தலையங்கம்

கடல், மீன், கைது!

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர்

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இரு பிரிவுகளாக திரிகோணமலை, காங்கேசன்துறை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் மோடியின் முன்னெடுப்பில், மார்ச் 5-ஆம் தேதி இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைக்கான நாளை இலங்கை அரசு தற்போது தள்ளிவைத்துள்ளது. தங்களது 100 நாள் முன்னுரிமைத் திட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம் பெறவில்லை என்பதால், பிறகு நடத்தலாம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

உண்மை அதுவல்ல. இலங்கையின் வடக்கு மாகாணத் தமிழ் மீனவர்கள் தற்போது சிறீசேனாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். சிறீசேனா அரசு பதவியேற்ற பிறகு, தமிழக விசைப்படகுகளின் (டிராவ்லர்) எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் இலங்கைக் கடற்படை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை இலங்கை அமைச்சரும் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கை மீனவர்களின் எதிர்ப்புகளால்தான் தற்போது கைது நடவடிக்கையை தீவிரமாக்கியுள்ளனர்.

மேலும், தற்போது அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 81 படகுகளும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் குறைகிறது. அப்படியே திரும்ப வழங்கப்பட்டாலும், நம்மூர் காவல்நிலையத்தில் வெறும் கூடாக நிற்கும் வாகனங்கள் போலத்தான் கிடைக்கும் என்பதையும் ஊகிக்கலாம்.

மார்ச் 13-ஆம் தேதி இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பிரச்னை குறித்துப் பேசுவார் என்றும், ஓர் இணக்கமான சூழலுக்கு வித்திடுவார் என்றும் நம்பிக்கை இருந்தாலும், இந்த விவகாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்போர் தமிழக மீனவர்களும், இலங்கை வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மீனவர்களும்தான். இலங்கை வாழ் சிறுபான்மைத் தமிழர்களின் வாக்குகள்தான் ராஜபட்சவை வீழ்த்த உதவியது என்பதை உணர்ந்திருக்கும் சிறீசேனா அரசு, இலங்கை மீனவர்களுக்குத்தான் அதிக முன்னுரிமை தரும். இலங்கை மீனவர்களின் சொல்தான் அம்பலம் ஏறும்.

ஆகவே, இந்த விவகாரத்தில், இந்தியா - இலங்கை அரசின் முடிவைக் காட்டிலும் அதிமுக்கியமானது வடக்கு மாகாணத் தமிழ் மீனவர்களின் உணர்வுதான். அவர்கள் முன்வைக்கும் இரண்டு தீவிரமான புகார்கள்: எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழக மீனவர்கள் மிக அதிகமான விசைப்படகுகளைப் பயன்படுத்தி பாக் நீரிணைப் பகுதியில் மீன் வளத்தை அழிக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் பொதுவான கடல் பரப்பில் 70 நாள்களுக்கு மட்டுமே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். மற்ற காலங்களில் அவர்கள் வங்கக் கடலின் மேற்பரப்பில் மீன்பிடித்துக் கொள்ளட்டும்.

"அண்ணன் தம்பிகளான இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே விசைப்படகுகள்தான் பிரச்னையாக இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தினாலே போதும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்' என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

விசைப்படகுகளை உடனடியாகக் குறைத்துக் கொள்ள முடியாது என்று கூறும் தமிழக மீனவர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டு கால அவகாசம் கோருகிறார்கள். பொது கடல் பரப்பில் மீன் பிடிப்பது எத்தனை நாள் என்பதிலும் உடன்பட மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 5,000 விசைப்படகுகள் இருப்பதாகவும், இவற்றில் 2001 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2,500 படகுகள் இலங்கைக் கடல் பரப்பின் வளத்தை முற்றிலுமாக சுரண்டி விட்டன என்பதும் இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இலங்கை மற்றும் தமிழ்நாடு தரும் புள்ளிவிவரங்களின்படி, இந்த 10 ஆண்டு காலத்தில், இக்கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் ஆண்டுதோறும் ஒரு லட்சம் டன்னுக்கு அதிகமான மீன்களைப் பிடித்துள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் இதே காலகட்டத்தில் ஆண்டுதோறும் அதிகபட்சம் 10,000 டன் மீன்கள்தான் பிடித்துள்ளனர்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிறகு, இலங்கை மீனவர்கள் மீண்டும் தீவிர மீன் பிடித்தலைத் தொடங்கியுள்ளதால் படிப்படியாக அளவு உயர்ந்து, தற்போது ஆண்டுக்கு 40,000 டன் மீன் பிடிக்கிறார்கள். தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்கும் அளவும் 1.5 லட்சம் டன் வரை உயர்ந்துள்ளது. அதே கடல் பரப்பு, அதே மீன்வளம். இரு தரப்பும் தங்கள் மீன்பிடிப்பை அதிகரித்துள்ளன.

இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதென்பது, இந்தியா - இலங்கை இரு நாடுகளுக்கு இடையிலான ராஜீய விவகாரம் என்பதைக் காட்டிலும், நடைமுறைக்கு சாத்தியமான இரு தரப்பு மீனவர்களின் உடன்பாட்டின் மூலம் எளிதில் தீர்வு காணும் வாய்ப்புகள் உள்ளன. இதற்குத் தடையாக இருப்பது விசைப்படகுகள் மட்டுமே.

அன்றாடப் பிழைப்பாக கடலுக்குச் செல்லும் மீனவர்களின் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும். விசைப்படகு உரிமையாளர்களால் கடல் இல்லாமல் வாழ முடியும். ஆனால், மீனவர்களால் கடலன்னை இல்லாமல் வாழ்தல் இயலாது.

இந்த விவகாரத்தை ஒட்டுமொத்த மீனவர் பிரச்னையாக மாற்றி தீர்வு காண முடியாமல் குழம்புவதைக் காட்டிலும், விசைப்படகு உரிமையாளர் நலன், மீனவர் நலன் என்று பிரித்துப் பார்ப்பதன் மூலம், இலங்கை மீனவர்களுடன் இணக்கமான முடிவைக் காணலாம். இல்லையென்றால், தமிழக மீனவர்கள் கைதாகிக் கொண்டிருப்பதற்கு முடிவே ஏற்படாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT