தலையங்கம்

வலுப்படும் வங்கதேச உறவு!

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது முதல் அரசு முறைப் பயணத்திற்கு வங்கதேசத்தைத் தேர்ந்தெடுத்தது, இந்தியா எந்த அளவுக்கு அந்த அண்டை நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஆசிரியர்

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது முதல் அரசு முறைப் பயணத்திற்கு வங்கதேசத்தைத் தேர்ந்தெடுத்தது, இந்தியா எந்த அளவுக்கு அந்த அண்டை நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது. சுஷ்மா ஸ்வராஜின் கடந்த வார வங்கதேச விஜயம் மிகப்பெரிய வெற்றி என்றோ, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டது என்றோ சொல்ல முடியாவிட்டாலும், இந்திய - வங்கதேச உறவில் காணப்பட்ட இடைவெளியை நிரப்புவதாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது.

வங்கதேச அரசுடனான பேச்சுவார்த்தைகளில் பல ஆக்கபூர்வமான கருத்துகள் இருதரப்பிலும் பகிர்ந்துகொள்ளப் பட்டன. 13 வயதுக்கு உள்பட்ட, 65 வயதுக்கு மேற்பட்ட வங்கதேசப் பிரஜைகளுக்கு ஐந்து ஆண்டுக்கான இந்திய விசா வழங்கப்படும் என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருக்கிறார். இப்போது, ஓராண்டுக்கு மட்டுமே அவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுகிறது.

திரிபுராவிலுள்ள பலத்தானா மின் நிலையத்திலிருந்து இந்தியா வங்கதேசத்திற்கு வழங்கிவரும் மின்சாரத்தை 500 மெகாவாட்டிலிருந்து 600 மெகாவாட்டாக அதிகரிக்கும் ஒப்பந்தத்தில் அமைச்சர் கையெழுத்திட்டார். அது மட்டுமின்றி, வங்கதேசத் தலைநகர் டாக்காவுக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் மைத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றும் திட்டத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்திருக்கிறார். அதேபோல, குவாஹாட்டியையும் ஷில்லாங்கையும் வங்கதேசத் தலைநகர் டாக்காவுடன் இணைக்கும் வகையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுவது பற்றியும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

மைத்ரி என்றால் நட்புறவு என்று பொருள். மேற்கு மற்றும் கிழக்கு வங்கத்துக்கு இடையேயான நட்புறவை உறுதிப்படுத்தும் வகையில் கொல்கத்தாவுக்கும் டாக்காவுக்கும் இடையேயான ரயிலுக்கு மைத்ரி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகும்கூட கொல்கத்தாவையும் டாக்காவையும் இணைக்கும் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன. ஆனால் 1965இல் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான ரயில் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. 43 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 2008இல் மீண்டும் ரயில் தொடர்பு ஏற்படுத்தப்பட்டபோது, அந்த ரயில் சேவைக்கு மைத்ரி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் வங்கதேச விஜயம், ஆட்சி மாற்றத்தால் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாறுதல் எதுவும் ஏற்படவில்லை என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. வங்கதேசத்துடனான இந்திய உறவில், முந்தைய மன்மோகன் சிங் அரசு விட்டுச் சென்ற இடத்திலிருந்து தாங்கள் தொடரப் போவதாக அறிவித்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மைத்ரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முந்தைய மன்மோகன் சிங் அரசின் முயற்சிகளைப் பாராட்டவும் முற்பட்டார்.

இரு நாடுகளுக்கிடையேயான தலையாய பிரச்னைகள் இரண்டு. முதலாவது, எல்லைப் பிரச்னை; இரண்டாவது, தீஸ்தா நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க. அரசு, எல்லைப் பிரச்னையில் முந்தைய அரசைவிடத் துணிவுடன் முடிவெடுக்க முடியும். ஆனால், தீஸ்தா நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எப்படி நரேந்திர மோடி அரசு ஒத்துழைக்க வைக்கப் போகிறது என்பது பெரிய கேள்விக் குறி.

வங்கதேச அரசு, அதிலும் குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அரசு, உல்பா மற்றும் வடகிழக்கு மாகாணத் தீவிரவாதிகள் அந்த நாட்டில் தஞ்சமடைவதையும் அங்கிருந்தபடி செயல்படுவதையும் முழுவதுமாகத் தடுக்க முற்பட்டிருக்கிறது. இந்தியாவுக்குள் வங்கதேசத்தவர்கள் அனுமதி இன்றி குடியேறுவது ஒரு பிரச்னையாக இருந்தாலும்கூட, வறுமை மக்களை எல்லை தாண்ட வைப்பதை உலகளாவிய பிரச்னையாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்தை மக்கள் மனதில் மதத் தீவிரவாதிகள் விதைக்க முற்பட்டிருக்கிறார்கள். இது வளராமல் தடுத்து நிறுத்துவதில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நிச்சயம் பங்கு உண்டு. அவரது கரங்களை வலுப்படுத்துவது இந்தியாவின் கடமை. அதற்கு, எல்லைப் பிரச்னையும், தீஸ்தா நதிநீர்ப் பங்கீட்டு விவகாரமும் உடனடியாகத் தீர்க்கப்பட்டாக வேண்டும்.

அதிகரிக்கும் இந்திய - வங்கதேச உறவு இரண்டு நாடுகளுக்கும் நல்லது என்பது மட்டுமல்ல, தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனத் தலையீட்டுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT