தலையங்கம்

ராகுலின் சேவை நாட்டுக்குத் தேவை!

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ்

ஆசிரியர்

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் மகாராஷ்டிரத்திலும் ஹரியாணாவிலும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 15 ஆண்டுகளும், ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தும்கூட இப்படியொரு படுதோல்வியை அந்தக் கட்சி அடைந்திருப்பதன் காரணம் என்ன என்பதைப் பற்றி மற்றவர்கள் சிந்திக்கும் அளவுகூட காங்கிரஸ் தலைமை சிந்திக்கிறதா என்பது சந்தேகம்தான்.

2014-இல் மேற்கே பாகிஸ்தான் எல்லையிலிருந்து கிழக்கே வங்காள விரிகுடா கடல் வரை, காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலம் எதையும் கடக்காமல் பயணிக்க முடியும். அதேபோல, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரையிலும், காங்கிரஸ் மாநிலம் எதையும் தொடாமல் பயணிக்க முடியும். எத்தனை பெரிய சறுக்கல் இது!

கடந்த ஓராண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சி பதவியிலிருந்து அகற்றப்பட்ட மாநிலங்களின் பட்டியலைப் பார்த்தால் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ராஜஸ்தானில் 21/200, மத்தியப் பிரதேசத்தில் 58/230, சத்தீஸ்கரில் 39/90, தில்லியில் 8/70, ஒடிசாவில் 16/147, ஆந்திரப் பிரதேசத்தில் 0/175, தெலங்கானாவில் 21/119, மக்களவைத் தேர்தலில் 44/543. ஹரியாணாவில் 15/90, மகாராஷ்டிரத்தில் 42/288 என்பதுதான் கடந்த ஓராண்டு நடந்த தேர்தல் பரீட்சைகளில் காங்கிரஸ் பெற்ற மதிப்பெண் பட்டியல். ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது.

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்கொண்டது சரித்திர வீழ்ச்சி. 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு மக்களவையின் மொத்த இடங்களில் 10% இடத்தில்கூட வெற்றி பெறவோ, அதிகாரபூர்வ எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைப் பெறவோ முடியாத அளவிலான தோல்வியை அந்தக் கட்சி எதிர்கொண்டது.

இந்தியாவின் 125 கோடி மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகார், குஜராத், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வாழும் இளைஞர்கள் காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்ததில்லை. இந்த மாநிலங்களில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேலானவர்கள் வசிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இம்மாநிலங்கள் மக்களவையில் 200-க்கும் அதிகமான இடங்களைப் பெற்றிருப்பவையும்கூட. இத்தனை புள்ளிவிவரங்களையும், தகவல்களையும் பட்டியலிடுவதன் நோக்கம் காங்கிரஸ் பேரியக்கத்தை(?) சிறுமைப்படுத்துவதற்காகவோ, கேலி செய்வதற்காகவோ அல்ல.

காங்கிரஸ் கட்சியினர், குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தீவிரமான சுயசிந்தனையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. அப்படி ஓர் எண்ணமே அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்பதாலும்கூட. காங்கிரஸ் கட்சி தனது கொள்கையாக எதையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறதோ, அதையெல்லாம் ஆட்சியில் இருக்கும்போது நினைத்துப் பார்க்கவோ, செயல்படுத்தவோ முன்வருவதில்லை.

பதவியில் இல்லாமல் போகும் போதாவது, காந்தியும், நேருவும் ஏனைய சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் வகுத்துத் தந்த கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், தன்னை  உயிர்ப்பித்துக் கொள்ளவும் முயற்சிக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.

காந்தியடிகளை நரேந்திர மோடி அபகரித்துக் கொண்டுவிட்டார். காங்கிரஸின் கதர்க் குல்லாவையும், "சுதேசி' கோஷத்தையும் ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. உலகமயம், சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றுக்காக சோஷலிச தத்துவத்தை காங்கிரஸ் பேரம் பேசி விற்றுவிட்டது. தொடர்ந்து தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்த பிறகும், "தோல்விக்கு ராகுல் காந்தி காரணமல்ல' என்று குரலெழுப்புவதில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர, கட்சியை உயிர்ப்பிப்பது எப்படி என்று காங்கிரஸார் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

வலுவிழந்து, பொலிவிழந்து கிடந்த பாரதிய ஜனதாக் கட்சியை ஒரு நரேந்திர மோடியால் தனிப் பெரும்பான்மையுடன் மத்திய ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முடிந்திருக்கிறது. ஆட்சியில் இருந்த இடங்களில் எல்லாம் காங்கிரஸே ராகுல் காந்தியால் தோல்வியைத் தழுவச் செய்ய முடிந்திருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

கேரளம், கர்நாடகம், அஸ்ஸாம், உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்னும் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ஆகையால், ராகுல் காந்தியின் சேவை தொடரத்தான் வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT