தலையங்கம்

நியமன முறையே தவறு!

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்கள் அடங்கிய பட்டியலில்...

ஆசிரியர்

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்கள் அடங்கிய பட்டியலில், மூன்று பெயர்களை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, நான்காவது பெயரான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞராக (சொலிசிட்டர் ஜெனரல்) பணியாற்றிய கோபால் சுப்பிரமணியத்தை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டிருக்கிறது.

பொதுவாக உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி வகிப்பவர்கள்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். சுதந்திர இந்தியாவில் இதுவரை நீதிபதிகள் எஸ்.எம்.சிக்ரி, எஸ்.சி.ராய், குல்தீப் சிங், சந்தோஷ் ஹெக்டே ஆகிய நான்கு பேர் மட்டும்தான் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கத்தை மீறி கோபால் சுப்பிரமணியம், ரோஹிங்டன் நாரிமன் ஆகிய இருவரையும் நேரிடையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தபோதே விமர்சனங்கள் எழுந்தன.

மத்திய அரசு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பினாலும்கூட, தற்போதைய நடைமுறைப்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அரசின் விருப்பமின்மையை நிராகரித்து, கோபால் சுப்பிரமணியத்தை நியமனம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால், அரசு அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பே அளிக்காமல் தமது பெயர் வேண்டுமென்றே அரசால் நிராகரிக்கப்படுவதாகவும், தன்மீது அபாண்டமாகப் பழி சுமத்தப்படுவதாகவும், உச்சநீதிமன்றம் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை என்றும் கூறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பட்டியலில் தான் கலந்துகொள்ளவே விரும்பவில்லை என்று அறிவித்து விட்டிருக்கிறார் கோபால் சுப்பிரமணியம்.

முந்தைய அரசின் மூத்த வழக்குரைஞராக இருந்தவர். மிகச்சிறந்த சட்ட வல்லுநர். எல்லோராலும் மதிக்கப்படும் இந்தியாவின் சிறந்த அறிவுஜீவிகளில் ஒருவர். அப்படிப்பட்டவர் அவசரப்பட்டு ஆத்திரத்தில் நீதிபதிகள் நியமனப் பட்டியலிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்திருக்க வேண்டாம். பொறுமையும் நிதானமும் இல்லாதவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிப் பொறுப்பு வகிக்கத் தகுதியற்றவர்கள்.

கோபால் சுப்பிரமணியம் விவகாரம், நீதிபதிகள் நியமன முறை பற்றிய மறு சிந்தனையின் அவசியத்தை உணர்த்துகிறது. நீதித்துறையில் நிர்வாகத்தின் தலையீடு இருப்பது கூடாது என்கிற வாதம் எவ்வளவு சரியோ, அதேபோல, எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லாத உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான நீதிபதித் தேர்வுக் குழுவின் மிகையான அதிகாரமும் தவறு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்படும் பட்டியலை அரசு அப்படியே ஏற்க வேண்டும் என்கிற நிலை, பல தவறுகளுக்கும் வழிகோலும் என்பது வெளிப்படை.

உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி ருமாபால் 2011ஆம் ஆண்டு நிகழ்த்திய வி.எம்.தார்க்குண்டே நினைவுச் சொற்பொழிவில் குறிப்பிட்டிருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

"இப்போது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளால் நியமிக்கப்படும் குழுவின் முடிவின்படிதான் நீதிபதிகளின் நியமனம் சாத்தியம். இதன் மூலம் நீதிபதிகள் நியமனத்தில் அரசு நிர்வாகத்தின் தலையீடு முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கிறது என்றாலும் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன முறைதான் நாட்டிலேயே யாருக்கும் தெரியாத மிகப்பெரிய ரகசியம். இந்த ரகசியம், நியமிக்கப்படுபவர்களின் பின்னணி, திறமை, தகுதி போன்ற விவரங்களை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகிறது. ஆதாரமில்லாத தகவல்கள், மனமாச்சரியங்கள் போன்ற காரணங்களால் திறமைசாலிகள் பலருக்கு நீதிபதி நியமனம் மறுக்கப்படுகிறது. தனிப்பட்ட நட்பும், வேறு பல காரணங்களும்கூட நீதிபதி நியமனப் பரிந்துரைக்குக் காரணமாகிறது. நீதிபதிகளின் நியமனக் குழுவின் ஒருமித்த கருத்து என்பதேகூட ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஆளுக்கு ஒருவர் என்று பரிந்துரைத்துக் கொண்டு ஏற்படுத்தப்படுவதால் நீதித்துறையின் நம்பகத்தன்மையும், திறமையும் கேள்விக்குறியாகிறது. அதுமட்டுமல்ல, நீதிபதி நியமனங்களுக்கு சிபாரிசு, காக்காய் பிடித்தல் போன்றவையும் காரணமாகின்றன'.

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதும், தலைமை நீதிபதியே தனக்கு வேண்டியவர்களால் அமைத்துக் கொள்ளும் பரிந்துரைக் குழுவின் மூலம் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்பட வேண்டும் என்பதும்தான் கோபால் சுப்பிரமணியம் பிரச்னை உணர்த்தும் சுடுகின்ற உண்மைகள். தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படுவது மட்டுமே இதுபோன்ற குளறுபடிகளும், விமர்சனங்களும் இல்லாமல் உயர் நீதித்துறைக்கான நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT