இந்தியா, பாகிஸ்தான் என்கிற எல்லை வேறுபாடுகளை சட்டை செய்யாமல், ஜீலம் நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கையே வெள்ளக்காடாக மாற்றி விட்டது. பதினைந்து நாள்களுக்கு முன்னால் ஜீலம் நதி சீற்றம் கொண்டு ஏற்படுத்திய பேரழிவின் தாக்கம் இன்னும் தணிந்தபாடில்லை.
காஷ்மீரத்தை வெள்ளப் பெருக்கில் மூழ்கடித்த ஜீலம் நதியின் சீற்றம் அடங்கி, வெள்ளம் வடிந்து விட்டது என்றாலும், துயரம் தீர்ந்தபாடில்லை. இன்னும்கூடப் பல குயிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டுதான் இருக்கின்றன.
தலைநகரம் ஸ்ரீநகரை எடுத்துக்கொண்டால், வெள்ளம் வடியாத பெரும்பாலான இடங்களில் ஓ.என்.ஜி.சி.யும் தீயணைப்புப் படையினரும், ராணுவத்தினரும் நீருறிஞ்சிகள் (பம்பு) மூலம் வெள்ளத்தை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளம் வடிந்துவிட்ட பகுதி
களில், மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பேருந்துப் போக்குவரத்து சில இடங்களில் தொடங்கி விட்டாலும், இன்னும்கூட விமானநிலையத்துக்குச் செல்லும் முக்கியமான பாதைகள் செப்பனிடப்படாத நிலையில், பயன்பாட்டுக்கு வரவில்லை.
பொருள் சேதம் ஏற்பட்ட அளவுக்கு உயிர்ச்சேதம் இல்லை என்பது மட்டுமே ஆறுதல். தகர்ந்துபோன பாலங்கள்; துண்டிக்கப்பட்ட சாலைகள்; அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்; வெள்ளத்தில் மூழ்கிக் காணாமல் போய்விட்ட குடியிருப்புகள். இதெல்லாம் போதாது என்று லட்சக்கணக்கான மக்கள் குளிரிலும், பசியிலும், மின்சாரம் இல்லாததால் இருளிலும் தவிக்கிறார்கள்.
இதயமே வெடித்துவிடும் போன்ற அவலம்தான். ஆனால், இந்த அவலத்தை மனிதன் வலிய வரவழைத்துக் கொண்டான் என்பதை யாருமே அழுத்தமாகச் சொல்வதில்லை. துயரத்திற்கு நடுவில் குற்றச்சாட்டுகளை எழுப்புவது சரியல்ல என்றாலும், வலிந்து ஆபத்தை வரவழைத்துக் கொண்டிருப்பதை எப்படி கண்டிக்காமல் இருப்பது?
கடந்த ஆண்டுதான் உத்தரகண்டில் கங்கை பெருக்கெடுத்து ஓடி, சொல்லொனாச் சேதத்தை ஏற்படுத்தியது எனும்போது, அதிலிருந்து எந்தவிதப் பாடத்தையும் படிக்காமல் இருந்தது யாருடைய தவறு? வெள்ளப் பெருக்கு பற்றிய எச்சரிக்கை எழுப்பாமல் இருந்ததும், அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யாமல் விட்டிருந்ததும் யாருடைய தவறு?
காஷ்மீர் பள்ளத்தாக்கு, இயற்கையாகவே வெள்ளப் பெருக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும் பகுதி. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் சிற்றாறுகளும், ஓடைகளும், நீர்நிலைகளும், குளங்களும், நதிகளும் நிறைந்து காணப்படுவதுபோல இந்தியாவில் வேறு எங்குமே காணப்படுவதில்லை.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 1,230 ஏரிகளும், நீர்நிலைகளும் இருக்கின்றன. அப்படி இருந்தும் இப்படியொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குக் காரணம், அந்த ஏரிகளும் சிற்றாறுகளும், ஓடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததுதான்.
தால் ஏரி, அஞ்சார் ஏரி, மானஸ்பால் ஏரி, உலார் ஏரி போன்ற பெரிய ஏரிகள், நகர்மயப்படுத்தலின் காரணமாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. கி.பி. 1200-இல் உலகிலேயே பெரிய ஏரி என்று புகழப்படும் தால் ஏரியின் பரப்பளவு 75 சதுர கி.மீ. எண்பதுகளில் அது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விட்டிருந்தது என்றால், இப்போது 2014-இல் ஆறில் ஒரு பங்காகி விட்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகளாலும், சுற்றி எழும்பி இருக்கும் விடுதிகள், கட்டடங்களாலும் தால் ஏரியின் பரப்பளவு குறைந்திருக்கிறது.
உத்தரகண்ட் கங்கைக் கரையில் ஏற்பட்டது போலவே, காஷ்மீரில் ஜீலம் நதியின் கரைகள் மெல்லமெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு, முன்பு இருந்ததில் பாதியாக நதி குறைந்துவிட்டது. தன்னிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்ட பகுதியை, இதுபோன்ற வெள்ளப் பெருக்கின் மூலம் இயற்கை மீட்டெடுக்க நினைக்கிறது.
இது ஏதோ காஷ்மீரத்திலும், உத்தரகண்டிலும், ஜீலத்திலும் கங்கையிலும் மட்டும் நடைபெற்ற பேரழிவாக நாம் நினைத்தால் அது தவறு. காடுகள் அழிக்கப்படுதல், திட்டமிடலே இல்லாமல் கட்டடங்களும், சாலைகளும் அமைக்கப்படுதல், வரைமுறையே இல்லாமல் குப்பைகள் கொட்டப்படுதல், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் போன்றவை மூடப்பட்டு குடியிருப்பாகவும், அலுவலகங்களாகவும் மாற்றப்படுதல், இவை எல்லாமே இயற்கையைச் சீண்டிப் பார்க்கும் விபரீத நடவடிக்கைகளே.
ஆறுகளுக்கு அவற்றின் போக்கில் கடலில் கலக்கும் பாதைகள் வேண்டும். வளர்ச்சிப் பணி என்கிற பெயரில் ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதிப்பது தாற்காலிக வளர்ச்சியாகத்தான் இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகள் நிரந்தரச் சேதங்களை ஏற்படுத்திவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.