தலையங்கம்

இந்தி - ஜப்பான் பாய்... பாய்...

பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் கடந்த ஒரு மாதத்தில் நான்கு முறை சந்தித்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாநாட்டிற்காக சென்றிருந்தபோது பாரீஸிலும், அதைத் தொடர்ந்து துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களிலும் சந்தித்த இரு நாட்டுப் பிரதமர்களும் இன்று தில்லியிலும் சந்தித்துப் பேச உள்ளனர். அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும்

ஆசிரியர்

பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் கடந்த ஒரு மாதத்தில் நான்கு முறை சந்தித்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாநாட்டிற்காக சென்றிருந்தபோது பாரீஸிலும், அதைத் தொடர்ந்து துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களிலும் சந்தித்த இரு நாட்டுப் பிரதமர்களும் இன்று தில்லியிலும் சந்தித்துப் பேச உள்ளனர். அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் ஜப்பானியப் பிரதமர் அபே மூன்று நாள்கள் இந்தியாவில் தங்கி இருப்பார்.
 ÷இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான தொடர்பு இருந்தாலும்கூட, ராஜீய ரீதியிலான உறவு நெருக்கமாக இருந்ததாகக் கூறிவிட முடியாது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானியர்களுடன் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்ததாலும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பிரிட்டனுக்கு எதிரான அணியில் இருந்ததாலும் நேருவின் தலைமையிலான இந்தியா ஜப்பானுடனான நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. மேலும், அன்றைய சோவியத் யூனியனுடன் இந்தியாவுக்கு இருந்த நெருக்கமும்கூட, அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானுடன் இந்தியா நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குத் தடையாக இருந்திருக்கக் கூடும்.
 ÷கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருந்தாலும்கூட, பெரிய அளவில் வர்த்தகப் பரிமாற்றம் அதிகரித்துவிடவில்லை. பல ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைத்தன என்றாலும்கூட, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் என்று எடுத்துக்கொண்டால், சொல்லிக் கொள்ளும்படியானதாக இல்லை. 2019-20 நிதியாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கே கூட வெறும் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அவ்வளவே!
 ÷ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் சில அடிப்படை பலவீனங்கள் இருந்தன. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளிடம் படுதோல்வி அடைந்து, அணுகுண்டு பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், விரைவிலேயே பொருளாதார வல்லரசாக முடிந்தது என்பது உண்மை. ஆனால், அரசியல் ரீதியாக, அதன்மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் அமெரிக்காவை அண்டி இருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது ஜப்பான். அதனால், ஒரு வலிமையான அரசியல் சக்தியாக ஜப்பானால் உருவெடுக்க முடியவில்லை.
 ÷இந்தியாவைப் பொருத்தவரை, அணிசாரா நாடாகவும், சோஷலிச நாடாகவும் இருந்த இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருந்தும்கூட, மற்ற நாடுகளால் மதிக்கப்படும் அரசியல், பொருளாதார, ராணுவ சக்தியாக வளர முடியவில்லை. ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் இருந்த பலவீனங்கள், ஆசியாவில் தனிப்பெரும் சக்தியாக சீனா வளர உதவின.
 ÷இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பல நெருடலான பிரச்னைகள் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதையும் மீறி, சீனாவை எதிர்கொள்ளவும், ஆசியாவில் தாங்களும் தவிர்க்க முடியாத சக்திகளாகத் திகழவும் இந்தியாவும் ஜப்பானும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
 ÷பிரதமர் அபேயின் இந்திய விஜயம் மூன்று முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதாகவோ, அல்லது குறைந்தபட்சம் கருத்துவேறுபாடுகளை அகற்றுவதாகவோ அமையும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக, நீண்ட நாட்களாக முடிவு காணப்படாமல் இருக்கும் இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம், இந்த விஜயத்திலாவது தீர்வு காணப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது.
 ÷அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருக்கும் நிபந்தனைகளை ஜப்பானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால், அணு விபத்துக்களின் பாதிப்புகளை அனுபவித்து உணர்ந்திருப்பதால், மேலும் கடுமையான விதிகளை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் நிர்பந்திக்கிறது. ஒப்பந்தத்தில் கையாளப்படும் வார்த்தைகள் சிலவற்றால்தான் இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமிடப் படாமல் தொடர்கிறது.
 ÷ஜப்பானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்தால் மட்டும்தான், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையிலும் இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க முடியும். உலகிலேயே, மிகவும் பாதுகாப்பான, தரமான மின் உலைகளைத் தயாரிப்பதில் ஜப்பானியர்கள்தான் சமர்த்தர்கள். அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே, ஜப்பானிடமிருந்து நாம் அணு உலைகளைப் பெற முடியும். இந்த முடிச்சை இந்திய - ஜப்பான் பிரதமர்கள் இந்த முறையாவது அவிழ்த்து வெற்றி காண்பார்களா என்பதை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
 ÷மும்பைக்கும் ஆமதாபாதுக்கும் இடையே "புல்லட் ரயில்', தில்லி - மும்பை தொழில் பாதை, இந்தியாவையும் மியான்மரையும் இணைக்கும் நெடுஞ்சாலைகளும், பாலங்களும் என்று பல ஒப்பந்தங்கள் பிரதமர் அபேயின் இந்த இந்திய விஜயத்தில் முன்னுரிமை தரப்பட்டுள்ளன. இவற்றில் எவையெல்லாம் வெற்றிகரமாக முடிவு காணப்படும் என்பதைப் பொருத்து இந்த விஜயத்தின் வெற்றி கணிக்கப்படும்.
 ÷பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றவுடன் அரசு முறைப் பயணமாக விஜயம் செய்த முதல் நாடு ஜப்பான். அவரது ஜப்பானிய விஜயத்திற்குப் பிறகு பல ஜப்பானியத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருக்கின்றன. ஆனால், வர்த்தகம் அதிகரிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். மாறிவிட்ட சர்வதேசச் சூழலில் நட்புறவு என்பதன் பொருள், அதிகரித்த வர்த்தகப் பரிமாற்றம். டோக்கியோ - தில்லி கூட்டணியின் உண்மையான வெற்றி தோல்வி அதில்தான் அடங்கி இருக்கிறது!
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT