பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா என்று கேட்பார்கள். ஆனால், நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஜெனரல்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. ஆட்சி அதிகாரம் தங்களது கையிலிருந்து நழுவி விடாமல் இருப்பதற்காக எத்தகைய முட்டாள்தனத்தையும், மக்கள் விரோத நடவடிக்கையையும் செய்யத் துணிவார்கள் மியான்மர் ராணுவ அதிகாரிகள் என்பதற்கு அவர்களது சமீபத்திய முடிவு ஓர் உதாரணம்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத விசித்திரமான அரசமைப்புச் சட்டம், மியான்மர் ராணுவ அதிகாரிகளால் அங்கே இயற்றப்பட்டிருக்கிறது. ஒரு ஏமாற்று வாக்கெடுப்பின் மூலம் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தை மியான்மர் ராணுவத் தலைமை 2008ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. இந்த அரசமைப்புச் சட்டத்தின் ஒரே ஒரு நோக்கம் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து அரசும் ஆட்சியும் போய்விடலாகாது என்பதுதான்.
ராணுவத் தலைமையால் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டப்படி, மியான்மர் நாடாளுமன்றத்தில் 25 விழுக்காடு இடங்கள் ராணுவத்துக்காக ஒதுக்கப்பட வேண்டும். அத்துடன் நின்றுவிட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. ராணுவத்தால் இயற்றப்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்டத்தில் எந்தவொரு மாற்றம் செய்யப்பட்டாலும், அதை நிராகரிக்கும் அதிகாரம் இந்த 25 விழுக்காடு ராணுவத்தினருக்கு உண்டு என்பதுதான் மிகப்பெரிய அரசியல் மோசடி.
ராணுவ அதிகாரிகள் தங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கிக் கொண்டது மட்டுமல்ல, தங்களைத் தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பார்த்துக் கொள்வதிலும் குறியாக இருக்கிறார்கள். அவர்களது ஒரே ஒரு குறிக்கோள், மியான்மர் மக்களின் அபரிமிதமான செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஆங் சான் சூகியைப் பதவிக்கு வராமல் தடுத்து நிறுத்துவது.
சமீபத்தில், மியான்மர் நாடாளுமன்றக் குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட இருந்த ஒரு திருத்தத்தை நிராகரித்திருக்கிறது. மியான்மர் ராணுவத்தால் இயற்றப்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்டப்படி, ஒருவருடைய கணவரோ, மனைவியோ, குழந்தைகளோ இன்னொரு நாட்டுப் பிரஜையாக இருந்தால், அவர் மியான்மர் நாட்டின் குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ ஆக முடியாது. இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவை அகற்றும் வகையிலான திருத்தத்தைத்தான், நாடாளுமன்றக் குழு (ராணுவ அதிகாரிகள் குழு என்று கொள்க) நிராகரித்திருக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரே ஒரு காரணம், இந்தத் திருத்தம் மூலம் ஆங் சான் சூகி பதவிக்கு வந்து விடாமல் தடுப்பதுதான். சூகியின் காலம் சென்ற கணவர் பிரிட்டிஷ்காரர் என்பதும் அவரது இரண்டு மகன்களும் பிரிட்டிஷ் குடிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும்தான், இப்படியொரு அரசியல் சட்டப் பிரிவை ஏற்படுத்துவதற்கே காரணம்.
சூகியின் தனிப்பட்ட வாழ்க்கையின் பின்னணியைப் பயன்படுத்தி, அவர் ஆட்சியில் அமர்வதைத் தடுப்பது என்பது, மியான்மர் முழுமையான மக்களாட்சியை அனுபவிக்க விடாமல் தடுப்பது என்பது ராணுவத்துக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அப்படித் தடுக்காமல் போனால், தங்களுக்கு எதிர்காலம் கிடையாது என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருப்பதால்தான், எப்பாடுபட்டாவது ஆங் சான் சூகி பதவிக்கு வந்துவிடாமல் தடுக்க ராணுவம் முனைகிறது.
இப்படியெல்லாம் செய்வதன் மூலம், ராணுவம் தனக்கு எதிரான மனநிலையை தானே மக்கள் மத்தியில் வளர்க்கிறோம் என்பதை மறந்து விடுகிறது. மியான்மரில் மக்களாட்சியை நிறுவுகிறோம் என்ற பெயரில், ஒரு மோசடியான அரசமைப்பு சட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது இப்போது உலகத்துக்கே தெரிந்துவிட்டது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பது உலகறிந்த ஒன்று. ராணுவத் தளபதிகளின் விஷமத்தனமான அரசமைப்புச் சட்ட விதிகளை, நாடாளுமன்றப் பெரும்பான்மையின் மூலம் அகற்றுவேன் என்று சூளுரைத்துத்தான் ஆங் சான் சூகி மக்களின் ஆதரவைக் கோர இருக்கிறார். அதனால், ராணுவத்தின் சமீபத்திய முடிவை அவர் சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
ஆங் சான் சூகியைப் பதவிக்கு வராமல் தடுக்கும் ராணுவத்தின் முயற்சிகள் தாற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாமே தவிர, அவரை நிரந்தரமாக அகற்றி நிறுத்தி மியான்மரில் அரசியல் நடத்தவோ, ஆட்சியில் தொடரவோ முடியாது என்பதை மியான்மர் ராணுவத் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.