தலையங்கம்

விலக வேண்டும் பி.சி.சி.ஐ.!

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் 2 ஆண்டுகளுக்குத் தடை

ஆசிரியர்

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூதாட்டத்தில் தொடர்புடைய சிஎஸ்கே அணித் தலைவரின் மருமகன் மெய்யப்பன், ஆர்ஆர் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா இருவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) செயல்பாடுகளில் பங்கேற்க முடியாதபடி அவர்களுக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 ÷கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழு அளித்துள்ள இத்தீர்ப்பு, கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்தழிக்கும் பணியின் தொடக்கம்தான் என்றாலும், வெறும் கண் துடைப்புத் தீர்ப்பு என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை, இவர்களை நீதியின் முன் நிறுத்தக் கூடிய வலுவான ஆதாரங்கள் இல்லாததும் காரணமாக இருக்கக் கூடும்.
 ÷ஓர் அணியின் வெற்றி - தோல்வி, ஒரு வீரரின் விளையாட்டு குறித்து ரசிகர்கள் பந்தயம் வைத்து சூதாடுவது அதிர்ஷ்டம் சார்ந்ததாகவும், வீரர்களின் திறன் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை சார்ந்ததாகவும் அமையும். ஆனால், அணிகளை நடத்துபவர்களே சூதாட்டத்தில் இறங்கினால், பந்தய லாபத்துக்கு ஏற்ப ஆட்டத்தில் தோல்வியை ஏற்படுத்த அல்லது திறனில்லா ஆட்டத்தைப் புகுத்த முடியும். விளையாட்டு வீரர்கள் இந்த சூதாட்ட உரிமையாளர்களின் கைப்பாவையாக விளங்குவார்கள்.
 ÷இவர்கள் சொல்லும்படி செயல்படாவிட்டால் அடுத்த முறை இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். ஏனென்றால், இந்த அணி உரிமையாளர்களுக்கு பிசிசிஐ-இல் மிகப் பெரும் செல்வாக்கு உள்ளது. ஆகவே, இவர்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துக்காக மட்டுமே அணியை, மாற்று அணியை ஆட வைத்தார்கள். ஆட்டிப் படைத்தார்கள். இவர்களது சூதாட்டம் ஊகத்தாலும், அதிர்ஷ்டத்தை நம்பியும் நடத்தப்படவில்லை. திட்டமிட்ட சதி.
 ÷இந்தத் தீர்ப்பும்கூட, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும், அணிக்கும் குறைந்தபட்ச தண்டனையையே வழங்கியிருக்கிறது. கண்ணியமிக்க ஒரு விளையாட்டாக, கிரிக்கெட்டுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டுமானால் இந்தத் தண்டனை போதாது.
 ÷சில நூறு ரூபாய் பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சில மாதங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அனுமதி இல்லாத லாட்டரி சீட்டு விற்றவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், பல கோடி ரூபாய்க்கு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தின் சூத்திரதாரிகளுக்கு பிசிசிஐ செயல்பாட்டில் பங்கேற்க ஆயுள் தடை, கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்க 5 ஆண்டுகளுக்குத் தடை என்றால், இவ்வளவுதான் தண்டனையா?
 ÷மெய்யப்பன் பணம் கட்டி சூதாடியுள்ளார். அவரது துரதிருஷ்டம் அவர் ரூ.60 லட்சம் வரை இழந்து இருக்கிறார் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது மெய்யப்பன் மீது பரிதாபம் ஏற்படுவதற்கா? அல்லது இந்த சூதாட்டத்தில் ஒரு தனிநபருக்கு எந்த அளவுக்கு நட்டம் ஏற்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டவா?
 தெரியவில்லை. இந்த துரதிருஷ்டம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
 ÷"தான் பிரிட்டிஷ் குடிமகன் என்றும், இந்தியாவில் பந்தயம் கட்டி விளையாடுவது தவறு என்று தனக்குத் தெரியாது' என்றும் ராஜ் குந்த்ரா கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை வெறும் தடை மட்டுமே!
 ÷இந்த விசாரணைக் குழுவால் 2013ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்ற, வெளிப்படையாகத் தெரியவந்த கிரிக்கெட் சூதாட்டத்தை மட்டுமே விசாரிக்க முடிந்தது. அவர்களது வரையறைக்குள் அவர்கள் செயல்பட்டார்கள். ஐபிஎல் சூதாட்டம் பற்றிய விசாரணை, கிரிக்கெட் வீரர்கள் இந்த சூதாட்டக்காரர்களின் பந்தய முதலீட்டுக்கு ஏற்ப, களத்தில் விளையாடத் தொடங்கிய நாள் முதலாகவே தொடங்கியிருக்க வேண்டும். இந்த இரு அணிகளும் இதுநாள் வரை கிரிக்கெட் மூலம் அடைந்த லாபம் எத்தனைக் கோடி என்பதைக் கணக்கிட்டு அவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கப்படவில்லை?
 ÷தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த இரு அணிகளுக்கான வெற்றிடத்தை நிரப்பப் புதிய அணிகளை சேர்த்துக் கொள்வது குறித்தும், இந்த இரு அணியின் வீரர்களைப் புதிதாக வருவோர் அப்படியே ஏற்றுக் கொள்வது குறித்தும் பி.சி.சி.ஐ. முடிவு செய்யும் என்று நீதிபதி லோதா விளக்கம் தந்துள்ளார். பி.சி.சி.ஐ வரும் 19-ஆம் தேதி இது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளது.
 ÷சூதாட்டத்தை நடத்தி, இந்த இரு அணிகளின் கிரிக்கெட் வீரர்களை மெய்யப்பனும், ராஜ் குந்த்ராவும் ஆட்டிப் படைத்தார்கள் என்பது வெளிப்படை. அவர்கள் சொன்னபடி வீரர்களும் விளையாடி இருக்கிறார்கள். இந்த சூதாட்டத்தில், இந்த அணியில் இடம் பெற்ற வீரர்கள், குறிப்பாக அணித் தலைவர்கள் யாருக்குமே தொடர்பு இல்லை என்று உறுதியாகச் சொல்வதற்கு இல்லை. ஆகவே, இந்த அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இரண்டு ஆண்டுகளுக்குத் தார்மிக அடிப்படையில் தாங்களாகவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் ஒதுங்கிக் கொள்வதே சுய தண்டனையாக இருக்கும்.
 ÷ஐபிஎல் போட்டிகள் முழுக்க முழுக்க வியாபாரம். ஆயினும், அரசுக்கு முழுமையான வரியும் கிடைப்பதில்லை. கிரிக்கெட் விளையாட்டுக்கும் களங்கம். பி.சி.சி.ஐ. உருவானது கிரிக்கெட் விளையாட்டுக்காக, வியாபாரத்துக்காக அல்ல. அதனால், ஐபிஎல் விவகாரத்திலிருந்து பி.சி.சி.ஐ. முற்றிலுமாக விலகிக் கொண்டு விடுவதுதான் சரியாக இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

SCROLL FOR NEXT