தலையங்கம்

பயன்படுத்திக் கொள்வோம்!

உணவுப் பாதுகாப்பு கருதி, வணிக இயைபு ஒப்பந்தத்தில் (டி.எப்.ஏ.) கையெழுத்திட மறுத்த இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தோள் கொடுத்திருப்பதும், இந்தியாவின் "பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை' நிபந்தனையில் விலக்கு அளிக்கலாம் என்கிற உலக வர்த்தக நிறுவன ஷரத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது என்ற முடிவும், இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

ஆசிரியர்

உணவுப் பாதுகாப்பு கருதி, வணிக இயைபு ஒப்பந்தத்தில் (டி.எப்.ஏ.) கையெழுத்திட மறுத்த இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தோள் கொடுத்திருப்பதும், இந்தியாவின் "பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை' நிபந்தனையில் விலக்கு அளிக்கலாம் என்கிற உலக வர்த்தக நிறுவன ஷரத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது என்ற முடிவும், இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

வேளாண்மைக்கு வழங்கப்படும் மானியம், மொத்த உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காடுக்கு மிகக் கூடாது என்கிற ஒரே நிபந்தனைதான் இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தடையாக இருந்தது. இப்போது பிரச்னை நிரந்தரமாகத் தீர்வு காணப்படும் வரை விலக்கு அளிப்பதற்கு அமெரிக்காவே ஆதரவு தெரிவிக்க முன்வந்திருப்பதால், உலக வர்த்தக நிறுவனமும் (டபிள்யு.டி.ஓ.) அதை அங்கீகரிக்கும்.

இந்திய அரசு, தற்போது வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்யும் மானியம் ரூ.1.15 லட்சம் கோடி. இது, மொத்த வேளாண் உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காடாக இல்லை. இந்த மானியத்திலும் 80 விழுக்காடு உர மானியமாக உர ஆலைகளுக்கும், இலவச மின்சாரத்துக்கு ஈட்டுத்தொகையாகவும் போய்விடுகின்றன. விவசாயிக்கு நேரடி மானியமாகக் கிடைப்பது குறைவு. இந்த மானியத்தையும் வேறுவிதத்தில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கெனவே அரசு தொடங்கிவிட்டது.

அதாவது, ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.) எவ்வளவு கொள்முதல் செய்யுமோ அதற்கு மட்டுமே மத்திய அரசு ஆதரவு விலை தரும் என்ற கட்டுப்பாடு வந்துவிட்டது. இதுபோன்று பல வகைகளிலும் கடிவாளம் போடப்படும். நிச்சயமாக, இந்த 10 விழுக்காடு மானிய அளவை இந்தியா தாண்டப் போவதில்லை.

இப்போது வணிக இயைபு ஒப்பந்தத்தில் (டி.எப்.ஏ.) இந்தியா கையெழுத்திட்டாக வேண்டிய பொறுப்பை, சில உறுதிமொழிகள் கூறி, சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 60 கோடி மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரிசி, கோதுமையை பொது விநியோகத் திட்டத்தில் கொண்டு சேர்க்க ரூ.1.25 லட்சம் கோடி மானியத்தை இந்தியா ஒதுக்கீடு செய்கிறது. வணிக இயைபு ஒப்பந்தம் வலியுறுத்தும் 10 விழுக்காடு மானிய நிபந்தனை, உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொது விநியோகத்தில் அளிக்கப்படவுள்ள குறைந்த விலை அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை தடை செய்வதாக ஆகிவிடக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தவே இதுவரையிலான

இந்தியாவின் எதிர்ப்புக்குக் காரணம். இது அரசியல் என்பதும் வாக்கு வங்கிக்காக இதை இந்தியா செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதும்கூட உலக வர்த்தக நிறுவனத்துக்கு நன்றாகத் தெரியும்.

இப்போது 10 விழுக்காடு நிபந்தனைக்கு விலக்கு அளிக்கும்போது, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானியத்தில் கொள்முதல் செய்யப்படும் உணவுப்பொருள் பொதுச் சந்தைக்கு வராது என இந்தியா உறுதி கூற வேண்டியிருக்கும். ஏழைகள் எத்தனை பேர், அவர்களுக்கு எவ்வளவு உணவுப்பொருள் தேவை, கூடுதலாக எந்த அளவு இருப்பு வைக்கலாம் போன்றவற்றை இந்தியா தெரிவித்த பிறகுதான் வணிக இயைபு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதிப்பார்கள். அதில் தவறு ஒன்றுமில்லை. இந்தியாவைப் பொருத்தவரை பொது விநியோகத்தில் அரிசியை இலவசமாகவே கொடுத்தாலும், சந்தையில் பொன்னி அரிசி கிலோ ரூ.50 கொடுத்து வாங்குகிறவர்

களின் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கருத்தாக இருப்பார்கள். அதேபோலத்தான் கோதுமையிலும்.

இந்தியாவின் வேளாண்மைக் கொள்கை, மானியங்கள் மூலம் விவசாயிகளைப் பாதுகாப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் நிலைமை அதுவல்ல. அப்படி இருந்தால் விவசாயிகள் தற்கொலை தொடர்வதும், விவசாயத்தைக் கைவிடுவதும் இருக்காது. மானியங்கள் உர நிறுவனங்களைக் கொழிக்கச் செய்கின்றன அவ்

வளவே. அதேபோல, இத்தனை ஆண்டுகளாகியும் பொது விநியோக அமைப்பு, முறையாகச் செயல்படாமல் இருக்கிறது. போலி குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பொது விநியோகத்திற்கென ஒதுக்கப்படும் உணவுப் பொருள்கள் சந்தையின் விற்பனைப் பொருள்களாவது தொடர்கிறது.

முறைகேடில்லாத பொது விநியோகத்திற்கு வழிகோல வேண்டும். பாசன வசதி, சந்தைக் கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட விதைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு உறுதி செய்து, விவசாயம் செழிக்க வழிகோல வேண்டும். இவற்றை உறுதிப்படுத்தினால், வணிக இயைபு ஒப்பந்தத்தின் நிபந்தனையான 10 விழுக்காடே சாத்தியம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT