தலையங்கம்

தகவல் பெறுவது உரிமை!

சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்த சட்டங்களில் தலையாயது 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்.

ஆசிரியர்

சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்த சட்டங்களில் தலையாயது 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம். நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதுடன், முறைகேடான அல்லது சட்டத்திற்குப் புறம்பான முடிவுகள் எடுக்கப்பட்டால், அதுபற்றியத் தகவல்களைக் கோரிப் பெறும் உரிமையைக் குடிமக்களுக்கு வழங்கும் அந்தச் சட்டம், மேலிருந்து கீழ்வரை, பல தவறுகளை வெளிக்கொணரக் காரணமாக அமைந்திருக்கிறது.

இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவும், இதன் அடிப்படை நோக்கமான வெளிப்படைத் தன்மையைத் தடம்புரளச் செய்யவும் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனது முதலாவது ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே, 2009-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இதனை முனை மழுங்கிய கத்தியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுத் தோற்றது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்தச் சட்டம் நீதித்துறைக்குப் பொருந்தாது என்றும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிபதிகள் தொடர்பான தகவல்களைக் கோர முடியாது என்றும் கூறி, நீதித் துறையில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுவிடாமல் தடுக்க முற்பட்டார்.

இப்படிப் பல்வேறு தாக்குதல்களையும் எதிர்கொண்டு பத்து ஆண்டுகளாக மிகப் பெரிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் மிகப்பெரிய சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்தது. நீதிபதி எம். பால் வசந்தகுமாரும், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவும் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

உயர்நீதிமன்றப் பதிவாளர், தலைமைப் பதிவாளர் நியமனம் தொடர்பான தகவல்களையும், நியமன முறைகளையும், பி. பாரதி என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கோரியிருந்தார். மாநிலத் தகவல் ஆணையம், அவர் கேட்டிருந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்படி உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு வழிகாட்டுதல் வழங்கியது. மேலே கோரப்பட்ட தகவலைத் தர விரும்பாத, உயர்நீதிமன்றத்தின் தகவல் அதிகாரியாகச் செயல்படும் பதிவாளர் (நிர்வாகம்) தாக்கல் செய்த மனு மீதுதான் நீதிபதிகள் இந்த அதிர்ச்சி தரும் தீர்ப்பை வழங்கினார்கள்.

எந்தவொரு தகவலைக் கோரும்போதும், அந்தத் தகவல் எதற்காகக் கோரப்படுகிறது என்கிற காரணத்தையும் குறிப்பிட்டாக வேண்டும் என்கிற நீதிபதிகளின் உத்தரவு கடும் கண்டனத்திற்கும், விவாதத்திற்கும் உள்ளானது. காரணத்தைக் குறிப்பிட்டுத் தகவல் கோரப்படுவது என்பது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது. தவறு செய்தவர் தனது தவறு பற்றியத் தகவல் திரட்டப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், தவறு வெளிப்படாமல் தடுத்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.

நீதிபதிகள் பால் வசந்தகுமாரும், கே.ரவிச்சந்திரபாபுவும் பெருந்தன்மையுடன் தாங்கள் அளித்த தீர்ப்பைத் தாங்களாகவே முன்வந்து திருத்தி இருப்பது பாராட்டுக்குரியது. "தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005-இன் 6(2) சட்டப் பிரிவு, விண்ணப்பதாரர்கள் தங்களது கோரிக்கைக்குக் காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறது. இந்தச் சட்டப் பிரிவைக் கவனிக்காமல் உத்தரவு பிறப்பித்தது தவறு' என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பாதுகாப்புத் தொடர்பான கோப்புகளையும், நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பான பிரச்னைகளையும் தவிர்த்து ஏனைய எல்லாத் தகவல்களும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால்தான், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதாகப் பொருள். அதுதான் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கம். இதிலிருந்து உயர் அதிகாரிகளோ, நீதிபதிகளோகூட விதிவிலக்காக இருக்க முடியாது; கூடாது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 10 ஆண்டுகளாகிவிட்டன. இப்போதும்கூட, தகவல் பெறும் உரிமைச் சட்டம், கல்விக்கான உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் போன்றவை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாமல் இருக்கிறது. அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி, ஒரு வாரத்தைத் தகவல் உரிமைச் சட்ட வாரமாகக் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான நிதியும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கருத்தரங்குகள், ஊர்வலங்கள், பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். முறைகேடுகள் தடுக்கப்படவும், மக்களாட்சி மேம்படவும் அதுதான் ஆக்கபூர்வமான பங்களிப்பாக இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT