தலையங்கம்

ஒப்புக்குச் சப்பாணியாக ஒபாமா!

சமீபத்தில் பிரிஸ்பேனில் நடந்து முடிந்திருக்கும் ஜி-20 சர்வதேச உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார்

ஆசிரியர்

சமீபத்தில் பிரிஸ்பேனில் நடந்து முடிந்திருக்கும் ஜி-20 சர்வதேச உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார் என்றாலும்கூட, அவருக்குக் கிடைத்த முக்கியத்துவம் சற்று குறைவுதான். அதற்குக் காரணமில்லாமல் இல்லை.

அவரவர் நாட்டில் அதன் அதிபருக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும், ஆதரவையும் பொருத்துத்தான் சர்வதேச அரசியலிலும் ஒரு தலைவர் மதிக்கப்படுவார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் செல்வாக்குச் சரிவு, சர்வதேச அளவில் பிரதிபலித்ததில் வியப்படைய ஒன்றுமில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் ஜனநாயகக் கட்சிக்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன. அமெரிக்காவின் பழம்பெரும் கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பரவலாக வெற்றி பெற்றிருப்பதுடன், "செனட்' எனப்படும் மேலவையிலும், காங்கிரஸ் எனப்படும் மக்களவையிலும் பெரும்பான்மை பலம் பெற்று விட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே 2010-இல் நடந்த தேர்தலில் மக்களவையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மை பெற்றுவிட்டிருந்தனர். இப்போது, மேலவைக்கு நடந்த தேர்தல்களிலும் ஏழு இடங்களில் ஜனநாயகக் கட்சி தோல்வியைத் தழுவி 48 - 52 என்கிற விகிதத்தில் குடியரசுக் கட்சிக்குத் தெளிவான பெரும்பான்மையை தாரை வார்த்து விட்டிருக்கிறது. இனி அதிபராகத் தொடரும் அடுத்த இரண்டு ஆண்டுகளும், குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கத்திலுள்ள மக்களவையுடனும், அவர்கள் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் மேலவையுடனும் சமரசம் செய்து கொண்டுதான் அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் தொடர வேண்டிய கட்டாயம்.

இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. அமெரிக்க அரசமைப்பின்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும்.

பொதுவாகவே, இரண்டாவது முறையும் அதிபராகிவிட்ட ஒருவரின் பதவிக் காலம் முடிவுக்கு வரும்போதெல்லாம் அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். 1986-இல் ரொனால்ட் ரீகனும், 2006-இல் ஜார்ஜ் புஷ்ஷும் சந்தித்த அதே சிக்கலைத்தான் இப்போது பராக் ஒபாமாவும் சந்திக்கிறார்.

1934 முதல், இரண்டாவது தடவையாக மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் கட்சிக்கு ஆதரவாக அமெரிக்க சரித்திரத்தில் மக்கள் இடைத்தேர்தல்களில் வாக்களித்தது 1998-இல் பில் கிளின்டன் அதிபராக இருந்த கடைசி ஆண்டுகளில் மட்டும்தான். அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது.

மக்களவையிலும், மேலவையிலும் ஜனநாயகக் கட்சி எதிர்கொண்ட பின்னடைவும், குடியரசுக் கட்சியின் வெற்றியும், மாநிலங்களில் ஆளுநர் தேர்தலிலும் எதிரொலித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது போலவே, அங்கே மாநிலங்களின் ஆளுநர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 36 மாநிலங்களில் நடந்த ஆளுநர்களுக்கான தேர்தலிலும் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த தேர்தலில், குடியரசுக் கட்சியின் பிரசாரம் முழுக்க முழுக்க அதிபர் பராக் ஒபாமாவின் திட்டங்களையும், செயல்பாடு

களையும் முன்னிலைப்படுத்தியே நடத்தப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அதிபர் ஒபாமாவை முன்னிலைப்படுத்தாததற்குக் காரணம் அவரது சரிந்து வரும் செல்வாக்குதான் என்பது தெளிவு. பொருளாதாரம் வலுப்பட்டிருப்பதையும், ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் அவர்கள் முறையாகப் பிரசாரம் செய்யாமல் விட்டதுகூட ஜனநாயகக் கட்சியின் பின்னடைவுக்குக் காரணங்கள் எனக் கருதலாம்.

எப்போதுமே ஜனநாயகக் கட்சியைவிட குடியரசுக் கட்சிதான் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்து வந்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு அதிக நிதியுதவி அளிப்பது, சீனாவுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் முடிவுகளைக் குடியரசுக் கட்சி கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. அதனால் இந்தியாவைப் பொருத்தவரை, அதிபர் ஒபாமாவின் கரங்கள் பலவீனப்பட்டிருப்பதால் நமக்கு பாதிப்பு எதுவும் இருக்க வழியில்லை.

அடுத்த இரண்டு ஆண்டுகள், அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்படும் நீதிபதிகள், வெளிநாட்டுத் தூதர்கள், அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்களை குடியரசுக் கட்சி தனது மக்களவை பலத்தால் தடுத்து நிறுத்தக் கூடும். அவையால் நிறைவேற்றப்படும் சட்டங்களை அதிபர் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் பிரச்னை, ஏற்றுக் கொண்டாலும் பிரச்னை. மொத்தத்தில் அதிபர் ஒபாமா இனிமேல் ஒப்புக்குச் சப்பாணியாகத்தான் வெள்ளை மாளிகையில் தொடர முடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT