ஒன்பது மாநிலங்களில் 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் பாஜக பல சட்டப்பேரவைத் தொகுதிகளை இழந்திருப்பது எதிர்பாராதது. தேர்தல் நடைபெற்ற 33 தொகுதிகளில், 26 தொகுதிகள் பாஜக முன்பு வெற்றி பெற்றிருந்த தொகுதிகள் என்பதால், அவற்றில் 13 தொகுதிகளை அந்தக் கட்சி இழந்திருப்பது பின்னடைவுதான் என்பதில் சந்தேகமே இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 11 சட்டப்பேரவைத் தொகுதிகளும், முன்பு பாஜக வெற்றி பெற்றிருந்த தொகுதிகள். அந்த உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அங்கே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இடைத்தேர்தல் நடைபெற்ற 11 தொகுதிகளில், மூன்று தொகுதிகளை மட்டுமே பாஜக தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்த ஆளும் சமாஜவாதி கட்சி, ஏனைய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் பாஜகவிடமிருந்து பறித்திருப்பது, உத்தரப் பிரதேச அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.
முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராகக் கட்சிக்குள் எழுந்திருக்கும் எதிர்ப்புகள் இனிமேல் அடங்கிவிடும் என்பது மட்டுமல்ல, முசாபர்நகர் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் சமாஜவாதி கட்சியின் மீது ஏற்பட்டிருந்த அவநம்பிக்கை இப்போது இல்லை என்பதையும் இந்த முடிவுகள் காட்டுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாத நிலையில், சிறுபான்மை சமுதாய வாக்குகள் சிதறாமல் சமாஜவாதி கட்சிக்குக் கிடைத்திருப்பதும் இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கக் கூடும்.
குஜராத் மாநிலத்தில் பாஜக எதிர்கொண்ட பின்னடைவுதான், அரசியல் நோக்கர்களுக்கே புதிராக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். அந்த 9 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை ஆளும் பாஜக தற்போது இழந்திருக்கிறது.
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான நரேந்திர மோடி பாரதத்தின் பிரதமராகி இருப்பது, அவரது சொந்த மாநிலத்தில் மிகப்பெரிய ஆதரவை ஏற்படுத்துவதுதான் நியாயம். அவர் பிரதமரானதைத் தொடர்ந்து, குஜராத்திலுள்ள அத்தனை தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிகமான வாக்குகளுடன் பாஜக வெற்றி பெறும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. நேர்மாறாக, வடோதரா மக்களவைத் தொகுதி உள்பட, இடைத்தேர்தல் நடந்த அத்தனை தொகுதிகளிலும் பாஜகவின் வாக்குகள் குறைந்திருக்கின்றன என்பது புதிராக இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், குஜராத் மட்டுமல்ல, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற ராஜஸ்தானிலும், இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உத்தரகண்ட், பிகார், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்கொண்ட இடைத்தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, இப்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தல்களிலும் பின்னடைவை எதிர்கொண்டிருப்பது குறித்து பாஜக சிந்திக்க வேண்டும்.
இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பது என்பது, பொதுத் தேர்தலில் வாக்களிப்பது போலல்ல. இடைத்தேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடாது என்பதால், எதிராக வாக்களிப்பதும், ஆளுங்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம்தான் தங்கள் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் முன்னுரிமை பெறும் என்பதால் ஆதரவாக வாக்களிப்பதும் புதிதல்ல. இடைத்தேர்தல் முடிவுகளை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு கட்சியின் செல்வாக்கையோ, செல்வாக்குச் சரிவையோ கணித்துவிட முடியாதுதான்.
அதேநேரத்தில், இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு எச்சரிக்கையாக அமையும்போது, தவறுகள் திருத்தப்படவும் அது வழிகோலும். நரேந்திர மோடி தலைமை மீது மக்களுக்கு ஏற்பட்ட அதீத நம்பிக்கைதான், மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜகவை வெற்றி பெறச் செய்தது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்ததும் உடனடி மாற்றங்கள் ஏற்பட்டு விடும் என்கிற உச்சகட்ட எதிர்பார்ப்புகூட, இந்த இடைத்தேர்தல் பின்னடைவுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
விரைவில் மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக சுதாரித்துக் கொள்ளவும், நரேந்திர மோடியின் பெயரை மட்டுமே பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்கிற மெத்தனத்தைக் கைவிடவும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எச்சரிக்கையாக அமைந்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.