தலையங்கம்

தடை அகன்றது!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு போன்ற அமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி கலைத்திருக்கிறார். இந்தக் குழுக்கள் பல நேரங்களில் கொதிப்பான விவகாரங்களுக்கான குளிர்பதனப்பெட்டியாக செயல்படவும், சில வேளைகளில் இத்தீர்வுகள் விவாதத்தின் மூலமே எட்டப்பட்டன

ஆசிரியர்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு போன்ற அமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி கலைத்திருக்கிறார். இந்தக் குழுக்கள் பல நேரங்களில் கொதிப்பான விவகாரங்களுக்கான குளிர்பதனப்பெட்டியாக செயல்படவும், சில வேளைகளில் இத்தீர்வுகள் விவாதத்தின் மூலமே எட்டப்பட்டன என்பதாகப் பொய்க்கு உண்மைமுலாம் பூசவும்தான் பயன்பட்டன. அதுமட்டுமல்லாமல், ஒரு பிரச்னைக்குத் தொடர்புடைய அமைச்சர் தன் கடமையை நிறைவேற்றாமல் தடுக்கவும், மற்ற அமைச்சர்கள் அந்த அமைச்சரை தங்கள் முடிவுக்கு நிர்பந்திப்பதற்கும்கூட இத்தகைய குழுக்கள்  ûஉதவின.

உதாரணமாக, சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிப்பதா வேண்டாமா, ஏற்றுமதி சர்க்கரைக்கு அளிக்கப்படும் மானியத்தைத் தொடர்வதா நிறுத்திவிடலாமா என்பதை வர்த்தகத் துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க முடியும். ஆனால், தன்னிச்சையாக செயல்பட அவரை அனுமதிக்காமல் இருப்பதற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கண்டுபிடித்த உபாயம்தான் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகார அமைச்சர்களின் குழுக்கள். சர்க்கரை ஏற்றுமதி அல்லது சர்க்கரைக்கு அளிக்கப்படும் மானியம் தொடர்பான முடிவுகளை வர்த்தகத் துறை அமைச்சர் எடுப்பதற்கு பதிலாக, முந்தைய ஆட்சியில் அதிகாரம்மிக்க அமைச்சர்கள் குழுவின் முடிவுக்கு விடுவார்கள்.

இதே நிலைமைதான் அவசியம் மிக்க, இன்றியமையாத நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அனைத்து அமைச்சரவைகளிலும் நடைபெற்றது. பல நேரங்களில் பிரச்னையை தள்ளிப்போட, ஆறப்போட இந்த குழுக்கள் உதவின. மானிய விலை சிலிண்டரை 9 ஆக வைப்பதா 12 ஆக உயர்த்துவதா என்பதை பெட்ரோலியத் துறை ஒரே நாளில் தீர்மானிக்க முடியும். ஆனாலும் அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு இதை விவாதித்து அறிவிக்கக் காலதாமதப்படுத்தியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 27 அமைச்சர்கள் குழுவும், 24 அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவும் இருந்தன. இவை அத்தனையும் கலைக்கப்படுவதால், இனி அந்தந்த துறை நடவடிக்கைக்கு நேரடியாக அந்தந்த அமைச்சரே பொறுப்பேற்கிறார். சிக்கலான பிரச்னை என்றால் பிரதமரின் ஒப்புதலுடன் நேரடியாக அந்தத் துறை நடவடிக்கையில் இறங்கும். தவறு என்றால், அதற்கு அமைச்சரும், பிரதமருமே பொறுப்பாவார்கள், அது நல்லதுதானே?

கூட்டணிக் கட்சிகள் கொடுத்த நெருக்கடியாலும் முனகல்களாலும்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இத்தகைய அமைச்சர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஒரு முடிவை மேற்கொண்டால், அதனை கூட்டணிக் கட்சிகள் ஏற்கவில்லை. தங்களைக் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் தங்கள் செல்வாக்கு தங்கள் மாநிலத்தில் குறைந்து போனதாகவும் தெரிவித்தன. கூட்டணியை விட்டு விலகிப்போவேன் என்றெல்லாம்கூட மிரட்டின.

ஆகவே இத்தகைய அமைச்சரவைக் குழு மற்றும் அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்களையும் உள்ளடக்கியவையாக இருந்தன. இதில் எந்த அமைச்சர் வலுவானவராக, ஆளுமை மிக்கவராக இருந்தாரோ அவர் சொல்வதே வேதவாக்காக இருந்தது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பெயரளவுக்குத்தான் பிரதமராக இருந்தாரே தவிர, மேலதிகமான நிர்வாக முடிவுகளை அமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜியும், ப. சிதம்பரமும்தான் எடுத்தார்கள். மத்திய அமைச்சர்களின் குழுக்கள், உயரதிகார அமைச்சர்களின் குழுக்கள் இரண்டிலுமே அவர்கள்தான் இடம் பெற்றிருந்தனர். துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சரும், பிரதமரும் எடுக்க வேண்டிய முடிவுகளை, இந்தக் குழுக்களிடம் ஒப்படைத்து பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் உபாயம் கையாளப்பட்டது. சில வேளைகளில் கட்சி அமைச்சர்களை அடக்கி வைப்பதற்கும், மணிசங்கர் அய்யர், ஜெயராம் ரமேஷ், ஜெயந்தி நடராஜன் போன்று தன்னிச்சையாக செயல்பட விழைத்த காங்கிரஸ் அமைச்சர்களின் கைகளைக் கட்டிப் போடவும்கூட இந்தக் குழுக்கள் பயன்பட்டன.

தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு, அதிகாரத்தையும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கும்போது குழுக்களின் அவசியம் இல்லாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. விரைந்தும் துணிந்தும் முடிவெடுக்க முடியாமல் தடுத்த தடை அகற்றப்பட்டிருக்கிறது, அவ்வளவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT