தலையங்கம்

முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை!

கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மிகப் பெரிய ஆளுமை, இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீடத்தைத் தமிழுக்குப் பெற்றுத் தந்த குருபீடத்துக்கு உரியவரை நாம் இழந்து விட்டிருக்கிறோம்.

ஆசிரியர்

கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மிகப் பெரிய ஆளுமை, இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீடத்தைத் தமிழுக்குப் பெற்றுத் தந்த குருபீடத்துக்கு உரியவரை நாம் இழந்து விட்டிருக்கிறோம்.

மரணம் யார் ஒருவரையும் விட்டுவைத்ததில்லைதான். ஆனால், ஒரு சிலரை மட்டும் மரணத்தால்கூட மனித இனத்தின் நினைவிலிருந்தும், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தும் அகற்றிவிட முடிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சிலரில் நிச்சயமாக எழுத்தாளர் ஜெயகாந்தனும் ஒருவர்.

ஜெயகாந்தனுக்கு என்று தமிழ் எழுத்துலகில் சில தனிச் சிறப்புகள் உண்டு. "வணிகப் பத்திரிகைகளில் இலக்கியத்தரமான படைப்புகளுக்கு இடமில்லை என்கிற வாதத்தைப் பொய்ப்பித்தவர் அவர். மேல்தட்டு, நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் என்று வேறுபாடில்லாமல் அனைத்துத் தரப்பினரின் உள்ள உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், பிரச்னைகளையும் புதிய கோணத்தில் பதிவு செய்து, விமர்சனம் செய்து ஒட்டுமொத்தத் தமிழ் சமுதாயத்தையும் நிமிர்ந்து பார்க்க வைத்த ஒரே எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமாகத்தான் இருக்கும்.'

இலக்கியம் என்றால் என்ன? "ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு யாத்திரையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்' என்பது ஜெயகாந்தனின் பதில்.

"எழுத்தாளன் என்பவன் ஏதோ கதை எழுதி எல்லோரையும் மகிழ்ச்சியூட்டுகிற கலைஞன் அல்லன். ஒரு சிறப்பான காவியம் பலரையும் ஆனந்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு சிறப்பான எழுத்து என்பது ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாகப் படிப்பவனை கஷ்டப்படுத்தவும் செய்யும். மனசாட்சியைக் குத்திக் கிளறி சித்திரவதையும் செய்யும்' என்பது ஒரு முறை "நான் ஏன் எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் அமைந்த அவரது வானொலி உரையில் அவர் வெளிப்படுத்திய நிஜம்.

"பாரிஸýக்குப் போ' சாரங்கனும் லலிதாவும், "சில நேரங்களில் சில மனிதர்கள்' பிரபுவும், கங்காவும், "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' ஹென்றி தொடங்கி அவர் உலவவிட்ட கதாபாத்திரங்கள், தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிப்போட்டன. "சினிமாவுக்குப் போன சித்தாளு'. "யாருக்காக அழுதான்', "உன்னைப்போல் ஒருவன்', "குருபீடம்' போன்ற படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாத ஜெயகாந்தனின் முத்திரைப் பதிவுகள்.

ஜெயகாந்தன் ஏப்ரல் 24-ஆம் தேதி பிறந்தவர். கவிஞர் கண்ணதாசன் ஜூன் 24-ஆம் தேதி பிறந்தவர். தமிழகத்தில் தேசியத்தின் குரலாக எழுபதுகளில் தமிழக மேடைகளை வலம் வந்தார்கள் இவர்கள் இருவரும். சமகால இலக்கிய ஆளுமைகளான இருவரும், மற்றவர்மேல் அபரிமிதமான மரியாதை வைத்திருந்தனர். ஜெயகாந்தனைப் பற்றியும், அவரது எழுத்தையும் ஆளுமையைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசனைவிடத் துல்லியமாக மதிப்பீடு செய்து பதிவு செய்துவிட முடியாது. அவர் தமது "கண்ணதாசன்' இதழில் ஜெயகாந்தன் பற்றிச் செய்திருந்த பதிவு இது -

""அரசியல் துறையிலும், இலக்கியத் துறையிலும் எப்போதுமே கேள்விக் குறியாகக் காட்சியளிக்கிறவர்கள் சிலருண்டு. அவர்களிலே மிகப் பெரிய கேள்விக் குறி நண்பர் ஜெயகாந்தன். சுயேச்சையான அபிப்பிராயங்கள் எவ்வளவு வலுவுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

வளைந்தும், குழைந்தும், நேரத்திற்குத் தக்கப்படியும் அனுசரித்துப் போகும் உலகத்தில், அவர் ஒரு நிமிர்ந்த தென்னை. பல்லாயிரம் மக்கள் அடங்கிய சபையிலேகூடத் தனக்குச் சரியென்று படும் விஷயம், அவர்கள் அனைவருக்கும் தவறென்று படுமாயினும், அதைச் சொல்லக் கூடிய ஆற்றல் ஜெயகாந்தனுக்கு உண்டு.

இலக்கியத் துறையில் அவர் கையாண்ட புது உத்திகளுக்கு ஒரு முன்னுதாரணம் கிடையாது. இன்னாருடைய பாணி இவருக்கிருக்கிறதென்று எவரையும் சொல்ல முடியாது. பிறமொழிக் கதாசிரியர்களில்கூட எவரையும் ஜெயகாந்தன் பின்பற்றியதாகத் தெரியவில்லை. அவரது நிலத்தில் தோன்றிய விளைச்சல்களுக்கு, அவரே விதை; அவரே நீர்; அவரே உரம்.

எனக்குத் தெரிந்தவரையில் பாரதியின் சின்னச் சங்கரனும், புதுமைப்பித்தனின் கந்தசாமிப் பிள்ளையும், கல்கியின் வந்தியத்தேவனும், சிவகாமியும் பெற்றுள்ள இடம் பாத்திரப் படைப்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகும். பங்கிம் சந்திரரின் "இந்திரா', "தேவி செளது ராணி', சரத் சந்திரரின் "அமூல்யன்', "சரயூ', "காட்கரியின் வசுந்தரா', "விருந்தாவன்' - இவர்களெல்லாம் அந்தந்த மாநிலங்களில் மிகப் புகழ்பெற்ற பாத்திரங்கள். தமிழ்நாட்டில் அப்படிச் சில பாத்திரங்களை நினைவுகூரத் தொடங்கினால், அண்மைக் காலங்களில் ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் மட்டுமே நினைவுக்கு வரும் என்பது அவருக்குள்ள தனிச் சிறப்பாகும்.

பிடிவாதக்காரர், எதையும் எடுத்தெறிந்து பேசுகிறவர் என்கிற அவரைப் பற்றிய அபிப்பிராயங்கள், பெரும்பாலான சுயேச்சை உணர்வுமிக்க எழுத்தாளர்களைப் பற்றிய அபிப்பிராயங்களின் பிரதிபலிப்பே. இந்தச் சுபாவம் புதுமைப்பித்தனிடம்கூட இருந்தது. ஜெயகாந்தனிடம் கொஞ்சம் அதிகம்; அவ்வளவுதான்.

ஆனால், முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை என்ற இடத்தை ஜெயகாந்தன் பிடித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.''

ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றுத் தந்த நாவலான "சில நேரங்களில் சில மனிதர்கள்', "தினமணி கதிர்' இதழில் வெளிவந்த தொடர்கதை. "தினமணி'க்குப் பெருமை சேர்த்த ஜெயகாந்தன் என்கிற இலக்கிய ஆளுமையின் மறைவு, தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT