தலையங்கம்

"கண்காணி'க்கும் கட்டுப்பாடு!

ராமநாதபுரம் அருகே, எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர், காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இறந்துபோனார்.

ஆசிரியர்

ராமநாதபுரம் அருகே, எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர், காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இறந்துபோனார். சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் 14 வயது சிறுவனை ஓர் ஆய்வாளர் சுட்டதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். இரு சம்பவங்களிலும் பலராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்பதுதான்.

இந்தியாவில் பல இடங்களில் காவல் நிலைய மரணங்கள் தொடர்பான புகார்கள் அதிகமாக இருப்பதால் அனைத்து காவல் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் நிறுவப்பட்டு வருகின்றன. தமிழகக் காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்பதை வலியுறுத்திய உச்சநீதிமன்றம், இந்தப் படப்பதிவை குற்றவாளி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன என்று அண்மையில் கவலை தெரிவித்துள்ளது.

அதாவது, காவல் நிலையத்துக்குள் கால் வைக்கும்போதே, தன்னை வெளியிடத்தில் அடித்து உதைத்து இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற தோற்றத்தை வலியால் துடித்து, நடக்க முடியாமல் மயங்கி விழுந்து நடிப்பதன் மூலம் இந்தக் கண்காணிப்பு கேமராவை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இவை அனைத்தும் காவல் துறைக்கு எதிராக மாறும். குற்றவாளி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதை நிரூபிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு காவல் துறையைச் சேர்ந்துவிடும்.

நீதிபதிகளின் கவலை நியாயமானது. கண்காணிப்பு கேமரா காட்சியைத்தான் பதிவு செய்யும். அது நடிப்பா, நிஜமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய மற்றொரு பொறுப்பு மீண்டும் நீதிமன்றத்திடமே வந்து சேர்கிறது.

காவல் துறையினரும் இதைத் தவிர்ப்பதற்காக, தாங்கள் பிடிக்கும் நபர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு வராமல், வேறு தனி இடத்துக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்யவும், இறக்க நேர்ந்தால் வேறு பகுதியில் உடலை வீசிவிட்டு வரும் சம்பவங்களுக்கும் இதே கண்காணிப்பு கேமராக்கள் காரணமாக அமைந்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இப்போது எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் காணப்படுகின்றன. வங்கிகளில், ஆட்சியர் அலுவலகங்களில், பேருந்து, ரயில் நிலையங்களில், மருத்துவமனைகளில் என எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இவை சிறு திருட்டு அல்லது குண்டு வைப்பது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க உதவுகின்றன. அதேவேளையில், தொடர்பில்லாத ஒருவர் மற்றொரு தனிநபரின் அந்தரங்கத்தை வேடிக்கை பார்க்கவும் இவை இடம் அளிக்கின்றன.

தமிழகத்தின் மையமான நகரத்தின் ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையைச் சேர்ந்த ஒருவர், இந்த வசதி மூலம் பெண் பயணிகளை வேடிக்கைப் பார்ப்பதாகப் புகார் எழுந்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடைகளில், வணிக வளாகங்களில் வளைய வரும் பெண்களை வேடிக்கை பார்க்கவும் இதே கண்காணிப்புக் கேமரா உதவுகிறது.

பொது இடத்தில் அனுமதி இல்லாமல் ஒருவரை செல்பேசியில் படம் பிடிப்பதே குற்றம் என்கிற நிலையில், கண்காணிப்பு கேமராக்களை தனியார் கடை, அலுவலகங்களில் பயன்படுத்தும்போது, சில கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன. இந்தப் பதிவுகள் என்னவாகின்றன, இதற்கான பொறுப்பு அலுவலர் யார்? இங்கு பதிவாகும் விடியோ காட்சிகள் முகநூலில் மின்னேற்றம் பெற்றாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அதற்கு யாரெல்லாம் பொறுப்பு என்பன போன்ற கட்டுப்பாடுகள் அவசியம்.

சமூக வலைத்தளங்களில் பெண்களின் முகப்படங்கள் தவறான சித்திரிப்புகளுக்குப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைப்போல, தனியார் கடை, வணிக வளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரிக்கும்போது, ஒருவேளை அரசு இது குறித்து யோசிக்கும்; "கண்காணி'-க்கும் கட்டுப்பாடு தேவை என்று உணரும்.

கண்காணிப்பு கேமராக்கள் ஒருபுறம் இருக்க, அதிகரித்துவிட்ட மக்கள்தொகையும், பொருளாதார இடைவெளியும் பெரிய அளவில் சிறு குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகி இருக்கின்றன. காவல் துறை சீர்திருத்தமும், அதிக எண்ணிக்கையிலான காவல் துறையினரும், மக்கள் மத்தியில் சட்டப்படியான தங்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும்கூட அத்தியாவசியமானவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT