தலையங்கம்

தலைக்கவசம்!

யார் எடுத்துச் சொன்னாலும் மதிக்காதபோது, "தலையில ஒண்ணு போடு' என்று குட்டுகிற மாதிரியான அதிரடித் தீர்ப்பை

ஆசிரியர்

யார் எடுத்துச் சொன்னாலும் மதிக்காதபோது, "தலையில ஒண்ணு போடு' என்று குட்டுகிற மாதிரியான அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்: தலைக்கவசம் ஜூலை 1 முதல் கட்டாயம்.
 அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தத் தீர்ப்பில் விளக்கிச் சொல்லும் நீதிபதி என். கிருபாகரன், "தலைக்கவசம் அணியாதவர் வாகனத்தை, உரிமத்தைப் பறிமுதல் செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற தலைக்கவசத்தை வாங்கிய பிறகு ஒப்படையுங்கள்' என்று கூறியிருப்பது நடைமுறைச் சட்டத்துக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும்கூட, எவ்வளவுதான் சொன்னாலும் மதிக்க மறுக்கும் இந்தச் சமூகத்துக்கு இது தேவையே.
 இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்பது 2007-ஆம் ஆண்டிலேயே அமலுக்கு வந்த சட்டம். இருப்பினும், இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் பெருமளவு எதிர்ப்புக் காட்டியதாலும், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி காவல் துறையினர் கையூட்டு பெறுவதுதான் மேலதிகமாக நடக்கிறது என்று புகார்கள் எழுந்ததாலும், இந்த விவகாரத்தில் கண்டும் காணாமல் இருக்கும்படியாக காவல் துறைக்கு அரசு வாய்மொழி உத்தரவிட்டது.
 காவல் துறையும் கணக்கு காட்டும் நடவடிக்கையாக ஆங்காங்கே சில பேர் மீது மட்டும் தலைக்கவசம் அணியாததற்கு வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்து வந்தது.
 தலைக்கவசம் அணியாதவருக்கு அபராதம் என்ற சட்ட விதிமுறைக்கும் மேலாகச் சென்று, தற்போது வாகனம் பறிமுதல், ஓட்டுநர் உரிமம் பறிமுதல் என்று சொல்லப்பட்டிருப்பதன் மூலம், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை நீதிமன்றம் உருவாக்கியுள்ளது. இது போக்குவரத்து வாகன விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, நீதிபதியின் தனிப்பட்ட உத்தரவு என்பதாக சிலர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தபோதிலும்கூட, இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் இல்லாவிட்டால் எதையும் நடைமுறைப்படுத்த இயலாது.
 இந்த உத்தரவை அமல்படுத்துவதிலும்கூட, காவல் துறையில் போதுமான ஆள்கள் இல்லை என்றும், வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வருவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாகவும் முணுமுணுப்புகள் எழவே செய்யும். இருப்பினும், பொது நன்மை கருதி இத்தகைய சங்கடங்களை காவல் துறையும் பொதுமக்களும் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. தலைக்கவசம் அணியாததால் தமிழ்நாட்டில் நாள்தோறும் 17 பேர் இறக்கின்றனர் என்பதைக் கருதிப் பார்க்க வேண்டும்.
 குறைந்த விலையில் "அம்மா' குடிநீர் கிடைக்கச் செய்ததைப்போல, தமிழக அரசு குறைந்த விலையில் "அம்மா' தலைக்கவசம் கிடைக்கச் செய்தாலும் நன்று!
 இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக மருத்துவ சேவைக்கும் நிபந்தனைகள் விதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தலைக்கவசம் அணியாதவர்கள் விபத்தில் சிக்கும்போது, தலைக்காயம் ஏற்பட்டு இறப்பது போலவே, தலைக்கவசம் அணிந்தவர்களும்கூட தண்டுவடக் கழுத்து எலும்பு முறிவு, நரம்புகள் நசிவுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வேளையில் அவர்களுக்கு மருத்துவம் அளிக்க நரம்பியல் மருத்துவர் இருப்பதில்லை. சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய "பொன்னான நேரம்' வீணாகப் போகிறது.
 நரம்பியல் துறை சார்ந்த மருத்துவர்கள் இல்லாத நிலையில், வெறும் செவிலியர் அல்லது பயிற்சி மருத்துவர் உதவியில் முதலுதவி அளிக்கப்படும் அவலம்தான் அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கிறது. சாலை விபத்துகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்ட போதிலும், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் எலும்புச் சிகிச்சை மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாகவில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைதான்.
 அவசர உதவிக்கு 108 வந்து சேரும் வேகத்துக்கு மருத்துவர்கள் வந்து சேர்வதில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்த பிறகு, தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவர் வரும்போது, விபத்தில் காயமடைந்தவர் நிலைமை படுமோசமாகிவிடுகிறது.
 ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும், விபத்து சிகிச்சைப் பிரிவில் நரம்பியல் மருத்துவரும், எலும்புச் சிகிச்சை மருத்துவரும் எப்போதும் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம்தான் உத்தரவிட வேண்டும் என்பதில்லை. அரசே செய்துவிடலாம்.
 வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு ஏற்றதாக இந்தியச் சாலைகள் இல்லை. ஆகவே, நகர்ப்புறங்களில் மணிக்கு 40 கி.மீ. என்பதே போதுமான வேகமாக இருக்கும். அதையும் மீறி சாலையில் பறக்க நினைப்போரை, குறிப்பாக இளைஞர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் காவல் துறைக்கு இருக்கிறது.
 சென்னை நகர இளைஞர்கள் மூவர் ஒரே இரு சக்கர வாகனத்தில் அண்மையில் அதிவேகத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், நடைபாதையில் உறங்கிய ஓர் இளைஞர், 2 மூதாட்டிகள் மீது வாகனம் ஏறியதில் அவர்கள் இறந்தனர். இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
 ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று, நான்கு இளைஞர்கள் படுவேகமாகப் பறந்து செல்வது தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படும் பிரச்னை. இதைக் காவல் துறை கண்டிப்பதைக் காட்டிலும், பெற்றோர் கண்டிப்பதும் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை அதிக சக்தி கொண்ட வாகனங்களை வாங்கித் தராமல் தள்ளிப்போடுவதும் அவர்கள் சமூகத்துக்கு ஆற்றும் சேவையாகவே மதிக்கப்படும்.
 தலைக்கவசம் தலையை மட்டும்தான் காப்பாற்றும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT