தலையங்கம்

போலிகளின் மதச்சார்பின்மை!

கல்லூரி மாணவர்களின் தேர்வு வினாத் தாள் தயாரித்த, கேரள மாநிலம், தொடுபுழா நியுமேன் கல்லூரியின் மலையாளப் பேராசிரியர் டி.ஜே. ஜோசப் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஆசிரியர்

கல்லூரி மாணவர்களின் தேர்வு வினாத் தாள் தயாரித்த, கேரள மாநிலம், தொடுபுழா நியுமேன் கல்லூரியின் மலையாளப் பேராசிரியர் டி.ஜே. ஜோசப் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தேர்வு வினாத்தாளில் பொருத்தமான நிறுத்தக் குறிகளை (பங்க்சுவேஷன்) இடுக என்று ஒரு பத்தியை அவர் கொடுத்திருந்தார். அதற்கு அவர் திரைப்பட இயக்குநர் பி.டி.குஞ்சுமுகம்மது எழுதி, ஏற்கெனவே புத்தக வடிவம் பெற்றிருந்த, "திரைக்கதை எழுதுதல்' குறித்த ஆய்வுக்கட்டுரையிலிருந்து, நபிகள் நாயகம் இறையுடன் பேசும் பகுதியைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

முற்றுப்புள்ளி, காற்புள்ளி, அரைக்கால்புள்ளி இல்லாத சொற்றொடர் பொருள் மயக்கம் தரும். சில நேரங்களில் மாறுபட்ட பொருளும்கூட தரும். உதாரணமாக, "...நீதிபதியின் உத்தரவின்பேரில், குற்றம்செய்த மூவரும், சான்றுகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்' என்ற சொற்றொடரில் காற்புள்ளிகள் இரண்டும் இல்லாமல், "...நீதிபதியின் உத்தரவின்பேரில் குற்றம்செய்த மூவரும் சான்றுகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்' என்று படித்தால் மாறுபட்ட பொருள் அமைந்துவிடுவது போல...

இந்த கேள்விக்கான பகுதியை, கிறிஸ்தவரான பேராசிரியர் ஜோசப் திட்டமிட்டே தெரிவு செய்திருந்தார் என்று கூறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சிலர் அவரது உள்ளங்கையை வெட்டினர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது. கொச்சி மருத்துவமனையில், நுண்அறுவைச் சிகிச்சை முறையில் ஜோசப்பின் உள்ளங்கை மீண்டும் இணைத்துப் பொருத்தப்பட்டது. உள்ளங்கை இணைக்கப்பட்டாலும் வாழ்க்கை துண்டானது. பணிநீக்கம் செய்யப்பட்டார். தங்கள் கல்லூரிப் பேராசிரியர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவராக இருப்பதால், ஊடகங்கள் மூலம் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என்று நிர்வாகம் காரணம் சொன்னது.

இஸ்லாமிய மதஉணர்வு சம்பந்தப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் குறித்து யாரும் பேசத் துணியவில்லை. பேராசிரியரை பணிநீக்கம் செய்ததையாவது அறிவு ஜீவிகளும் ஆசிரிய உலகமும் கண்டித்ததா என்றால், அதுவும் இல்லை. கிறிஸ்தவ அமைப்பினால் கல்லூரி நிர்வகிக்கப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவரும் கிறிஸ்தவர். இது அவர்களது உள்விவகாரம் என்பதாக ஒதுங்கிக் கொண்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர் தன்னை மீண்டும் பணியமர்த்தக் கோரி பல்கலைக்கழக மேல்முறையீட்டுக் குழுவிடம் போராடினார். வறுமையும் அவமானமும் சகிக்க முடியாமல் அவரது மனைவி சலோமி அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.

சிறுபான்மையினரின் மதஉணர்வில் தலையிடுவதாக ஆகிப்போகுமோ என்று மற்றவர்களும், அறிவுஜீவிகளும் அச்சப்பட்டு ஒதுங்கினர். ஆனால், இது தவறு; இவ்வாறு நடந்துகொள்ளாதீர்கள் என்று சிறுபான்மையின அமைப்புகளே கண்டிப்பதும், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வருவதும் இயலாத காரியமா? அவர்கள் கண்டித்தால்தானே சரியான சமிக்ஞையாக அது அமையும்?÷கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கை உள்விவகாரமாக இருந்தாலும், இது நியாயமற்றது என்று கிறிஸ்துவ அமைப்புகளே கண்டித்திருந்தால் அவர் வேலை இழந்திருக்கமாட்டார்!

நபிகள் நாயகம் பற்றித் தவறாகப் பொருள்வரும்படி விடை எழுதிவிடுவார்கள்; தவறான கருத்தை மாணவர்கள் உள்வாங்கிக்கொள்வார்கள் என்பதால் இந்த வினாவை கண்டிப்பது சரி. அதற்காக உள்ளங்கையை வெட்டியவர்களை இஸ்லாமிய சமுதாயம் கண்டித்திருக்க வேண்டாமா? இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் இந்த வன்முறையை மறுதலித்துக் குரலெழுப்பியிருக்க வேண்டாமா? அத்தகைய சரியான சமிக்ஞை சிறுபான்மையினருக்கான ஆதரவுக் குரலை மேலும் வலுப்படுத்துமே!

தலித் விவகாரங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. தலித் பிரிவை சேர்ந்த ஒருவர் தவறு செய்யும்போது, அதைப் பேசினால் தங்களை தலித் விரோதி என்று அடையாளப்படுத்துவார்களோ என்று மற்றவர்கள் விலகி நிற்கிறார்கள். தலித் அமைப்புகளே அந்த நபரின் தவறைச் சுட்டிக்காட்டி கண்டித்தால், எத்தகைய ஆரோக்கியமான சூழலை, மதிப்புமிகு சூழலை உருவாக்க முடியும்?

கருணை அடிப்படையில் ஜோசப்புக்கு மீண்டும் பணியாணை அளித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். அதாவது, அவர் கடந்த வெள்ளிக்கிழமை பணியில் சேர்ந்தார். இன்று திங்கள்கிழமை அவர் பணிஓய்வு பெறுகிறார். ஆனால் அவரது மனைவி சலோமி மீண்டும் வருவாரா?

சிறுபான்மையினர், தலித்துகள், அநீதியால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமாக போராடும் அதே வேளையில், அவர்கள் தவறு செய்யும்போது அதை சுட்டிக்காட்டி, கண்டிக்காதவர்கள் சமூக நல்லிணக்கத்தின் மற்றொரு எதிரிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT