மதிய உணவுத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைக்குத் தற்போது அளிக்கப்படும் மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு உருளையை அனைவரும் சந்தை விலையைக் கொடுத்து வாங்கவும், மானியத் தொகையை நேரடியாக வங்கியில் சேர்ப்பதுமான திட்டம் அமலுக்கு வந்தபோது, மாநில அரசுகளும் மதிய உணவுத் திட்டத்துக்காக சமையல் எரிவாயு கொள்முதல் செய்யும்போது முழுத் தொகையைச் செலுத்தவும், மானியத்தை ஒரு நுகர்வோர் போல திரும்பப் பெறலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தெரிவித்திருந்தது.
நாட்டு நலன் கருதி மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று நுகர்வோருக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று சுமார் 30 லட்சம் நுகர்வோர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். மானியத்தை விட்டுக் கொடுங்கள் என நுகர்வோருக்கு வேண்டுகோள் விடுத்தவர்கள், மானியம் தர முடியாது என்று மாநில அரசுகளுக்கு இப்போது சுற்றறிக்கை விடுத்துள்ளனர். அனைத்து மாநில அரசுகளுக்கும் அண்மையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் "மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்துக்கான சமையல் எரிவாயு உருளைக்கு மானியத்தை மத்திய அரசு திருப்பித் தராது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு நிகழாண்டுக்கு ரூ.15,000 கோடி தேவை என்ற கோரிக்கை இருக்கும்போது, மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.9,000 கோடி மட்டுமே (கடந்த ஆண்டு ரூ.13,000 கோடி) என குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுதான் இத்தகைய மானிய ரத்து நடவடிக்கையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இறங்கியிருப்பதற்கான காரணம்.
தேசிய அளவிலான மதிய உணவுத் திட்டம் சுமார் 11.67 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் பயன் பெறுகின்றனர். மதிய உணவுத் திட்டத்தைப் பொருத்தவரை, ஒரு குழந்தைக்கான உணவுத் தயாரிப்புக்கான செலவு ரூ.3.85 ஆகிறது என்று கணக்கிடப்படுகிறது. இது உணவுப் பொருள், சமைப்பதற்கான எரிபொருள், ஊழியர் சம்பளம் அனைத்தையும் உள்ளடக்கியது. மதிய உணவுத் திட்டத்துக்கான செலவில் 75 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. (வடகிழக்கு மாநிலங்கள் என்றால் 90 விழுக்காட்டை ஏற்றுக் கொள்கிறது).
தமிழகத்தைப் பொருத்தவரை மத்திய அரசின் நிதியுதவி பற்றிக் கவலைப்படாமல், சுண்டல், முட்டை என சத்துள்ள உணவு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்கிறது. சத்துணவுத் திட்டத்தைப் பொருத்தவரை இந்தியாவுக்கே முன்னோடியாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டில் சத்துணவு மையங்கள் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுக்கு ஆகும் செலவு, அதாவது ஊழியர் சம்பளம் இல்லாமல் உணவுத் தயாரிப்புக்கு மட்டும் ஒரு சிறாருக்கு ரூ.1.30 (நகர்ப்புறங்களில் ரூ.1.40), நடுநிலைப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.1.70 (நகர்ப்புறங்களில் ரூ.1.80) வழங்கப்படுகிறது. இந்த உணவுத் தயாரிப்புச் செலவில், சமையலுக்கான விறகு அல்லது சமையல் எரிவாயு உருளைக்கான தொகையும் அடங்கும்.
விறகுகளைக் கொண்டு சமையல் செய்வதைக் குறைக்கும் வகையில் அனைத்து மையங்களையும் சமையல் எரிவாயு உருளைக்கு மாற்றும் நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், தற்போது மதிய உணவுக் கூடங்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தில் கிடைக்காது என்ற நிலை உருவாகும் என்றால், அனைத்து மதிய உணவுக் கூடங்களும் மீண்டும் விறகையே எரிபொருளாகப் பயன்படுத்தும் நிலைமைக்குத் தள்ளப்படும்.
விறகுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகையினால் சமையல் கூடங்களின் தூய்மை கெடுவதும், விறகுகள் இருப்பில் வைக்கப்படும்போது திருடப்படுவதும், மிக அரிய தருணங்களில் தீ விபத்துக்கான வாய்ப்புகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது. அதனால், சத்துணவுக் கூடங்களில் உணவுத் தயாரிப்புக்கு அளிக்கப்படும் எரிவாயு உருளைக்குத் தொடர்ந்து மானியம் அளிக்கப்படுவதுதான், தூய்மையான சமையல் கூடத்தை உறுதிப்படுத்தி, விரைவான சமையலை சாத்தியமாக்கும்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளைக் கட்டுவதில் முனைப்பு காட்டுவதைப்போல, பள்ளிகளில் மதிய உணவுக் கூடத்தைத் தூய்மையாக வைத்திருக்க, அனைத்து சமையல் கூடங்களையும் எரிவாயு இணைப்பு பெற்றதாக மாற்றுவதும், தொடர்ந்து மானிய விலையில் எரிவாயு உருளைகளை வழங்குவதும் மத்திய அரசின் கடமை.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் சிறார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை மத்திய அரசே நிர்ணயிக்கலாம். மானியத்தால் ஏற்படும் இழப்பை வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளின் விலையில் ரூ.1 அதிகப்படுத்தி ஈடுகட்டலாம். கல்வி வரி (எஜுகேஷன் செஸ்) போல சிறார்களின் மதிய உணவுக்கான வரியாக அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
ஒரு குழந்தைக்கான உணவு தயாரிப்புச் செலவு ரூ.3.85 என்பதுகூட மிக மிகக் குறைவு. குழந்தைகள்தான் இந்தியாவின் வருங்காலச் செல்வங்கள். ஊட்டச்சத்து குறை இல்லாத சிறார்கள்தான் வருங்கால வலிமையான பாரதத்தை உறுதி செய்ய முடியும்.÷
எரிபொருள் மட்டுமல்ல, சிறார் உணவுக்கான எந்த மானியத்தையும் மத்திய, மாநில அரசுகள் குறைக்கக் கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.