்லையில் எந்தப் பழங்குடியினரும் பாதிக்கப்படவில்லை.

கடந்த ஒரு வார காலத்தில் இரண்டு புலிகள், ஒரு சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இவற்றின் மரணத்துக்கு காரணம் நக்ஸல்களாக இருக்கக்கூடும். நக்ஸல் நடமாட்டம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, கானுயிர்களுக்கும் தொல்லை. தமிழ்நாட்டு வனப்பகுதி நக்ஸல்கள் தங்கவும், பயிற்சி பெறவுமான இடமாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டி: நாகா்கோவில் அணி சாம்பியன்

தமிழகத்தில் சூதாட்ட தளங்களை தடை செய்ய நடவடிக்கை: முகமது நசிமுத்தின்

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி

உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளா்கள்

SCROLL FOR NEXT