பணவீக்கத்தையும், பொருளாதார வீழ்ச்சியையும் கட்டுக்குள் கொண்டுவந்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி இட்டுச்செல்ல சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும், அது சிலருக்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கக்கூடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. இனிக்க இனிக்கப் பேசுவதும், யாரும் முகம் சுளிக்காத வண்ணம் செயல்படாமல் இருப்பதும் அல்ல ஒரு தலைவனின் இலக்கணம். உண்மை நிலையை எடுத்துரைத்து, கடும் நடவடிக்கைகள் மூலம் துணிந்து பிரச்னைகளை எதிர்கொண்டு, ஒட்டுமொத்த தேசத்தையும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய கடமை பிரதமராக இருப்பவருக்கு உண்டு என்பதை உணர்ந்து பேசியிருக்கிறார் மோடி.
கடந்த மாதத்திற்கான பொருளாதாரப் புள்ளிவிவரம் சற்று ஆறுதல் தருவதாகத்தான் இருக்கிறது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திர மோடி அரசு அமையக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு வந்தது முதலே, சோர்ந்து கிடந்த பொருளாதாரம் எழுந்து உட்காரத் தொடங்கிவிட்டது. விலையுயர்வும் சற்று குறையத் தொடங்கியது.
உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகளின் விலைசற்று குறைந்திருக்கிறது. தொழில்துறை உற்பத்தியும் அதிகரித்து கடந்த 13 மாதங்களில் அதிகமான உற்பத்தியை மே மாதம் அடைந்திருக்கிறது. இது பொருளாதாரம் தனது தளர்ச்சியிலிருந்து மீள்வதற்கான அடையாளமே தவிர, இதுவே நிலைமை மாறுவதற்கான அறிகுறி என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஜூன், ஜூலை மாதங்களின் புள்ளிவிவரங்கள்தான் அதை உறுதிப்படுத்த முடியும். துணிவான, புத்திசாலித்தனமான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்ப முடியும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டு வந்த செயல்திட்டப் பக்கவாதத்திலிருந்து மீண்டாக வேண்டும். பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனத்திற்கான விண்ணப்பங்களும், திட்ட அறிக்கையுடன் கூடிய கோரிக்கைகளும் கடந்த இரண்டாண்டுகளாக அரசின் முடிவுக்குக் காத்திருக்கின்றன. பிரச்னை நிலம் கையகப்படுத்துவதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அனுமதியாக இருந்தாலும், அனுமதி அல்லது அனுமதி மறுப்பு உடனடியாகத் தெரிவிக்கப்படுவதன் மூலம் அன்னிய, உள்நாட்டு முதலீடுகள் பெருமளவு ஊக்குவிக்கப்படும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபோது, ஏற்றுமதி அதிகரித்தது என்பது உண்மை. ரூபாயின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படலாம். அதை அரசு எப்படி எதிர்கொண்டு, ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படாமல் பாதுகாக்கப் போகிறது என்பது மிகப்பெரிய சவால்.
அகற்றப்பட்ட ஆட்சியின் குறைபாடுகளையே மீண்டும் மீண்டும் பட்டியலிட்டுக் காட்டுவதில் அர்த்தம் இல்லைதான். அதே நேரத்தில், புதிய அரசின் முதுகில் ஏற்றப்பட்டிருக்கும் சுமை எத்தகையது என்பதைச் சுட்டிக் காட்டாமலும் இருக்க முடியாது.
பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றிற்கான மானியம் மொத்த மக்கள்தொகையில் 97% பேர்களுக்குப் பயனளிக்கிறது என்பது முந்தைய அரசின் வாதம். ஆனால், கிராமப்புறங்களில் நான்கில் மூன்று குடும்பங்கள் தங்கள் சமையல் தேவைக்கு சுள்ளியையும், விறகுகளையும், கரியையும்தான் பயன்படுத்துகின்றன. ஆறரை கோடி மக்கள் பெட்ரோலிய எரிவாயுவை எந்தவிதத்திலும் பயன்படுத்துவதில்லை. மானியங்கள் முறைப்படுத்தப்படாததால், 2004-05இல் வெறும் ரூ.45,000 கோடியாக இருந்த மானிய ஒதுக்கீடு 10 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்ந்து பயமுறுத்துகிறது.
பலர் எதிர்ப்பார்கள், சிலர் முகம் சுளிப்பார்கள், மக்கள் சிரமப்படுவார்கள் என்றெல்லாம் பார்க்காமல், இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சில கடுமையான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்தாக வேண்டும். அதற்கு அவர் தயாராகி விட்டிருப்பது ஆறுதலளிக்கிறது.
பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட, முழுநேர நிதியமைச்சர் தேவை. பிரதமர் மோடி உடனடியாகச் செய்ய வேண்டியது பாதுகாப்புக்கு என்று தனியாக ஓர் அமைச்சரை நியமிப்பது. இல்லையென்றால், இன்னொரு திறமைசாலியை அடையாளம் கண்டு அவரிடம் நிதித்துறையை ஒப்படைப்பது.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியவர், எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருப்பது எப்படி சரி? இதுகூடவா புரியவில்லை பிரதமர் நரேந்திர மோடிக்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.