முந்தைய அரசுகளால் 1993 முதல் ஒதுக்கப்பட்ட 214 நிலக்கரிச் சுரங்கங்களின் உரிமங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்தது. ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் காணப்பட்டன என்றாலும், அந்தந்த நிலக்கரிச் சுரங்கங்களின் செயல்பாட்டுக்காகப் பல்வேறு வங்கிகள் கொடுத்திருந்த கடன் தொகையை வசூலிக்க முடியாத நிலைமை; இந்த நிலக்கரிச் சுரங்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும், தொடங்க இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களும் இரும்பு உருக்கு, சிமென்ட் தொழிற்சாலைகளும் செயல்பட முடியாத நிலைமை போன்றவை ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
அப்படிப்பட்ட சூழலில், காலம் தாழ்த்தாமல், இணைய வழி ஏலமுறை மூலம் நிலக்கரிச் சுரங்கங்களை மறு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவெடுத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய முடிவு. அத்துடன் நின்றுவிடாமல், தற்போதைய உரிமதாரர்களிடமிருந்து இணையவழி ஏலத்தின் மூலம் உரிமம் பெற்றவர்களுக்கு சுரங்க உரிமத்தை மாற்றிக் கொடுப்பதற்கு வழிகோலும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிப்பது என்கிற முடிவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் நலன் பாதுகாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வாக்குறுதி அளித்திருக்கிறார் என்றாலும்கூட, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்குத் தனியார் நிறுவனங்களுக்கும் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்படுகிறது.
உலகிலேயே மிக அதிகமான நிலக்கரி வளம் இந்தியாவில்தான் காணப்படுகிறது. உத்தேசமாக இந்தியாவில் 301 பில்லியன் டன் நிலக்கரி வளம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், 2013-14 நிதியாண்டில் நாம் 104.7 மில்லியன் டன் நிலக்கரியை 20 பில்லியன் டாலர் அன்னியச் செலாவணியைக் கொடுத்து இறக்குமதி செய்திருக்கிறோம். அப்படி இருந்தும்கூட, நம்மால் அனல் மின் உற்பத்தி, சிமென்ட், இரும்பு உருக்கு ஆலைகளின் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை.
இதற்கு மிக முக்கியமான காரணம், அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முழுத் திறன்பாட்டுடன் செயல்படாமல் இருப்பதுதான். கோல் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பம் அரதப் பழசு என்பது மட்டுமல்ல, நிர்வாக முறையும் மெச்சும்படியாக இல்லை. தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலனைப் பேணும் அதேநேரத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியின் தரத்தை உறுதிப்படுத்தவும் உதவாமல் இருப்பதுகூடக் காரணங்கள். இதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒத்துழைக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார்மயமாக்குவது என்பது விரும்பத்தக்க நடவடிக்கை இல்லைதான் என்றாலும், உற்பத்தித் திறனைப் பெருக்கி இந்தியாவின் உடனடித் தேவையான மின் பற்றாக்குறை, சிமென்ட் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. அன்னிய நேரடி முதலீடு மூலம் மட்டுமே நவீன தொழில்நுட்ப ரீதியில் சுரங்க வேலைகளை முடுக்கிவிட முடியும் என்பதுதான் உண்மை.
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டுமானால் அதற்கு மின்சாரம் அடிப்படைத் தேவை. அணுசக்தி ஆபத்தானது என்கிற காரணத்தால் நாம் அனல் மின் உற்பத்தியைத்தான் சார்ந்தாக வேண்டிய சூழல். இந்தியாவில் 72% மின் உற்பத்தி நிலக்கரி சார்ந்த அனல் மின் உற்பத்திதான். நாம் போதுமான அளவு தரமான நிலக்கரியை உற்பத்தி செய்தாக வேண்டும் என்கிற நிலையில், அரசு எடுத்திருக்கும் முடிவுதான் சரி.
இணைய வழி ஏலம் என்பது வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், ஏலத் தொகை உயரக்கூடும். உச்சநீதிமன்ற உத்தரவால் செயல்பட்டுக் கொண்டிருக்கும், அல்லது தொடங்க இருக்கும் சுரங்கப் பணிகள் முடங்கிக் கிடக்கும் நிலையில், அதன் முந்தைய ஒப்பந்ததாரர்கள் என்ன விலை கொடுத்தாவது சுரங்கங்களைத் தக்க வைத்துக்கொள்ள நினைப்பார்கள். அப்படி அதிகத் தொகையைக் கொடுத்து இணைய ஏலத்தில் மீண்டும் சுரங்கங்களை எடுத்தால் அதன் விளைவைச் சந்திக்கப்போவது என்னவோ நுகர்வோரான பொதுமக்களாகத்தான் இருக்கும்.
இணைய ஏலத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் வருவாய், அந்தச் சுரங்கங்கள் காணப்படும் மாநிலங்களுக்குத் தரப்பட்டுவிடும் என்கிற அறிவிப்பு, மத்திய அரசின் புதிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. நல்ல முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.