தலையங்கம்

விசாரணையும், எதிர்பார்ப்பும்...

சென்னை மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் 61 பேர் இறந்ததும் சோழவரத்தில் சுவர் இடிந்து 11 பேர் இறந்ததும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதற்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்று அரசியலாக்கப்படும் நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களின் அவலம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர்

சென்னை மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் 61 பேர் இறந்ததும் சோழவரத்தில் சுவர் இடிந்து 11 பேர் இறந்ததும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதற்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்று அரசியலாக்கப்படும் நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களின் அவலம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கட்டப்படும் ஒவ்வொரு கட்டுமானத்தின் மதிப்பீட்டுத் தொகையில் 1 விழுக்காடு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கு அளிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தது முதலாக இந்த வாரியத்துக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.738 கோடி. கடைசி இரு ஆண்டுகளில், 2012-13 நிதியாண்டில் ரூ.119 கோடியும், 2013-14 நிதியாண்டில் ரூ.134 கோடியும் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்றிருக்கும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமானங்களைக் கணக்கிட்டால் இது மிகவும் குறைவான தொகை. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ரூ.13,400 மதிப்பில்தான் கட்டுமானம் நடைபெற்றது என்பதை ஏற்பதற்கில்லை.

தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் கட்டுமானங்களின் மதிப்பீட்டுத் தொகையில் 1 விழுக்காடு உள்ளாட்சிகளுக்குச் செலுத்தப்பட்டுவிடுகிறது. உள்ளாட்சிகள் இந்த நிதியை முழுமையாக செலுத்துவதே இல்லை. அதிலும் அரசு கட்டடங்களுக்கான மதிப்பில் 1 விழுக்காடு செலுத்தப்படுவதே இல்லை.

சரி, கிடைத்த பணமாகிலும் முறையாக தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களாகப் போய்ச் சேருகிறதா என்றால், அந்தக் கணக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 23,60,719 பேர் உறுப்பினராக இருக்கிறார்கள். ஆனால் 1995 முதல் 2014 வரை 8 லட்சம் பேர் ரூ.235 கோடி மதிப்புக்குப் பயனடைந்துள்ளனர். விபத்து, இறப்பு மற்றும் ஈமச் செலவுக்காக பணம் பெற்றவர்கள் வெறும் 1,579 பேர் மட்டுமே. மகப்பேறு உதவித்தொகை பெற்ற பெண் தொழிலாளர்கள் 11,413 பேர் மட்டுமே. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு குறைவான பெண் தொழிலாளர்கள்தான் தாய்மை அடைந்தார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. திருமண உதவி பெற்றவர்களும்கூட 87,201 பேர் மட்டுமே. இயற்கை மரணத்துக்காக உதவித்தொகை பெற்றவர்கள் 43,164 பேர் மட்டுமே.

கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்புக்காக தரப்படும் உதவித்தொகை மட்டுமே அதிகளவில் பெறப்பட்டுள்ளது. 1995 முதல் 2014 வரை 90 கோடி ரூபாய் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் செயல்பாட்டில் மகிழ்ச்சி அளிப்பது இது ஒன்றே.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் இன்றைய தேவை, தமிழ்நாட்டுக்குள் கட்டுமான பணிக்காக வரும் அனைவரையும் உறுப்பினராக்குவதும், பணியிடப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதும்தான்.

மௌலிவாக்கம், சோழவரம் விபத்துகளில் இறந்தவர்கள் பலரும் ஆந்திர மாநிலத்தவர். அவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வாய்ப்பில்லை. வேறு சில கட்டு

மானப் பணிகளில் பிகார் மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களும் உறுப்பினர்களாக இருக்க வாய்ப்பில்லை. வெளிமாநிலத்தவர் இங்கே வந்தால் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டையுடன் பணியாற்றச் செய்யும் பொறுப்பை கட்டுமான உரிமையாளருக்கு கட்டாயமாக்க வேண்டும்.

விபத்தில் இறந்த பிறகு உதவித்தொகை வழங்குவதும், திருமணம், கல்வி உதவித்தொகை வழங்குவதும் மட்டுமே தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் கடமையாக இருக்க முடியாது. பணியிடப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எத்தகைய கட்டுமானங்களில் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், தொழிலாளர்கள் அந்த வசதியைப் பெறுவதைக் கண்காணிக்கவும் வேண்டும்.

காலத்தின் தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டிய மாற்றங்கள் இந்த நலவாரியத்தில் அதிகம் இருக்கின்றன. இதற்கு ஏற்ற விதத்தில் தொழிலாளர் சட்டங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம் என்றெல்லாம் கண்காணிப்பு அமைப்புகளும், அனுமதி வழங்கும் துறைகளும் இருந்தால் மட்டும் போதாது. விபத்து நேரிடும்போது, அதற்கு அனுமதி அளித்தவர்கள் முதல் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படாதவரை, இதுபோன்ற தவறுகள் குறையாது.

நீதிபதி ரகுபதி தலைமயிலான விசாரணைக் கமிஷன் இந்த சம்பவத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்போது இதற்கான பரிந்துரைகளை அளிக்கும் என்று எதிர்பார்ப்போமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT