தலையங்கம்

சீனாவால் வந்த தொல்லை!

மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 1,624 புள்ளிகள் இறக்கம் கண்டு, 25,741 புள்ளிகளில் நிலை கொண்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு மதிப்பும் மளமளவென சரிந்ததன் விளைவாக, ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்கு மதிப்பு சரிவடைந்தது.

ஆசிரியர்

மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 1,624 புள்ளிகள் இறக்கம் கண்டு, 25,741 புள்ளிகளில் நிலை கொண்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு மதிப்பும் மளமளவென சரிந்ததன் விளைவாக, ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்கு மதிப்பு சரிவடைந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த அளவுக்குப் பங்கு மதிப்பு சரிவடைந்திருப்பது இப்போதுதான். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும், 2 ஆண்டுகளில் காணாத அளவுக்கு ரூ.66.65-க்குச் சரிந்தது.
 இருப்பினும், இது இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். இது தாற்காலிகமானது, விரைவில் இந்த நிலை மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 அதேபோன்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனும், இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாகவே இருக்கிறது. எந்த ஏற்றத் தாழ்வையும் எதிர்கொள்ளும் அளவுக்குப் போதுமான அன்னியச் செலாவணி கையிருப்பு (38,000 கோடி அமெரிக்க டாலர்) உள்ளது. தேவையான தருணத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 தற்போதைய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் சீனா. பொருளாதார மந்த நிலையும், ஏற்றுமதியில் பின்தங்கியிருக்கும் நிலையும் அங்கு நெருக்கடியைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிக்கப் பல விதங்களிலும் சீனா முயன்று வருகிறது. சீனப் பொருளாதாரம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சீனாவின் ஏற்றுமதியில் மந்த நிலை காணப்படுகிறது. அதை மாற்றுவதற்காக அமெரிக்க டாலருக்கு நிகரான சீன நாணயமான யுவானின் மதிப்பை கடந்த ஒரு வாரத்தில் 2 முறை குறைத்திருக்கிறது. அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரித்துவிட முடியும் என்பது சீனாவின் திட்டம்.
 யுவானின் மதிப்பைக் குறைத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. வளர்ச்சியைக் காட்டுவதற்காக யுவானின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி வைத்திருந்தது சீனா. இப்போது யுவானை அமெரிக்க டாலர் போன்று சர்வதேச நாணயமாக மாற்றும் முயற்சியில் அது இறங்கியிருக்கிறது. அதன் முதல்படியாக யுவானின் மதிப்பை சந்தை தீர்மானித்துக் கொள்ளட்டும் என்கிற முடிவை நோக்கி சீனா நகர்ந்திருப்பதன் விளைவுதான் யுவானின் மதிப்பு குறைப்பு.
 யுவானின் மதிப்புக் குறைப்பால் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சீனாவுடன் போட்டி இல்லாத பொருள்களைப் பொருத்தவரை நமது ஏற்றுமதியாளர்களுக்கு இது சாதகமாக இருக்கக் கூடும். ஆனால், குறைந்த விலையிலான சீனப் பொருள்கள் ஏற்கெனவே இந்தியத் தயாரிப்பாளர்களைக் கடுமையாக பாதித்திருக்கிறது. இப்போது நாணய மதிப்பும் குறைந்த நிலையில் உலோகங்கள், வாகன டயர்கள், ஜவுளி போன்றவற்றை ஏற்றுமதி செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதன் தொடர் விளைவாக வங்கியில் பெற்றிருந்த கடனை அடைக்க முடியாமல் வாராக் கடன் அதிகரிக்கக் கூடும். மத்திய அரசு இறக்குமதிக்கான வரியை அதிகரித்து, சீனப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதைத் தடுக்க முற்பட்டாலும்கூட எந்த அளவுக்கு நிலைமை சமாளிக்கப்படும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
 கடந்த மூன்று வாரத்தில் சீனாவின் பங்குச் சந்தை 3 லட்சம் கோடி டாலர் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், ஒரே நாளில் நமது பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி மீண்டும் ஏற்றம் காணும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவதைப் போன்றே, உலகம் முழுவதிலும் அடுத்த நாளே பங்குச் சந்தை மிக மெல்ல ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த நிலையிலும்கூட, சீனாவின் பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியிலேயே இருக்கிறது. சீனா மீளவே இல்லை.
 இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.66.10 ஆக உயர்ந்தது. சிங்கப்பூர், தென் கொரிய பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தையிலும் 290 புள்ளிகள் அதிகரித்தன. ஆகவே, இந்த வீழ்ச்சியால் பெரிதும் கவலைப்பட வேண்டியதில்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.
 தற்போதைய பங்குச் சந்தை வீழ்ச்சியால் தாமிரம், அலுமினியம் சார்ந்த தொழில்கூடங்களின் பங்குகள் மிகப் பெரும் வீழ்ச்சி பெற்றுள்ளன. இதனால், இந்தப் பொருள்களின் விலை இந்தியாவில் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும், இது கட்டுமானத் துறைக்கு சாதகமாக மாறும் என்றும் சொல்லப்படுகிறது.
 சீனாவின் பொருளாதாரச் சிக்கல்கள் மட்டுமன்றி, பெட்ரோலிய பொருள்களின் விலை கடும் வீழ்ச்சி கண்டதும் மற்றொரு கூடுதல் காரணம் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் விலை ஒரு பீப்பாய் 40 டாலராக குறைந்திருப்பதும் தற்போது பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்குக் காரணம். இன்னும்கூட, பெட்ரோலிய பொருள்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது. ஆகவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும். பணவீக்கம் குறையும்.
 மும்பை பங்குச் சந்தை படுவீழ்ச்சி கண்ட நாளில்தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்குகள் 10% விற்பனை செய்யப்பட்டன. ஒரு பங்கின் விலை ரூ. 387 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தேவைக்கு மேலாகவே கூடுதல் விண்ணப்பங்கள் வந்தன. 24.28 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
 ஒரு நாடு தனது பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், அதன் தோல்வியை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாகிலும் உலக நாடுகள் அதனதன் சக்திக்கு ஏற்ப ஏற்க வேண்டிய கட்டாயச் சுமை தலையில் வந்து விழுகிறது. உலகமயமாக்கலின் சாபம் இது!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

SCROLL FOR NEXT