தலையங்கம்

பிரதமரின் ஃபிஜி விஜயம்!

மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜித் தீவுகள் ஆகிய மூன்று நாடுகளுக்குமான தனது ஒன்பது நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் தில்லிக்குத் திரும்பி இருக்கிறார்.

ஆசிரியர்

மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜித் தீவுகள் ஆகிய மூன்று நாடுகளுக்குமான தனது ஒன்பது நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் தில்லிக்குத் திரும்பி இருக்கிறார். சர்வதேச அளவில் ஊடகங்களால் தனக்கு ஏற்படுத்தப்பட்ட கெட்ட பெயரையும், களங்கத்தையும் அகற்றுவது என்கிற முனைப்புடன் அவர் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார் போலிருக்கிறது.

மியான்மரிலும், ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளின் தலைவர்களுடன் அவர் கூட்டங்களில் கலந்துகொள்ளவும், கலந்துரை

யாடவும் கிடைத்த வாய்ப்புகள், பொருளாதார ரீதியாக இந்தியாவுக்குப் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக, இந்தியாவுக்குச் சிறப்பு விலக்கு அளித்து வணிக இயைபு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வழிகோலும் முடிவுக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்திருப்பது, பிரதமர் மோடியின் விஜயத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

பிரதமரின் இந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு அவரது ஃபிஜித் தீவு விஜயம்தான். 1981-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஃபிஜி விஜயத்திற்குப் பிறகு 33 ஆண்டு இடைவெளியில் வேறு எந்த இந்தியப் பிரதமரும் சட்டை செய்யாத ஃபிஜித் தீவுகளுக்கு பிரதமர் மோடி சென்று வந்திருப்பது, மிகச்சிறந்த ராஜதந்திர முடிவு. ஃபிஜித் தீவுகளை நாம் ஏதோ ஒரு சிறிய தீவு நாடு என்று பார்க்க முடியாது. பசிபிக் மகாசமுத்திரத்தில் இருக்கும் சுமார் 20,000 முதல் 30,000 வரையிலான சிறிய தீவுகளில் இதுவும் ஒன்று என்று ஒதுக்கி விடவும் முடியாது.

ஃபிஜித் தீவுகளில் உள்ள கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்களை பிரிட்டிஷ் காலனிய அரசு 19-ஆம் நூற்றாண்டில் கொண்டு சென்றது. எப்படி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாக அடியெடுத்துச் செல்லப்பட்டனரோ, ஏறத்தாழ அதே நிலைதான் ஃபிஜித் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கும்.

ஃபிஜித் தீவில் இந்தியக் கொத்தடிமைகள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் அடைந்த துன்பங்கள் எழுத்தில் அடங்காது.

""நாட்டை நினைப்பாரோ? - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென் றேஅன்னை

வீட்டை நினைப்பாரோ? - அவர்

விம்மிவிம் மிவிம்மி விம்மிய ழுங்குரல்

கேட்டிருப் பாய்காற்றே! - துன்பக்

கேணியி லேஎங்கள் பெண்க ளழுதசொல்

மீட்டும் உரையாயோ? - அவர்

விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்''

என்று மகாகவி பாரதியார் "கரும்புத் தோட்டத்திலே...' பாடலில் ஃபிஜித் தீவில் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்களின் துயரத்தைப் படம்பிடித்துக் காட்டியிருப்பார்.

ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் இப்போதும் ஃபிஜித் தீவில் வாழ்கிறார்கள். அந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 37% இந்திய வம்சாவளியினர்தான். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே, இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து தாக்கப்படுவதும், ஃபிஜியின் பூர்வ குடியினரால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதும் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்தியர்கள் மெல்ல மெல்ல அந்த நாட்டை விட்டே வெளியேறத் தொடங்கி இருக்கிறார்கள்.

1999-இல் இந்திய வம்சாவளியினரான மகேந்திர சௌத்ரி என்பவர் ஃபிஜி நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதைச் சகித்துக்கொள்ள முடியாமல் ஒரே வருடத்தில் ராணுவப் புரட்சி மூலம் அவர் துரத்தி அடிக்கப்பட்டார். இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் ஃபிஜி விஜயம் அமைந்தது.

மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா வாழ்த்துத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் விஜயம் பற்றி எழுதும்போது, இந்தியாவை "ஆசியாவின் வல்லரசு' என்று அங்கேயுள்ள பத்திரிகைகள் வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஃபிஜித் தீவுக்கு ரூ.495 கோடி கடனுதவி, ராணுவப் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற பல அறிவிப்புகளுடன் நின்றுவிடாமல், 14 பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களையும், அவர் சந்தித்துப் பேசியிருப்பது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி எனக் கருதலாம்.

ஃபிஜியில் நடக்கும் இந்திய இன அழிப்புக்கு பிரதமர் மோடியின் விஜயம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஃபிஜித் தீவு இந்திய வம்சாவளியினருக்கு இந்த விஜயம் ஒரு திருப்புமுனையாக அமையக் கூடும்.

இந்தியன் என்பதற்கு அடையாளம் அவர்களது ரத்தமாக இருக்க வேண்டுமே தவிர, கடவுச் சீட்டாக (பாஸ்போர்ட்) இருக்கலாகாது. பிரதமர் மோடியின் வெளிவிவகார அணுகுமுறை இந்த அடிப்படையில்தான் அமைய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT