தலையங்கம்

தமிழகத்தைப் புறக்கணிப்பதா?

குறைந்த அளவிலான அமைச்சர்கள் என்பது பெருமை தட்டிக்கொள்ள வேண்டுமானால் உதவுமே தவிர, திறமையான, விரைவான நிர்வாகத்துக்கு பயன்படாது என்பதை சற்று காலம் தாழ்த்தித்தான் பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

ஆசிரியர்

குறைந்த அளவிலான அமைச்சர்கள் என்பது பெருமை தட்டிக்கொள்ள வேண்டுமானால் உதவுமே தவிர, திறமையான, விரைவான நிர்வாகத்துக்கு பயன்படாது என்பதை சற்று காலம் தாழ்த்தித்தான் பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. மக்கள்தொகை பெருகிவிட்டது என்பது மட்டுமல்ல, பிரச்னைகளும் அதிகரித்துவிட்டன. பொருளாதாரம் வளர்ந்து விட்டிருப்பதுபோல, மக்களின் தேவைகளும் பரந்து விரிந்து விட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் குறைந்த அளவு அமைச்சர்களை வைத்துக்கொண்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவது என்பது இயலாத விஷயம். அந்த அளவில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருப்பதும், திறமைசாலிகளைத் தேடிப்பிடித்துப் பொறுப்புகளை ஒப்படைத்திருப்பதும் வரவேற்புக்குரியது.

நரேந்திர மோடி 21 புதிய அமைச்சர்களைச் சேர்த்துக் கொண்டிருப்பதன் மூலம், தனது அமைச்சரவையின் எண்ணிக்கையை 66-ஆக உயர்த்தி இருக்கிறார். இது முந்தைய மன்மோகன் சிங் அமைச்சரவையின் பலத்தைவிட 12 பேர் குறைவு அவ்வளவே. விரிவாக்கப்பட்ட மோடி அமைச்சரவையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரும், பிகாரைச் சேர்ந்த மூன்று பேரும் சேர்க்கப்பட்டிருப்பது, அந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களைக் குறிவைத்து நகர்த்தப்பட்டிருக்கும் காய்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேரும், கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு பேரும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருக்கின்றனர். முதல்முறையாக கோவாவிலிருந்து ஒருவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துடன் இடம் பெறுகிறார் என்பதும், புதிய மாநிலமான தெலங்கானாவின் சார்பில் பண்டாரு தத்தாத்ரேயா தனிப் பொறுப்புடன் இணை அமைச்சராக்கப்பட்டிருப்பதும் அமைச்சரவை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு உதவிய பல ஜாதிப் பிரிவினருக்கு மத்திய அமைச்சரவையில் போதிய இடமளிக்கப்படவில்லை என்கிற குறை இருந்துவந்தது. உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள், பிகாரில் ராஜபுத்திரர்கள், பூமிகார்கள், ஹரியாணா, ராஜஸ்தானில் ஜாட்கள் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளித்து அந்த வருத்தத்தைப் போக்கி இருக்கிறார் பிரதமர்.

நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்த சிவசேனையின் சுரேஷ் பிரபு பதவி ஏற்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் பா.ஜ.க-வில் சேர்ந்து அமைச்சராகி இருப்பது; கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த வீரேந்தர் சிங்கை முக்கியமான ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை கேபினட் அமைச்சராக்கி இருப்பது; லாலு யாதவின் வலதுகரமாக இருந்து பிறகு ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த இந்தர்ஜித் ராவை அமைச்சராக்கி இருப்பது ஆகியவை நரேந்திர மோடியின் ராஜதந்திரமாக இருக்கலாம். ஆனால், தூய்மையான அரசியல் கலாசாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

கோவாவின் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராகி இருப்பது; நிர்வாகத் திறமைக்குப் பெயர்போன சுரேஷ் பிரபுவிடம் ரயில்வே துறை ஒப்படைக்கப்பட்டிருப்பது; ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்திருப்பவரும், முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகனுமான ஜெயந்த் சின்ஹாவை நிதித் துறை இணை அமைச்சராக்கி இருப்பது - இவை வரவேற்புக்குரிய பிரதமரின் முடிவுகள். அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், நிதின் கட்கரி போன்ற மூத்த அமைச்சர்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரிய அம்சங்கள்.

66 உறுப்பினர்களுடன் கூடிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் இடம் பெற்றிருப்பது, மாநிலங்களின் நலன் பேணப்படுவதை உறுதிப்படுத்தும். படித்தவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று அதிகமாக இடம் பெற்றிருப்பது, நிர்வாகத்தில் புதிய அணுகுமுறைக்கு வழிகோலும்.

இதெல்லாம் சரி, தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறதே, ஏன்? குறுகியகால சந்திரசேகர் அமைச்சரவை தவிர, இதுவரை இருந்த அத்தனை மத்திய அமைச்சரவைகளிலும் மக்களவைக்கு 39 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தமிழகத்திற்குக் கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம்பெற, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கேபினட் அமைச்சர்கூட இல்லாமல் போனது ஏன்? இந்தக் கேள்வி தொடரும்வரை, தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சியும் கேள்விக் குறியாகத்தான் தொடரும் என்பதை யாராவது பிரதமர் மோடியிடம் தெரிவித்தால் நல்லது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT