தலையங்கம்

ராகுல் காந்தியின் "பபுள் புளோயர்'

மத்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி 1977க்குப் பிறகு சந்திக்க இருக்கும் மிகவும் சோதனையான பொதுத்தேர்தல் இது.

ஆசிரியர்

மத்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி 1977க்குப் பிறகு சந்திக்க இருக்கும் மிகவும் சோதனையான பொதுத்தேர்தல் இது. அப்படி இருக்கும்போது, அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும், தேர்தல் வெற்றிக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்க வேண்டாமா? வியப்பை ஏற்படுத்தும் விதத்திலோ, பரவலான பாராட்டைப் பெறும் வகையிலோ 2014 மக்களவைத் தேர்

தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமையவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

சமச்சீர் வளர்ச்சி, கீழ்த்தட்டு மக்களின் முன்னேற்றம், பல்வேறு வரிகளிலிருந்து விலக்கு, 8 விழுக்காடு வளர்ச்சி என்று ஒரு தேர்தல் அறிக்கையில் இருக்க வேண்டிய எல்லா அம்சங்களும் இருந்தாலும்கூட, தனித்துவமான புதிய சிந்தனை எதுவுமே இதில் இல்லாமல் இருப்பது பளிச்செனத் தெரிகிறது.

கடந்த 2009 தேர்தலில் பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும் என்று மட்டுமே சொன்ன காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, இந்த முறை மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தரப்பட்டால், பதவிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் 8 விழுக்காடு வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக திட்டவட்டமாக உறுதியளித்திருக்கிறது. உறுதி அளித்துவிட்டால் மட்டும் போதுமா? அதை எப்படி அடைய உத்தேசித்திருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டாமா?

அதுபோகட்டும். அன்னிய நேரடி முதலீடு பற்றி போகிற போக்கில் குறிப்பு இருக்கிறதே தவிர, அது பற்றிய கொள்கை முடிவோ, எப்படி, எதற்கெல்லாம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க காங்கிரஸ் உத்தேசிக்கிறது என்பதையெல்லாம் குறிப்பிடவில்லை.

19 அம்சங்களைப் பட்டியலிட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளைப் பட்டியலிட்டு, அவற்றை எதிர்கொள்ள 2022க்குள் தொழில்

துறையை வளர்ச்சி அடைய வைத்து 25 விழுக்காடு மொத்த உள்நாட்டு வளர்ச்சி மதிப்பை எட்டப் போவதாகத் தெரிவிக்கிறது. சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு மொத்த ஜி.டி.பி. வளர்ச்சியில் 3 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும், பட்டியலின மக்களுக்கு தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வலியுறுத்தப்படும் என்றும் கூறுகிறது.

ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கு குந்தகம் எதுவும் ஏற்படாமல், ஜாதி, மத பேதமின்றி பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தர முயற்சிக்கப்படும் என்றும், "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தின் மூலம் பயனாளிகள் நஷ்டப்படாமல் பயனடையவும், ஊழலை வேரறுக்கவும் காங்கிரஸ் முனைப்புடன் முயற்சிக்கும் என்றும் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்ட பல வாக்குறுதிகள் 2014 தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருப்பதில் வியப்படைய ஏதுமில்லை. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா வழக்கம்போல இந்தத் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருப்பது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

திட்டம் போடுவதாலும், சட்டம் போடுவதாலும் மட்டுமே கடமை முடிந்துவிடுவதில்லை. வேலை பார்க்கும் உரிமை, கல்விக்கான உரிமை, உணவுக்கான உரிமை என்று ஏதாவது உரிமை தருவதாக வாக்களிக்காவிட்டால் காங்கிரஸ் தலைமைக்கு தூக்கம் வராது போலிருக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில், ஆரோக்கியத்திற்கும், ஓய்வூதியத்திற்கும், சுயதொழில் நடத்தவும், குடியிருப்புகளுக்கும், உரிமை வழங்கும் சட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் உறுதியளித்திருக்கிறது. இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரையும் மத்தியதர பிரிவினராக மாற்றிவிட முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதில் தொடங்கி, என்னவெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வழங்க முடியுமோ அவையெல்லாம் கூறப்பட்டுள்ளன. ஆனால், இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி ஆதாரம் பெறப்படும்? பொருளாதார வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ திட்டங்கள் என்ன? எப்படி செலவினங்களுக்கான வருவாய் பெறப்படும்? எப்படி செலவுக்கும் வருவாய்க்குமான இடைவெளி நிரப்பப்படும் என்பது பற்றியெல்லாம் தெளிவான கண்ணோட்டமோ, திட்டமோ தரப்படவில்லை.

இரண்டு தடவை ஆட்சியில் இருந்து விட்டதாலோ அல்லது பிரணாப் முகர்ஜி போன்ற தேர்ந்த அனுபவசாலிகள் தயாரிக்காததாலோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெளிவான இலக்கு இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் சோப்பு தண்ணீரை வைத்துக் கொண்டு நுரை நுரையாக ஊதி விளையாடுவார்கள். அதற்கு ஆங்கிலத்தில் "பபுள் புளோயர்' என்று பெயர். 2014 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை பார்க்கும்போது அதுதான் நினைவுக்கு வருகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT