தலையங்கம்

ஏன் தடை செய்ய வேண்டும்?

நாடு முழுவதிலும் ஆங்காங்கே சமணர்கள் (ஜெயின் சமூகத்தினர்) பெருந்திரள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கை, "சந்தாரா' அல்லது "சல்லேகனா' என்ற உயிர்த் துறத்தல் சடங்குக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஆசிரியர்

நாடு முழுவதிலும் ஆங்காங்கே சமணர்கள் (ஜெயின் சமூகத்தினர்) பெருந்திரள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கை, "சந்தாரா' அல்லது "சல்லேகனா' என்ற உயிர்த் துறத்தல் சடங்குக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்பதுதான். நீதிமன்றம் இத்தகைய உயிர்த்துறத்தல், தற்கொலைக்குச் சமமானது; ஆகவே, சந்தாரா சடங்கு தடை செய்யப்படுவதாக கூறியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள சமணர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது. அவர்களது மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதாகக் கருதுகிறார்கள்.
 சமண (ஜெயின்) மதம், மனிதப் பிறவியை முன்வினைப் பயன், கர்மவினைத் தொடர் எனக் கருதுகிறது. அந்த வினைப் பயனைக் களைவதற்காக ஆசையை, உடைமையை, உறவுகளை மட்டுமல்ல உயிரைத் துறத்தலும் ஒரு நெறியாகக் கையாளப்படுகிறது. ஆசையை துறக்கும்போதும், உடைமைகளைத் துறக்கும்போதும் எவ்வாறு சடங்குகளுடன் செய்யப்படுகிறதோ அதே சடங்குகள் சந்தாரா-வுக்கும் உண்டு. தனித்து ரகசியமாக நடத்தப்படுவதில்லை.
 தற்கொலையும் உயிர்த்துறத்தலும் நீதிமன்றத்தின் பார்வையில் ஒன்றாகத் தெரிந்தாலும், சமணர்கள் பார்வையில் இவை வேறானவை. இந்த இரண்டையும் ஒன்றாகக் கருதக்கூடாது என்பதே அவர்களது கோரிக்கை. "எனக்கு உணவு பிடிக்கவில்லை' என்பதற்கும் "நான் பசியாறி விட்டேன் போதும்' என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் தற்கொலையும், உயிர்நீத்தலும். ஏதோ ஒரு காரணத்தால் வாழ்க்கையை வாழப் பிடிக்காமல் செய்துகொள்ளப்படும் தற்கொலையும், வாழ்ந்து நிறைவு அடைந்து விடைபெறுகின்ற சமணர்களின் சந்தாரா அல்லது சல்லேகனா சடங்கும் நிச்சயமாக ஒன்றானவை அல்ல.
 வாழ்வில் நிறைவடைந்தவர்கள் மகிழ்வோடு, உணவைத் துறந்து, உண்ணாநோன்பு இருந்து, மெல்ல உயரிய ஆன்ம விடுதலை பெறுகிறார்கள் என்பதே சமணர் நோக்கு. இது தமிழர் பண்பாட்டிலும் இருந்துள்ளது. இதற்கு தமிழில் "வடக்கிருத்தல்' என்று பெயர். சில தமிழ் மன்னர்கள்கூட வடக்கிருந்து உயிர்த் துறந்திருக்கிறார்கள்.
 நீதிமன்றம் ஏன் இந்தச் சடங்கைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு சில காரணங்கள் உண்டு. இந்த சந்தாரா சடங்கை மேற்கொள்பவர்களில் அதிகமானோர் பெண்களாக இருக்கிறார்கள். இவர்களில் சிலர் முதியோர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே, கணவனின் இறப்புக்குப் பின் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைப் போன்று, பெண்கள் மீதான சமூகத் திணிப்பாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணம்தான் நீதிமன்றத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆகவே இந்த வழக்கம் காலத்துக்கு ஒவ்வாதது என்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
