தலையங்கம்

எதிர்பார்ப்பில் விவசாயிகள்...

அடுத்த மாதம் தான் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலையறிக்கை தொடர்பாக, நிதியமைச்சர் அருண் ஜேட்லி விவசாயம் தொடர்பான அமைப்புகளையும், எம்.எஸ். சுவாமிநாதன் தொடங்கி பல வல்லுனர்களையும் அழைத்துப் பேசியிருக்கிறார்.

ஆசிரியர்

அடுத்த மாதம் தான் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலையறிக்கை தொடர்பாக, நிதியமைச்சர் அருண் ஜேட்லி விவசாயம் தொடர்பான அமைப்புகளையும், எம்.எஸ். சுவாமிநாதன் தொடங்கி பல வல்லுனர்களையும் அழைத்துப் பேசியிருக்கிறார். நீர் ஆதாரம் குறைந்து வருவது, பல பாசனத் திட்டங்கள் தாமதப்படுவது, விவசாயிகளுக்காகவே ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுவது போன்ற விஷயங்கள் அச்சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அரசு எதிர்கொண்ட நிலையிலும் விவசாயத்திற்கும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் அரசு முன்னுரிமை கொடுக்கும் என்கிற நிதியமைச்சரின் உறுதிமொழி ஆறுதல் அளிக்கிறது. உற்பத்திச் செலவுடன் 50% லாபமும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில் தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்று பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது, விவசாயிகள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் இந்தப் பரிந்துரையை நரேந்திர மோடி அரசு எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதை விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டது மட்டுமல்ல, விவசாயம் சந்தித்த பின்னடைவுகளைப் பற்றிக் கவலையே படாமல் மெüனமும் காத்தது. கடனில் மூழ்கிப் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றிக்கூட அதிகம் கவலைப்படவில்லை.

இந்தியாவில் பெருவாரியான மக்கள் மிகக் குறைந்த வருவாயுடன் ஈடுபட்டிருக்கும் தொழில் விவசாயம்தான். அவர்களில் 65% பேர் கடன் சுமையால் வாடுகிறார்கள். கடந்த 17 ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்த உற்பத்தி மதிப்பில் விவசாயத்தின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து குறைந்து இப்போது வெறும் 13% ஆக இருக்கிறது. தேசத்திற்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளில் பெரும்பாலோர் தினமும் வயிற்றில் ஈரத்துணியுடன்தான் இரவு படுக்கையில் சாய்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.

2007 முதல் 2012 வரையிலான புள்ளிவிவரப்படி, மூன்று கோடியே இருபது லட்சம் பேர், விவசாயத்தைத் துறந்து அருகிலுள்ள நகர்ப்புறங்களில் கூலி வேலை தேடிக் குடியேறி இருக்கிறார்கள். 2011 மக்கள்தொகைக் கணக்குப்படி, தினந்தோறும் 2,500 விவசாயிகள் விவசாயத்தைத் துறந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரில் 42% பேர், வாய்ப்புக் கிடைத்தால் விளைநிலங்களை விற்றுவிட்டு வேறு வாழ்வாதாரம் தேட விழைபவர்கள்தான்.

கடந்த ஆட்சி, விவசாயம் தேவையில்லை உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற கொள்கையைக் கடைபிடித்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கூட, 70% விவசாயிகள் விவசாயத்திலிருந்து வேறு தொழிலுக்கு மாறவேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் இப்போதைய ஆளுநர் ரகுராம் ராஜனே ஒரு பேட்டியில், "விவசாயத்திலிருந்து வேறு தொழிலுக்கு விவசாயிகளை மாற்றுவதுதான் வளர்ச்சியின் நோக்கம்' என்று குறிப்பிட்டிருப்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.

உணவு உற்பத்திக்கு வழிகோலி, தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தைப் புறக்கணித்து விட்டு, நகர்ப்புறங்களில் காவல்காரர்களாகவும், ரிக்ஷா ஓட்டிகளாகவும், கட்டடப் பணியில் சித்தாள்களாகவும் மாறுவது என்ன வளர்ச்சி, என்ன முன்னேற்றம் என்பது நமக்குப் புரியவில்லை. பொருளாதார வல்லுநர்களுக்குத்தான் தெரியும்.

குறைந்து வரும் விவசாய நிலப்பரப்பு; விளைநிலங்களின் தரமும் மண்ணின் வளமும் குறைந்து வருவது; குறைந்து வரும் நிலத்தடி நீரின் மட்டம்; அறுவடைக்குப் பிறகான தானியப் பாதுகாப்பு, விநியோகம்; - இதுபோல பல பிரச்னைகளை விவசாயத்துறை எதிர்கொள்கிறது. மேலும், பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல உற்பத்திச் செலவுக்கு மேல் 50% லாபமும் விவசாயிக்குத் தரப்படும் என்றால், உணவு தானியங்களின் விலை கடுமையாக அதிகரிக்கக் கூடும். அதைக் கட்டுப்படுத்த மானியத்தை அதிகரிக்க வேண்டும். மானிய அதிகரிப்பு பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கும்.

விவசாயத்தைப் பொருத்தவரை, நரேந்திர மோடி அரசு புதிய அணுகுமுறையைக் கையாள வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் விமோசனம் கிடைக்கும். வானம் பார்த்த பூமி போல, விவசாயிகள் நரேந்திர மோடி அரசை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! கரூரில் 8.45 லட்சம் பேர்!

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்?

நானும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும்..! கண்கலங்கிய விஜய்

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

SCROLL FOR NEXT