தலையங்கம்

மதமாற்றமல்ல தீர்வு!

கடந்த சில வாரங்களாக, உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளம் என்று ஆங்காங்கே "தாய்வீடு திரும்புதல்' என்கிற பெயரில் நடத்தப்படும் மதமாற்றம்தான், நாடாளுமன்றத்தை முடக்க இப்போது எதிர்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம்.

ஆசிரியர்

கடந்த சில வாரங்களாக, உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளம் என்று ஆங்காங்கே "தாய்வீடு திரும்புதல்' என்கிற பெயரில் நடத்தப்படும் மதமாற்றம்தான், நாடாளுமன்றத்தை முடக்க இப்போது எதிர்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம். அப்படியோர் ஆயுதத்தை ஆளும் கட்சியே எதிர்க்கட்சிகளிடம் கொடுத்து பிரச்னையை வளர விட்டிருப்பதுதான் வேடிக்கை.

எந்தவொரு கட்சியும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பது, தங்கள் கட்சியின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காகத்தான். தமிழகத்தில் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வராமலிருந்திருந்தால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கவோ, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இந்த அளவுக்கு அதிகரித்திருக்கவோ வாய்ப்பில்லை. அதனால், பாரதிய ஜனதா கட்சி தனது "ஹிந்துத்துவ' கொள்கைகளைத் திணிக்கிறது, நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளில் அர்த்தமில்லை.

"வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா' என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கோஷத்தால் கவரப்பட்டுதான் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தார்களே தவிர, அந்தக் கட்சியின் கொள்கைகளுக்காக அல்ல என்கிற வாதத்திலும் அர்த்தமில்லை. அப்படிப் பார்த்தால், ஹிந்தி எதிர்ப்புக்காகவும், ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்கிற கவர்ச்சியான வாக்குறுதிக்காகவும்தான் தமிழக மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காகத் திமுக தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றால் எப்படி? தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கிடைத்த வாய்ப்பை எந்தவொரு கட்சியும் நழுவ விடாது.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் பொதுக் குடிமைச் சட்டம், காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்தைத் தரும் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில் எழுப்புதல் போன்ற அடிப்படைக் கொள்கைகள் அனைத்துமே இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர, நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட அத்தனை முன்னணித் தலைவர்களும் "தாய்வீடு திரும்புதல்' என்கிற மீள் மதமாற்றம் பற்றி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியிருக்கிறார்கள்.

அதேநேரத்தில், ஏனைய மதங்களுக்கு மாறியவர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு, மன மாற்றமடைந்து மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்புகிறார்கள் என்று "தாய்வீடு திரும்புதல்' மதமாற்ற நிகழ்வுகளை ஆங்காங்கே திடீரென்று முனைப்புடன் நடத்துவது இயற்கையான நிகழ்வாகத் தெரியவில்லை. திட்டமிட்டு நடத்தப்படும் இதுபோன்ற "தாய்வீடு திரும்புதல்' நிகழ்ச்சிகள் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன என்று தோன்றுகிறது.

மனமாற்றம் ஏற்பட்டு, நம்பிக்கையின் பேரால் ஏற்படும் மதமாற்றம் என்பது எந்தக் காலத்திலும் ஒன்றிரண்டு விழுக்காடுகளுக்கு மேல் கிடையாது. உலகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மத நம்பிக்கையைச் சார்ந்துதான் மதமாற்றங்கள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, பிரிட்டிஷ் அரசர் எட்டாம் ஹென்றி, போப்பாண்டவரையும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையையும் எதிர்த்து இங்கிலாந்து திருச்சபையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டு மக்களும் புரட்டஸ்டண்டுகளாக மாறிவிட்டனர். "அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி' என்பதாகத்தான் உலகளாவிய அளவில் மத நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமும், கிறிஸ்துவ மதமும் பரவியதற்கும் ஆட்சியாளர்கள்தான் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

இதெல்லாம் இருந்தாலும், இப்போது ஆங்காங்கே "தாய்வீடு திரும்புதல்' என்கிற பெயரில் நடத்தப்படும் மதமாற்றங்கள் தேவைதானா என்று கேட்டால், நிச்சயமாக அதை ஆதரித்து வழிமொழிய முடியாது. மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, அதிலிருந்தெல்லாம் கவனத்தையும், முனைப்பையும் திசைதிருப்பும் விதத்தில் அமையும் இந்த ஆவேசத்தின் பின்விளைவு யாருக்கும் நன்மை தருவதாக இருக்கப் போவதில்லை. குறிப்பாக, நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த உதவுமே தவிர, வலு சேர்க்காது. போதாக்குறைக்கு, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட இதுவே காரணமாகிவிடக் கூடும்.

கட்டாய மதமாற்றம் என்பது விவாதத்திற்குரிய, தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது ஹிந்தி மொழியாக இருந்தாலும், மதமாற்றமாக இருந்தாலும் கட்டாயப்படுத்தப்படும் எதற்கும் ஜனநாயகத்தில் இடமில்லை. இந்தியாவின் இன்றைய தேவை வறுமை ஒழிப்பும், வளர்ச்சிப் பாதையும். அதற்குத் தீர்வு மதமாற்றமல்ல எனும்போது அதை அகற்றி நிறுத்துவதுதான் விவேகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டி: நாகா்கோவில் அணி சாம்பியன்

தமிழகத்தில் சூதாட்ட தளங்களை தடை செய்ய நடவடிக்கை: முகமது நசிமுத்தின்

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி

உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளா்கள்

SCROLL FOR NEXT