 உடன்கட்டை ஏறுதல் என்பது பெண்கள் மீதான அன்றைய சமூகத்தின் திணிப்பு; அது மதம் சார்ந்த சடங்கு அல்ல. அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்வில், ஒரு விதவைப்பெண் தனது குடும்பத்து ஆண்களாலேயே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதைக் காண, கேட்க நேர்ந்ததால், திணிக்கப்பட்ட சடங்குதான் உடன்கட்டை ஏறுதல். சமயமோ, பண்பாடோ அதை வலியுறுத்தவில்லை. சமூகத்தின் அப்பட்டமான திணிப்பு. அதனால் அதை சட்டம் தடுத்தது.
 ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தங்களைச் செய்த தலைவர்கள், விதவை மறுமணத்தை முன்வைத்தனர். பெண்கள் தனித்து வாழும் பொருளாதார வசதிக்கான வாய்ப்புகளைக் காட்டினர். அந்த வழக்கத்தை நீதிமன்றமும் குற்றமாகக் கருதி தடை செய்தது.
 உண்ணாநோன்பு யார் மீதும் திணிக்கப்பட முடியாது. ஒருவரை பட்டினி போட்டு சாகடித்தல் சாத்தியம். ஆனால், அனைவருக்கும் முன்னால் ஒரு சடங்கு நடத்தி, அவர் உண்ணாநோன்பை தொடங்கும்படி கட்டாயப்படுத்துதல் சாத்தியமற்றது.
 சமண மதத்தில் துறவு பூணும் பெண்களுக்கு ஒரு சடங்கு உண்டு. அவர்களுக்கு அனைத்து அணிகலனையும் பூட்டி, அம்மதம் சார்ந்தவர்கள் சூழ, ஊர்வலமாக அழைத்து வருவார்கள். இவர்களது தலைமுடி, துறவுபூணும் வேளையில் மழிக்கப்படுவதில்லை. அவர்களைச் சூழ்ந்து வரும் பெண்களே ஆளுக்கு ஒரு முடியை வேரோடு இழுத்து எறிவார்கள். இந்தச் சடங்கை நீதிமன்றம் தடை செய்ய முடியுமா?
 ஹிந்து மதத்தில், கோயில்களில் அலகு குத்திக்கொள்ள நேர்ந்துகொள்கிறார்கள். தொங்கலில் வருவதாக வேண்டிக்கொள்கிறார்கள். அவ்வாறே மிக நீளமான வேல் கம்பிகளை வாயிலும் நாக்கிலும் குத்திக்கொள்கிறார்கள். வண்டிகளில் சாரம் கட்டி, தங்கள் முதுகில் நுழைக்கப்பட்ட வளையங்களில் தொங்கி வருகிறார்கள். இதை நீதிமன்றத்தால் தடை செய்ய முடியுமா?
 இஸ்லாம் மதத்தில், மொஹரம் நாளில் தங்களைத் தாங்களே கத்தியால் தாக்கிக் கொள்ளும் "மாத்தம்' என்கிற வழக்கம் நிலவுகிறது. இதில் அவர்கள் உடலில் காயமடைந்து ரத்தம் பெருகுவதை விரும்பி ஏற்கிறார்கள். நீதிமன்றம் இதை தடை செய்யவா முடியும்?
 அண்மையில் தற்கொலை செய்துகொள்வது குற்றமல்ல என்று நீதிமன்றம் அறிவித்ததால், இப்போது அரசு ஊழியர்கள் பலரும் மேலதிகாரி மீது குறை சொல்லியும், வேலைப்பளு எனக் கூறியும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஒரு டாக்டரே திருச்சியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதற்குக் காரணம், தற்கொலைக்கு முயன்ற அரசு அலுவலர் பணியைத் தொடரத் தகுதியற்றவர் என்று பணிநீக்கம் செய்யப்படும் வாய்ப்பு இல்லை. தற்கொலை குற்றம் இல்லை என்றாகிவிட்டதே.
 நீதிமன்றம் "சந்தாரா'வை தற்கொலை என்றே தவறாகப் புரிந்துகொண்டாலும், அரசு ஊழியரின் தற்கொலையை குற்றமாகக் கருதாதபோது, ஆன்மிகத்தினால் உயிர் துறத்தலை ஏன் குற்றமாகப் பார்க்க வேண்டும்; ஏன் தடை செய்ய வேண்டும்?
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT