தலையங்கம்

ரயில் விட்டதால் ஆயிற்றா?

இலங்கையின் தலைநகர் கொழும்பையும் வட இலங்கைத் தலைநகரமான யாழ்ப்பாணம், காங்கேசன்துறையையும் இணைக்கும் யாழ்தேவி விரைவு ரயில் மீண்டும்

ஆசிரியர்

இலங்கையின் தலைநகர் கொழும்பையும் வட இலங்கைத் தலைநகரமான யாழ்ப்பாணம், காங்கேசன்துறையையும் இணைக்கும் யாழ்தேவி விரைவு ரயில் மீண்டும் ஓடத்தொடங்கி இருக்கிறது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் தீபகற்பத்திற்குப் பயணித்திருக்கும் யாழ்தேவி விரைவு ரயில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் அறிகுறி என்றாலும், இதை மட்டுமே பெரிய சாதனை என்று ராஜபட்ச அரசு நினைத்தால், அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும்.

யாழ் தீபகற்பத்தை ஏனைய இலங்கைப் பகுதிகளுடன் இணைக்கும் யாழ்தேவி விரைவு ரயில் கொழும்பிலிருந்து புறப்பட்டு அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, சாவகச்சேரி வழியாக யாழ்ப்பாணத்தை அடைகிறது. அங்கிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பாதை இன்னும் முழுவதுமாகப் போடப்படவில்லை. விரைவிலேயே யாழ்தேவி விரைவு ரயில் காங்கேசன்துறை வரை இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே தெரிவிக்கிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது முதலே, யாழ்தேவி விரைவு ரயிலின் பயணம் பலமுறை தடைபடத் தொடங்கியது. இலங்கை அரசு ராணுவத்தை ஏற்றிச் செல்ல யாழ்தேவியைப் பயன்படுத்தியதால், 1985 முதல் அந்த ரயில் அடிக்கடி ஈழப் போராளிகளின் தாக்குதலுக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல், இலங்கை ராணுவத்தின் தொடர் குண்டு வீச்சால் இடைப்பட்ட ரயில் நிலையங்கள் தரைமட்டமாயின. பல இடங்களில் தண்டவாளங்கள் தகர்ந்தன. செப்பனிட முடியாத நிலைமை ஏற்பட்டதும் இலங்கை ரயில்வே யாழ்தேவி விரைவு ரயிலை இயக்குவதைக் கைவிட்டது.

2009-இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவு பெற்றதும், கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் தண்டவாளங்களை மீண்டும் நிறுவி, யாழ்தேவி விரைவு ரயிலை மீண்டும் இயக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது. இந்தியாவின் கடனுதவியுடனும், இந்திய ரயில்வேயின் துணையுடனும்தான் இப்போது யாழ்தேவி விரைவு ரயில் பழையபடி தனது இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது.

யாழ்தேவி விரைவு ரயிலை மறுபடியும் இயக்குவது என்பது, அமைதி முழுமையாகத் திரும்பிவிட்டதன் அடையாளம் என்று ராஜபட்ச அரசு கருதுகிறது. இந்த ரயிலை இயக்குவதன் மூலம் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வட இலங்கை முழுமையாக இலங்கையுடன் ஒன்றிணைந்துவிட்டதாக ராஜபட்ச அரசு பெருமிதம் கொள்கிறது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்பது வட இலங்கைவாழ் தமிழர்களுக்குத்தான் தெரியும்.மீண்டும் யாழ்தேவி விரைவு ரயில் இயக்கப்படுவதும், கொழும்பு நகருடனான இணைப்பு மறுபடி சுலபமாக்கப்படுவதும், வட இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான் என்பதில் ஐயப்பாடில்லை. ஆனால், இதனால் மட்டுமே அவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது. வட இலங்கை முதல்வர் சி.வி.விக்னேஷ்வரனும் அவரது அமைச்சரவை சகாக்களும் யாழ்தேவி விரைவு ரயிலின் தொடக்க விழாவைப் புறக்கணித்திருப்பதிலிருந்தே, எந்த அளவுக்கு ராஜபட்ச அரசு இலங்கைவாழ் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது என்பது தெரிகிறது.

உள்நாட்டுப் போர் முடிந்தது முதலே, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச வட இலங்கையின் கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பது பற்றிப் பேசுகிறார், சில முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், அதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் இல்லை. பொருளாதாரம் மேம்படவும் இல்லை. கட்டமைப்பு வசதிகளைப் புனரமைக்கும் முயற்சிகளில் பயனடைந்திருப்பவர்கள் கொழும்பைச் சேர்ந்த சிங்கள ஒப்பந்தக்காரர்களும், நிறுவனங்களும்,வியாபாரிகளும் மட்டுமே. இந்தியாவும், ஏனைய உலக நாடுகளும் தமிழர்கள் வாழுகின்ற வட இலங்கையின் புனரமைப்புக்காக இலங்கைக்கு அளித்த நிதியுதவிகளில்  பெரும்பகுதி தென் இலங்கையின் மேம்பாட்டுக்கும், சிங்கள முதலாளிகளின் வங்கிக் கணக்கிற்கும்தான் சென்றடைந்திருக்கின்றன.

வட இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஷ்வரன் அரசை, ராஜபட்ச தலைமையிலான மத்திய அரசு மதிப்பதுமில்லை, அவர்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அதிகாரப் பகிர்வை அளிக்கவுமில்லை. அந்த மாநில அரசைக் கலந்தாலோசிக்காமலும், மதிக்காமலும் தொடர்ந்து வட இலங்கையில் திட்டங்களை நிறைவேற்ற முற்படுவது, வெறுப்பையும், இடைவெளியையும் அதிகரித்திருக்கிறதே தவிர குறைக்கவில்லை.

யாழ்ப்பாணத்திற்கும், கொழும்புக்கும் இடையில் ரயில் விடப்பட்டதால் எல்லாம் மனதளவில் நெருக்கம் வந்துவிடப் போவதில்லை. அதிகாரப்பகிர்வும், அங்கீகாரமும் தரப்படாதவரை, யாழ் தீபகற்பம் அனல்பூத்த நெருப்பாகத்தான் தொடரும் என்பதை அதிபர் ராஜபட்ச உணர்ந்தாக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT