தலையங்கம்

மருந்துக்கு மருந்து!

மருந்து உற்பத்தித் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில், இந்திய நிறுவனங்களை விலைக்கு வாங்குவது அல்லது இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது என்ற வகையில், ரூ.54,780 கோடி அன்னிய முதலீடு இந்தியாவுக்குள் வந்திருக்கிறது.

ஆசிரியர்

மருந்து உற்பத்தித் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில், இந்திய நிறுவனங்களை விலைக்கு வாங்குவது அல்லது இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது என்ற வகையில், ரூ.54,780 கோடி அன்னிய முதலீடு இந்தியாவுக்குள் வந்திருக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாயை விளம்பரத்துக்காக மட்டுமே செலவிடும் வல்லமை படைத்திருக்கின்றன பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்கள். இவர்களுடன் உள்நாட்டு நிறுவனங்களால் போட்டிபோட இயலவில்லை.

இந்தியாவில் மொத்த மருந்துகளில் 2.8% மட்டுமே மருந்து விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் மருந்துகளை மூலப்பொருள் (எஉசஉதஐஇ) பெயரில் விற்பனை செய்யாமல் வணிகப் பெயரில் விற்பனை செய்வதும், தரமான மருந்தைத் தயாரிக்க உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்ற பொருந்தா கோட்பாடும்தான். இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டியது இந்த இரண்டு விஷயத்தில்தான்.

மருந்துக் கொள்கையின் அடிப்படை, மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதும், அதை உள்நாட்டு நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எது விற்பனை செய்தாலும் அதற்கான விலையை அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதுமாகத்தான் இருக்க வேண்டும்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளித்த மத்திய சுகாதார அமைச்சர், அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் யாவும் மூலப்பொருளின் பெயர்களால் எழுதப்படுகின்றன, வணிகப் பெயர்களைப் பயன்படுத்துவதில்லை என்று விளக்கம் அளித்தார். அது முற்றிலும் உண்மை. ஆனால், அந்த நடைமுறையை ஏன், தனியார் வணிகக் கூட்டாண்மை மருத்துவமனைகளுக்கும், தனி மருத்துவ ஆலோசனைக் கூடங்களுக்கும் பொருந்துமாறு செய்யவில்லை?

மருந்துச் சந்தையை தனியார் நிறுவனங்களே ஆளுகின்றன. அவை மருத்துவர்களுக்குப் பல சலுகைகளையும், அன்பளிப்புகளையும் அள்ளி வீசித் தங்களது நிறுவனத்தின் மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்க ஊக்குவிக்கின்றன. அவர்களின் வணிக மருந்துகளையே மருத்துவர்களும் எழுதித் தருகிறார்கள். அவை நோய் தீர்க்கும் மருந்துகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவற்றின் விலை மிகவும் அதிகம் என்பதால்தான், அது சரியற்ற நடைமுறை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டிலும்கூட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துகள் அனைத்தும் மூலப்பொருள் பெயரிலானவை. ஆனால், அதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் வணிகப் பெயர்களில் மருந்துகளை எழுதுகிறார்கள். அதில்தான் பிரச்னை எழுகிறது.

குறைந்தபட்சம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளின் மூலப்பொருள் பெயர்களையே எழுதித் தர வேண்டும் என்பதை தமிழக அரசு கட்டாயப்படுத்த வேண்டும். அனைத்து மருந்துக் கடைகளிலும் மூலப்பொருள் மருந்துகளையே விற்பனை செய்வதையும் கட்டாயமாக்க வேண்டும்.

ஒருபுறம் மருத்துவச் சேவை அளப்பரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றாலும், மக்கள் மனதில் மருத்துவர்கள் மீதான நம்பிக்கையும் மரியாதையும் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. அவர்கள் சேவை செய்கிறார்கள் என்கிற எண்ணம் மாறி, நமது நோயைப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள் என்கிற கருத்து மேலோங்கி இருக்கிறது.

இதற்கு, பல லட்சம் (கோடி ?) ரூபாய் செலவழித்து மருத்துவப் படிப்புப் படிக்க வேண்டியிருப்பதுகூடக் காரணம். மருத்துவக் கல்விக்கான செலவு குறைந்து, மருத்துவம் என்பது சேவை என்கிற மனோநிலை மருத்துவர்கள் மத்தியில் வேரூன்றினால் ஒழிய இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு அமையுமா என்பது சந்தேகம்தான்.

மருந்துகள் பற்றியும், தங்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சேவை பற்றியும், பொதுமக்கள் மத்தியில் பரவலான புரிதல் இல்லை. அதனால், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துப் பட்டியல் பற்றிக் கேள்வியோ, விளக்கமோ கேட்கத் தயங்குகிறார்கள். நுகர்வோர் சட்டங்களில் தொடங்கி, சமூக வலைதளத்தின் மூலம் பிரச்னைகளை வெளிப்படுத்துவது வரை பல வழிமுறைகள் இப்போது இருக்கின்றன. தவறான மருத்துவ முறைகளையும், மருத்துவர்களின் மனிதாபிமானமற்ற சிகிச்சை முறைகளையும் பொதுமக்கள் கேள்வி கேட்க முற்பட்டால் ஒழிய, இந்திய மருத்துவத் துறையில் ஊடுருவி இருக்கும் முறைகேடுகளையும், இளைய தலைமுறை மருத்துவர்கள் மத்தியில் காணப்படும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பேராசை எண்ணத்தையும் வேரறுக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT